For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்னக நதிகளை இணைக்க உடனடி நடவடிக்கைதேவை: பொள்ளாச்சி மகாலிங்கம் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூரு:தென்னக நதிகளை இணைக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தொழிலதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Pollachi Mahalingamபத்மபூஷன் விருது பெற்ற மகாலிங்கத்துக்கு கர்நாடக ஆளுநர் டி.என்.சதுர்வேதி தலைமையில் பெங்களூரில் பாராட்டு விழா நடந்தது.

இந் நிகழ்ச்சியில் சதுர்வேதி, ஆதிசுன்சுனகிரி மடத்தின் தலைவர் பாலகங்காதர சுவாமிகள், மத்திய திட்டத்துறை இணையமைச்சர் ராஜசேகரன், காங்கிரஸ் எம்.பி. ராஜசேகர மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் ஏற்புரை ஆற்றிய மகாலிங்கம்,

நதிகளை இணைக்கும் திட்டத்தை ஏற்குமாறு கர்நாடகமும் தமிழகமும் இணைந்து ஆந்திர, ஒரிஸ்ஸா அரசுகளை கேட்டுக் கொள்ள வேண்டும். மகாநதியின் 90 சதவீத நீர் வீணாக கடலில் கலக்கிறது, கோதாவரியின் 40 சதவீத நீரும், கிருஷ்ணா நதியின் 10 முதல் 15 சதவீத நீரும் கடலில் போய் கலக்கிறது. அதே போல காவிரி நீரும் கடலை சென்றடைகிறது.

முதலில் தென்னக நதிகளை இணைத்தே ஆக வேண்டும். நதிகள் இணைப்புக்கு மொத்தம் ரூ. 1.5 லட்சம் கோடியில் இருந்து 2 லட்சம் கோடி வரை செலவாகும். அதைக் கூட ஒட்டுமொத்தமாக செலவிட வேண்டியதில்லை. ஆண்டுக்கு ரூ. 20,000 கோடியை 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கினால் இத் திட்டம் சாத்தியமாகிவிடும்.

மத்திய அரசு கடனுதவியாக பல ஆயிரம் கோடிகளை அறிவிக்கிறது. நமக்கு கடன்கள் தேவையில்லை. இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கினால் போதும்.

மத்திய அரசு தனது தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு திட்டத்தை அமலாக்குவோம் என உறுதி தந்தது. ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன, 3 பட்ஜெட்டுகள் போட்டுவிட்டார்கள். ஆனால், நதிகள் இணைப்பு திட்டம் குறித்த அறிவிப்பே இல்லை.

அடுத்த பட்ஜெட்டிலோ அல்லது இடைக்கால பட்ஜெட்டிலாவது நதிகள் இணைப்புத் திட்டத்தை அறிவித்து அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை தென் மாநிலங்கள் தான் எடுத்துக் கூறி விரைவுபடுத்த வேண்டும்.

தமிழகமும் கர்நாடகமும் இணைந்து காவிரியை மேம்படுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும். கூர்கில் நேத்ராவதி, ஹாரங்கி நதிகளின் நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. அந்த நீர் முழுமையாக காவிரியை அடையச் செய்ய வேண்டும்.

இதைச் செய்தால் நதி நீர் வழி போக்குவரத்தும் கூட சாத்தியமாகிவிடும். திருச்சியில் இருந்து கொடுமுடி வரை, பவானியில் இருந்து ஒசூர் வரை நீர் வழி போக்குவரத்து சாத்தியம். ஜெனீவாவில் நதிகளை இணைத்து நீர் வழியை உருவாக்கியிருக்கிறார்கள். அதை நானே நேரில் பார்த்திருக்கிறன்.

ஓகேனகல்லில் 47 ஆண்டுகளுக்கு முன்பே மின் தயாரிப்பு நிலையம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அங்கு அணையை சிமெண்டால் கட்டுவதா அல்லது சுர்கியால் கட்டுவதா என இரு பொறியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அத்தோடு அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 47 வருடங்கள் கடந்த பின்னரும் எதுவும் நடக்கவில்லை.

