தோளில் தொற்றும் திமுக, அதிமுகbr/- இளங்கோவன் பொறுமல்
சென்னை:
எங்களிடன் துணையில்லாமல் போட்டியிட்டால் தோல்விதான் கிடைக்கும் என்பது தெரிந்தே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி மாறி காங்கிரஸ் கட்சியின் தோளில் தொற்றிக் கொண்டிருக்கின்றன என்று மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திராவிட கட்சிகளுக்கு இருப்பது போல் தமிழக காங்கிரசுக்கும் ஒரு பலமான தலைமை இல்லாமல் போய் விட்டது. இது எங்களுக்கு பலவீனம்தான். அதேசமயம், அது எங்களுக்கு பலமாகவும் இருக்கிறது.
எல்லா கட்சிகளிலும் கோஷ்டிப் பூசல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மட்டும் அதற்கு விதி விலக்கல்ல. 4 எம்பிக்கள் இருக்கும் மதிமுகவிலும் பிளவு ஏற்படவில்லையா. அங்கு கோஷ்டிப் பூசல் இல்லையா. கொலைகள் கூட நடந்துள்ளன.
பிற கட்சிகளைப் பற்றி நான் ஏதாவது சொன்னால் தோழமை கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக சொல்லி விடுவார்கள்.
பெருந்தலைவர் காமராஜருக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. கட்சி மேலிடத்துக்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அவருக்கு பிறகு வந்த மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி உள்பட யாருக்குமே இந்த அம்சங்கள் ஒரு சேர அமையவில்லை.
பண பலமோ, ஊடக பலமோ இல்லாத நிலையிலும் திமுக, அதிமுகவை சார்ந்து இருக்காமல் தனித்து போட்டியிட்ட கட்சி (தேமுதிக), இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றது திராவிட கட்சிகளின் செல்வாக்கு சரிவைத்தான் காட்டுகிறது.
காமராஜ் ஆட்சி அமைவது என்பது காலத்தின் கட்டாயம். வேறு யாரும் முறையாக, நன்றாக ஆட்சி செய்யவில்லை என்பதால் காமராஜ் ஆட்சியை பற்றி திராவிட கட்சிகளே பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ் துணையில்லாமல் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நன்றாக தெரியும். அதனால்தான் சாதுர்யமாக எங்கள் தோளில் ஏறி ஆட்சியில் அமர்ந்து விடுகிறார்கள்.
மூன்றாவது மாற்றாக ஒரு கட்சி தமிழகத்தில் கணிசமான செல்வாக்குடன் ஆட்சிக்கு வர முடியும் என்றால் அது காங்கிரசாகத்தான் இருக்க முடியும்.
காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி அமையுமானால் அந்த அணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்பது என் கருத்து. இதுதான் தொண்டர்களின் எண்ணமும்.
நான் தற்போது பதுங்கியிருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது பாய்வேன் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications