For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காண்ட்ராக்ட் விவகாரம்: பொறியாளரை கடத்திச் சென்று தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளரை விளாத்திக்குளம் அதிமுக எம்.எல்.ஏவான என்.கே.பெருமாளும், அவரது மகனும் கடத்திச் சென்று தாக்கினர்.

விளாத்திக்குளம் வைப்பாறு வடிநிலப் பகுதி அலுவலகத்தில் உதவி பொறியாளராக இருப்பவர் சிவக்குமார்.

இவரிடம் சட்டசபை உறுப்பினர் என்.கே.பெருமாள், உணவுக்கு வேலை திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் கண்மாய் தூர் வாரும் பணியை காண்டிராக்டர் நந்தகுமாரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

இதற்கு பொறியாளர் சிவக்குமார் மறுத்துள்ளார். விதிமுறைப்படிதான் காண்டிராக்ட் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. பெருமாள், பொறியாளரைத் திட்டிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.

இந் நிலையில் விருதுநகரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றிருந்த சிவக்குமார் நேற்றிரவு அருப்புக்கோட்டை திரும்பினார்.

இரவு 9.30 மணிக்கு அருப்புக்கோட்டை பஸ் நிலையம் வந்த அவர் பஸ்சிலிருந்து இறங்கியபோது, காரில் காத்திருந்த சிலர் அவரை அடித்து உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு சென்றனர்.

புதூர் என்ற இடத்தில் காருடன், ஒரு ஜீப்பும் சேர்ந்து கொண்டது. பின்னர் காரிலேயே வைத்து சிவக்குமாரை, காண்ட்ராக்டர் நந்தகுமார், பெருமாளின் மகன் வரதராஜ பெருமாள், முருகன், மார்கண்டேயன் ஆகயோர் அடித்து உதைத்துள்ளனர்.

நேராக அவரை எம்.எல்.ஏ பெருமாளின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எம்.எல்.ஏ. முன்னிலையில் 25 வெற்றுத் தாள்களில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர்.

அதன் பின்னர் சிவக்குமாரை, எம்.எல்.ஏ. பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவரையும், அவரது செயற்பொறியாளர் மலையாளி, உதவி செயற் பொறியாளர் கணேசன் ஆகியோரை தீர்த்துக்கட்டி விடுவேன் என்றும் பெருமாள் மிரட்டியுள்ளார்.

பின்னர் தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு சிவக்குமாருக்கு உத்தரவிட்டுள்ளர். ஆனால் அதற்கு அடிபணிய சிவக்குமார் மறுத்து விட்டார்.

பின்னர் அவர்களிடம் கெஞ்சி செல்போன் மூலம் தனது மனைவியைத் தொடர்பு கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு திக்கித் திணறி கூறியுள்ளார்.

நிலைமையின் விபரீதம் அறிந்த சிவக்குமான் மனைவி புனிதா உடனடியாக போலீஸுக்குப் போன் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பெருமாளின் ஆட்கள், சிவக்குமாரை தெரு முனையில் கொண்டு வந்து இறக்கிவிட்டு விட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிவக்குமார் சிகிச்சை பெற்றார். அங்கு வந்த அருப்புக்கோட்டை காவல் நிலைய காவலர் ஒருவர், எம்.எல்.ஏ.வின் பெயரை புகாரில் கூறக் கூடாது என்று சிவக்குமாரிடம் மிரட்டியதாகத் தெரிகிறது

நந்தகுமாருடன் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பகை காரணமாகவே, தான் தாக்கப்பட்டதாக புகார் எழுதித் தருமாறும் சிவக்குமார் மிரட்டப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தற்போது நந்தகுமார் மீது மட்டும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிவக்குமாரின் மனைவி புனிதா, மதுரை பிராந்திய தலைமைப் பொறியாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் விரிவான தகவல்களை அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே மதுரை பிராந்திய தலைமைப் பொறியாளர் மீனாட்சி சுந்தரம், விருதுநகர் கோட்ட செயற் பொறியாளர் மலையாளி, உதவி செயற் பொறியாளர் கணேசன் ஆகியோரை சென்னைக்கு வருமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளதால் அவர்கள் சென்னை விரைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X