அதே போல எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரேசில் இந்த விஷயத்தில் நமக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. அங்கு 50 சதவீத எத்தனாலும் 50 சதவீத பெட்ரோலும் கலந்து கார்கள் இயக்கப்படுகின்றன. 25 சதவீத டீசலும் 75 சதவீத எத்தனாலும் கலந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

ரூ. 100 கோடியை முதலீடு செய்தால் ஆயிரம் எத்தனால் தொழிற்சாலைகளை உருவாக்கிவிட முடியும். எரிசக்தி தேவையில் நாம் ஓரளவு தன்னிறைவு அடைய முடியும்.

நாட்டின் தேசிய மொழிகள் இருபத்து நான்குக்கும் ஒரு ஒத்த எழுத்துரு (script) வேண்டும். இது குறித்து மொழியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இப்போது தேசிய மொழியாக உள்ள இந்தியில் சமஸ்கிருதத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது. இந்த இந்தியை பிகார், லக்ளெனவில் இருப்பவர்களால் கூட புரிந்து கொள்ள இயலவில்லை.

ரோமன் இந்தி தான் இதற்கு சரியான மாற்றாக இருக்க முடியும். இதை சுபாஷ் சந்திரபோஸ் தான் முழுமையாக பயன்படுத்தினார் என்றார் பொள்ளாச்சி மகாலிங்கம்.

முன்னதாக ஆளுநர் சதுர்வேதி பேசுகையில்,

பொள்ளாச்சி மகாலிங்கம் பல்துறை நிபுணர். பல துறைகளில் ஆழ்ந்த அறிவும் திறமையும் வாய்ந்தவர். எத்தனையோ நிறுவனங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டிக் கொண்டிருப்பவர்.

அதே நேரத்தில் மனிதாபிமானமும் எளிமையும் நிரம்பிய மனிதர். இந்த நாட்டின் மாபெரும் குடிமகன். அவர் இந் நாட்டின் கெளவரம். இவர் போன்றவர்களால் தான் தேசம் வழிகாட்டப்படுகிறது. தனது பாராட்டு விழாவில் பேசும்போது கூட தேசத்துக்கான மிக அவசியமான கோரிக்கைகளைத் தான் அவர் முன் வைத்தார்.

நதிகள் இணைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை மிக அவசியமானது. இத் திட்டம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இப்போது நம்மிடம் தேவையான தொழில்நுட்பம் உள்ளது. இதனால் வட-தென் பகுதி நதிகளை இணைப்பது நிச்சயம் சாத்தியம் தான். இத் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

பொள்ளாச்சி மகாலிங்கம் காந்தியவாதி என்று எனக்குத் தெரியும். ஆனால், காந்திய சிந்தனைகள் குறித்து 18 பதிப்புகளை அவர் வெளியிட்டிருக்கிறார் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். மேலும் பாரதி குறித்து வட நாட்டினர் அறிந்து கொள்ள பல புத்தகங்கள் வெளியாக உதவியாக இருந்திருக்கிறார்.

திருக்குறளையும் திருவள்ளுவரையும் வட மாநில மக்களிடையே கொண்டு சென்றதில் மகாலிங்கத்தின் பங்கு அமோகமானது. தென்னிந்தியாவின் சைவத் திருமறை, வைணவத் தத்துவங்களை இந்தியில் பதிப்பிக்க வைத்தவர் மகாலிங்கம். அவர் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என்றார்.

மேலும் பாரதிய வித்யா பவன் தலைவர் டாக்டர் மத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் ஐஐஎம் நிறுவனரும் பேராசிரியருமான பத்மபூஷன் என்.எஸ்.ராமசுவாமி, தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் சார்பில் வெங்கட ரெட்டி மற்றும் கர்நாடக கவுண்டர் சேவை சமூக தலைவர் அரங்க. துரைராஜ் உள்பட பலரும் மகாலிங்கத்தை வாழ்த்தி உரையாற்றினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X