For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் டிவி ஆட்களை இழுக்கும் திமுக;ராஜ் டிவி பங்குகள் கிடு கிடு உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:திமுக ஆதரவுடன் ராஜ் டிவி தொடங்கவுள்ள கலைஞர் டிவிக்கு தேவையான ஆட்களை சன் டிவியிலிருந்து இழுக்க திமுக முடிவு செய்துள்ளது. இதற்கான வேலையில் 2 முக்கிய தலைவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

திமுகவின் ஆதரவு கிடைத்திருப்பதால் ராஜ் டிவியின் பங்கு மதிப்பு வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் முற்றியுள்ளது. முதலில் தயாநிதி மாறன் பதவியைப் பறித்த திமுக இப்போது தனக்கென தனி டெலிவிஷன் சானலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ராஜ் டிவியை அணுகியுள்ளது. ராஜ் டிவியும் திமுகவுக்கு கை கொடுக்க முன்வந்துள்ளது. ராஜ் டிவியின் உதவியுடன் திமுக தொடங்கவுள்ள டிவிக்கு கலைஞர் டிவி அல்லது கலை டிவி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த டிவியைத் தொடங்குவற்கான அனைத்து உதவிகளையும் திமுகவே செய்யவுள்ளது. மேலும் டிவி தொடங்குவதற்கான அனுமதி வழங்குவது உள்ளிட்ட பிற விஷயங்களை பார்த்து செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ராஜாவிடம் விடப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சன் டிவிக்குப் போட்டியாக இருந்த அனைத்து சானல்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

தயாநிதி மாறனின் நெருக்கடி காரணமாக விண் டிவியை யாருமே பார்க்க இயலாத நிலை ஏற்பட்டது. அதேபோல தமிழன் டிவிக்கும் நெருக்கடி கொடுத்து வீக் ஆக்கப்பட்டது.

பின்னர் ஜெயா டிவிக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த டிவி அதிமுக ஆதரவு டிவி என்பதால், பெரிய அளவில் தொல்லை கொடுக்க முடியவில்லை.

இதையடுத்து சன் டிவிக்கு அடுத்த டாப் டிவியான ராஜ் டிவியைக் குறி வைத்தார் தயாநிதி மாறன். ராஜ் டிவி நிறுவனத்தினர் தெலுங்கில் விஸ்ஸா என்ற பெயரில் புதிய டிவியைத் தொடங்கினர்.

அந்த டிவியைத் தொடங்க முறையான லைசன்ஸ் பெறவில்லை என்று கூறி ராஜ் டிவி மீது கடும் நடவடிக்கை பிரயோகிக்கப்பட்டது. ராஜ் டிவிக்கு வழங்கப்பட்டிருந்த டெலிபோர்ட் லைசன்ஸ் (நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமை) ரத்து செய்யப்பட்டது.

ராஜ் டிவி மீது தயாநிதி மாறன் கடுமையாக நடந்து கொண்டதால் ஒரு நாள் முழுவதும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ராஜ் டிவி நிறுவனத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு சாதனங்கள், வேன் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன

இவ்வாறு தொடர்ந்து அதிரடியாக ராஜ் டிவியைக் குறி வைத்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அந்த டிவி நிலை குலைந்தது. இதைத் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை தாய்லாந்திலிருந்து ஒளிபரப்பு செய்யும் நிலைக்கு ராஜ் டிவி தள்ளப்பட்டது.

இதேபோல விஜய் டிவியையும் நசுக்க சன் டிவி முயன்றது. விஜய் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை சன் டிவி பக்கம் இழுக்க முயன்றனர். இதில் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியை இயக்கி வந்த ராஜ்குமார் தனது குழுவினரோடு சன் டிவியில் ஐக்கியமாகி அங்கு அசத்தப் போவது யாரு என்ற பெயரில் அதே நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.

இந் நிலையில்தான் தினகரன் கருத்துக் கணிப்பால் கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பெரிதாக வெடித்தது.

தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர் இப்போது சன் டிவியையும் முற்றிலும் திமுக புறக்கணிக்க ஆரம்பித்து விட்டது. தங்களுக்கென தனி டிவி வேண்டும் என்று திமுக நினைத்தபோது கை கொடுக்க முன்வந்தார் ராஜ் டிவி நிறுவன அதிபர் ராஜேந்திரன்.

இதையடுத்து அவருடன் திமுக தலைமை ஆலோசனை நடத்தி கலைஞர் டிவியை உருவாக்க முடிவு செய்தது.

ஆனால் புதிய கலைஞர் டிவிக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராஜேந்திரன் கூறுகிறார். அவர் கூறுகையில், விரைவில் கலைஞர் டிவியைத் தொடங்குவோம். ஆனால் முதல்வர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று கலைஞர் டிவி தொடங்கப்பட மாட்டாது.

