பாலாறு-ஆந்திரா மீதான தமிழக அரசின் வழக்கு:விசாரணை ஜூலைக்கு ஒத்திவைப்பு
டெல்லி: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. இதையடுத்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு அளித்த உறுதி மொழியை மீறி பாலாற்றின் குறுக்கே அணைகட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதை தொடரப் போவதாகவும் ஆந்திர முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாலாற்று நீரை மட்டுமே நம்பியுள்ளனர். ஆந்திர அரசின் திட்டத்தால் தமிழக வட மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே அணை கட்டும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்படப்பட்டிருந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகள் தொடரும் என ஆந்திர முதல்வர் கூறியுள்ளதால் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வரும் ஜூலை மாதத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தது.


Click it and Unblock the Notifications
