தேமுதிகவால் ஒரு பிரச்சினையும் இல்லை - நெப்போலியன்
தேனி:
தேமுதிகவால் திமுகவுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாப் பாதிப்பும் அதிமுகவுக்குத்தான் என்று கூறியுள்ளார் நடிகர் நெப்போலியன்.
திமுகவைச் சேர்ந்தவரான நெப்போலியன், வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். கடந்த சட்டசபைத் தேர்தலில் மயிலாப்பூரில் இவர் நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் நடிகர் எஸ்.வி.சேகர் நிறுத்தப்பட்டார். நெப்போலியனை வீழ்த்தி வென்றார் சேகர்.
தேர்தல் தோல்விக்குப் பின்னர் முன்பு போல திமுகவில் ஆக்டிவாக செயல்படாமல் தான் உண்டு, தனது சினிமாத் தொழில் உண்டு. கம்ப்யூட்டர் நிறுவனம் உண்டு என்றிருக்கிறார் நெப்போலியன்.
இந்த நிலையில் திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள மெகா தொடரில் நடிக்கிறார் நெப்போலியன். இந்தத் தொடரை பாரதிராஜா தயாரிக்கிறார்.
தேனியில் இந்தத் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் நடிக்க வந்த நெப்போலியன் இடைவேளையில், செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த்தின் தேமுதிகவால் திமுகவுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாப் பிரச்சினைகளும் அதிமுகவுக்குத்தான்.
திமுக தொண்டர்கள் உறுதியானவர்கள். எந்த காலத்திலும் பிற கட்சிகளுக்குப் போகாதவர்கள். அப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் தேமுதிகவுக்கு போக மாட்டார்கள். எங்களது ஓட்டு வங்கியிலும் எந்தப் பாதிப்பும் வராது.
எனது அரசியல் குரு கலைஞர். அவரது பெயரில் வரவுள்ள டிவியில் ஒளிபரப்பாகும் தொடரில் நான் நடிக்கிறேன். இதை குரு தட்சணையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அரசியல்வாதியாக இருந்தாலும் நான் சினிமாவிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் உள்ளேன் என்றார் நெப்போலியன்.












Click it and Unblock the Notifications