திமுகவுக்கும் இந்த டிவிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் சில திமுக தலைவர்கள் என்னிடம் பேசியுள்ளனர். அதை நான் மறுக்கவில்லை.

கலைஞர் டிவியில் செய்திக்கு முக்கியத்துவம் தரப்படும். இதுதவிர திரைப்படங்கள், தொடர்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெறும். செய்திகளை ஒளிபரப்பும் நேரம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

நடு நிலையுடன் கூடியதாக இந்த தொலைக்காட்சி விளங்கும். திமுக இந்த டிவிக்கு நிதியுதவி செய்யவில்லை. முதல்வரையும் நான் பார்க்கவில்லை.

புதிய தொலைக்காட்சிக்குத் தேவையான அனுமதி, நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி ஆகியவை பெறப்பட்டுள்ளது. தொலைக்காட்சியைத் தொடங்க வேண்டியது மட்டுமே பாக்கி என்றார் ராஜேந்திரன்.

ராஜ் டிவி தற்போது ராஜ் டிஜிட்டல் பிளஸ், விஸ்ஸா டிவி ஆகியவற்றை நடத்தி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சொந்த ஊராகக் கொண்ட ராஜேந்திரனுக்கு உறுதுணையாக அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் ஆகியோரும் ராஜ் டிவி குழுமத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, புதிய கலைஞர் டிவியை சிறப்பாக செயல்படுத்த திட்டமிட்டுள்ள திமுக இதற்காக சன் டிவியிலிருந்து சிலரை இழுக்க தீவிரமாக முயன்று வருகிறது.

முக்கியமான 3 நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு சன் டிவி குறி வைத்துள்ளது. இவர்களில் இருவர் செய்திப் பிரிவில் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு சலுகைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அவர்களிடமிருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லையாம்.

இதுதவிர சன் டிவிக்காக தொடர்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து தரும் தனியார் தயாரிப்பாளர்களையும் இழுக்க திமுக தரப்பு முயலுகிறது. மேலும், சன் டிவிக்கு விளம்பரம் தரும் சில விளம்பரதாரர்களையும் கலைஞர் டிவி பக்கம் திருப்பி விடவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த புதிய டிவியை இயக்கவுள்ள ராஜ் நிறுவனத்திடம் டெலிபோர்ட் வசதி இருப்பதால் அவர்களால் எந்த நேரத்திலும் டிவியை தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் டிவி நிகழ்ச்சிகள் தற்போது தாய்காம் செயற்கோள் மூலம் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதில் 2 டிரான்ஸ்பான்டர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

அதில் ஒன்றை இந்த புதிய டிவிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் ராஜ் டிவிக்கு திடீரென ஏற்பட்டுள்ள யோகம் காரணமாக அதன் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

மே 21ம் தேதி நிலவரப்படி ராஜ் குழுமத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 262.10 ஆக உள்ளது. மதுரையில் தினகரன் நாளிதழ் தாக்கப்பட்டபோது அதன் விலை ரூ. 188.65 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ் டிவியின் வரலாறு

ராஜ் டிவி ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் ஆரம்பத்தில் ராஜ் வீடியோ விஷன் என்ற பெயரில் வீடியோ கேசட் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தின் வசம் ஆயிரக்கணக்கான தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களின் வீடியோ உரிமைகள் உள்ளன. குறிப்பாக எம்.ஜிஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களின உரிமை ராஜ் வீடியோ விஷனிடம்தான் உள்ளது.

இப்போதும் கூட சென்னை அண்ணா சாலையில், மாலைமுரசு நாளிதழ் அலுவலகத்திற்கு அருகே ராஜ் வீடியோ விஷன் இயங்கி வருகிறது.

சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளில் ராஜ் டிவி பிறந்தது. தங்களிடம் உள்ள திரைப்படங்களின் பலத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ராஜ் டிவி குறுகிய காலத்தில் சன் டிவிக்கு அடுத்த இடத்தை அடைந்தது.

பின்னர் விஜய், ஜெயா என பல டிவிக்கள் வந்த பின்னரும் கூட சன்னுக்கு அடுத்த இடத்தில் தொடர்ந்து ராஜ் டிவியே இருந்து வருகிறது.

தனியார் தமிழ் தொலைக்காட்சிகளில் செய்திகளை நடுநிலையுடன் கொடுத்து வந்த ஒரே டிவி ராஜ் டிவி மட்டுமே.

ஆனால் நேரடி ஒளிபரப்பு வசதியை தயாநிதி மாறன் பறிமுதல் செய்த பிறகு ராஜ் டிவியில் செய்திகள் ஒளிபரப்புவது ரத்தாகி விட்டது. தற்போது செய்திகள் ஒளிபரப்பாகி வந்த அதே நேரத்தில், நியூஸ் டைம் என்ற பெயரில் வேறு வகையில் செய்திகள் ஒளிபரப்பாகி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X