வினாடிக்கு 10 ரூபாய் சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி!
மும்பை:
ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, விநாடிக்கு 10 ரூபாய் சம்பாதிக்கிறாராம். அவருடைய ரிலையன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு விநாடிக்கும் ரூ. 1000 சம்பாதிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் ஒரு சதவீத லாபம்தான் அம்பானிக்குக் கிடைக்கும் அந்த பத்து ரூபாய்.
உலகிலேயே பெரும் பணக்கார இந்தியராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். மேலும் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பாஸ் ஆகவும் இருக்கிறார் அம்பானி. அம்பானியின் வருட சம்பளம் ரூ. 30.46 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, விநாடிக்கு 2 ரூபாய் சம்பளம் அவருக்குக் கூடியுள்ளதாம். கடந்த நிதியாண்டில் அவரது வருட சம்பளம் ரூ. 24.77 கோடியாக இருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் ரூ. 9069 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் அது ரூ. 11,943 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால்தான் முகேஷ் அம்பானியின் சம்பளமும் ஏறி விட்டது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் இந்த ஆண்டு ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 354 கோடியாக எகிறியுள்ளது. கடந்த ஆண்டை விட இது 32 சதவீதம் அதிகமாகும்.
1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையையும் ரிலையன்ஸ் பெற்றுள்ளது. நிகர லாபம் ரூ. 10 ஆயிரம் கோடியைத் தாண்டி விட்டதாம்.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமாக ரிலையன்ஸ் தனி இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில்தான் சந்தை முதலீடாக ரூ. 3 லட்சம் கோடியைக் கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரை ரிலையன்ஸ் பெற்றது.
முகேஷ் அம்பானியின் வருடச் சம்பளம் ரூ. 5 கோடி உயர்ந்துள்ளது. இவரது தம்பி அணில் அம்பானியை விட இது ரூ. 27 கோடி அதிகமாகும்.
அணிலின் ஆண்டு சம்பளம் ரூ. 3 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி நிமிடத்திற்கு 10 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் தம்பி அணில், விநாடிக்கு 1 ரூபாய்தான் சம்பாதிக்கிறார். இருவரும் இணைந்தபோது நிலைமையே வேறாக இருந்தது. இருவருக்கும் அப்போது வருடச் சம்பளம் தலா ரூ. 21 கோடியாக இருந்தது.
ஆனால் இருவரும் பிரிந்து தனித் தனிப் பாதையில் நடைபோட ஆரம்பித்தவுடன், முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபங்கள் பல்கிப் பெருகி விட்டன.
முகேஷ் தவிர அவரது நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான நிகில் மேஸ்வானி, ஹிதல் மேஸ்வானி ஆகிய இருவருக்கும் பெரும் ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. இதுதவிர ஹர்தேவ் சிங் கோலி என்ற இயக்குநருக்கும் பெரிய அளவிலான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. மொத்தமாக ரூ. 35 லட்சம் முதல் ரூ. 1.15 கோடி வரை இவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் பாலியஸ்டர் பிசினஸை நிகில் பார்த்துக் கொள்கிறார். இவருக்கு ரூ. 1.46 கோடி ஊதிய உயர்வைப் பெறுகிறார். இவருடைய ஆண்டு வருமானம் தற்போது ரூ. 7.77 கோடியாக உள்ளது.
பெட்ரோலலியம் நிறுவனத்தைப் பர்த்துக் கொள்ளும் ஹிதாலின் சம்பளம் ரூ. 7.76 கோடியாக உயர்ந்துள்ளது.
நிர்வாக அளவில் ஊதியமாக மட்டும் ரூ. 47.14 கோடியை செலவிட்டுள்ளது ரிலையன்ஸ். இதுதவிர செயல் இயக்குநர்கள் அல்லாதவர்களுக்கு கமிஷனாக மட்டும் ரூ. 1 கோடியை செலவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications