For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிமன்றங்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

நீதிமன்றங்களும் உணர்ச்சிவசப்பட தொடங்கிவிட்டால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை, நீதிமன்றம் தனது வரம்பை மீறுகிறதோ என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என முதல்வர் கருணாநதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசைக் கண்டித்து நீதிபதி அகர்வால் தமிழக அரசை கலைக்க மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது என்ற அளவிற்கு தெரிவித்த கருத்து பற்றி நீங்கள் விளக்கமாக எதுவும் இதுவரை கூறவில்லையே

பதில்: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறாத நிலையிலேயே ஏதோ மீறி விட்டதாக கூறும்போது, நீதிமன்றக் கருத்துக்களைப் பற்றி, இப்போதல்ல, நான் எப்போதுமே கருத்து தெரிவிப்பதில்லை என்ற நிலையில் உள்ளவன். அதனால் இப்போதும் நான் அந்த உச்சநீதிமன்ற கருத்து பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிமுக தொடர்ந்த வழக்கை அவசர அவசரமாக 3 மணி நேரம் விசாரித்து அப்போது தெரிவித்த ஒருசில கருத்து பற்றி முக்கியமான பத்திரிகைகளில் பிரபலமான வழக்கறிஞர்கள் தெரிவித்த விமர்சனங்களை இங்கு தொகுத்து தருகிறேன்.

பத்திரிகைகளில் வெளியான கருத்துக்கள் வருமாறு,

நீதிமன்ற விசாரணைகளின் போது நீதிபதிகள் சில நேரங்களில் எல்லா விஷயங்களையும் பற்றி அதிகமாகவே பேசி விடுகிறார்கள். இப்படி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பத்திரிகைகளில் பெரிதுபடுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. அவர்களது கருத்துக்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம் பெறக்கூடியவை அல்ல.

சட்டப்படி அந்தக் கருத்துக்களுக்கு எந்தவித மதிப்பும் கிடையாது. பொருள்படக்கூடிய வகையில் அவற்றை வெளியிடவும் முடியாது. வாய்மொழியாக இப்படிச் சொல்லப்படும் கருத்துக்கள் நீதிமன்றத்தின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவதாகவோ அல்லது கோபத்தை தெரிவிப்பதாகவோ இருக்கலாம்.

சட்டப்படி அந்தக் கருத்துக்களுக்கு மதிப்பில்லை என்றாலும் கூட மக்களது மனதை திசை திருப்பக்கூடிய விதத்தில் அமைந்து, அரசியல் ரீதியான விளைவுகளை உண்டாக்கிவிடுகின்றன.

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அகர்வால், அக்டோபர் 1ம் தேதியன்று தமிழகத்தின் என்ன நடந்தது என்பதைப் பற்றி அதிமுக சார்பில் சொல்லப்பட்டவற்றைக் கேட்டு கோபமாக வெளிப்படுத்திய கருத்துக்கள், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி நியாயப்படுத்திட முடியாதவையாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள நீதியின் எந்த அளவுகோலிலும் அடங்காதவை.

உச்சநீதிமன்றத்தில் அதிமுகவின் வழக்கறிஞர் தமிழகத்தில் சேதுசமுத்திர திட்டம் தொடர்பான பிரச்சனையில் பந்த் நடத்துவது குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எந்த வகையிலும் பின் பற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அப்போது நீதிபதி அகர்வால், நீங்கள் சொல்வது உண்மையானால் மாநிலத்தில் அரசியல் சட்டம் முழுமையாக செயலற்றுப் போய்விட்டது. திமுக ஆட்சியை கலைக்க குடியரசு தலைவருக்கு நாங்கள் பரிந்துரை செய்வோம் என்று சொன்னதாக பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

மேலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வலிமைவாய்ந்த பங்குதாரரான திமுக அரசின் போக்கு இப்படியிருக்குமானால், மத்திய அரசு, அந்த மாநில அரசை கலைத்திடத் தயங்கக் கூடாது என்றும் நீதிபதி சொல்லியிருக்கிறார்.

அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சிறிதும் இல்லாமல், எதிர்தரப்பு அது குறித்து என்ன சொல்கிறது என்பதைக் கேட்கக்கூட பொறுமை சிறிதுமின்றி தற்காலிகமான முடிவுகளுக்கு நீதிபதி தாவியிருக்கிறார். எல்லை மீறிய தன்னிச்சையான நீதிமன்றத்தின் இந்தப் போக்கு இன்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பின்னணியில் பார்க்கும்போது பெரும்பான்மை மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டுமென்று நீதிபதி அகர்வால் சொன்னது பெரும் கவலையைத் தருவதாகும். ஒரு மாநில அரசைக் கலைக்கும்போது அதனை மறுபரிசீலனை செய்யக்கூடிய உச்சநீதிமன்றத்திலிருந்து இதுபோன்ற கருத்து வெளிவருவது மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தாது.

உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் உணர்ச்சிவயப்பட்டது நியாயமாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகள் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக உணர்வுகளைத் தூண்டி விடுவதும், உணர்ச்சி வயப்படுவதும் இயல்பாகும். ஆனால் நீதிமன்றங்களும், உணர்ச்சிவசப்பட தொடங்கிவிட்டால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டியிருக்கும் என்கிற எச்சரிக்கை, நீதிமன்றம் தனது வரம்பை மீறுகிறதோ என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தைக் குற்றம் சுமத்தவும், கேள்வி கேட்கவும் இடமளிக்கும் வகையில் நீதிமன்றங்கள் நடப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் கிடையாது.

முழு அடைப்பு விஷயத்தில் உச்சநீதிமன்றம் காட்டிய முனைப்பு, நீதிமன்ற உத்தரவு உணர்வு பூர்வமாக செயல்படுத்தப்படவில்லை என்கிற ஆதங்கம், காவிரி நீர்ப்பிரச்சனையில் கர்நாடக அரசின் மீதும், முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையில் கேரள அரசின் மீதும் ஏன் காட்டப்படவில்லை என்று சராசரி மனிதர் கூட கேள்வி கேட்கிறாரே.

இதற்கு உச்சநீதிமன்றம் என்ன பதிலளிக்கப் போகின்றது. கர்நாடக அரசையும், கேரள அரசையும் நீதிமன்ற அவமதிப்புக்காக ஏன் தண்டிக்கவில்லை. ஏன் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்காக பரிந்துரைக்கவில்லை. அரசியல்வாதி ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் நடத்தலாம்.

ஆனால் நீதிமன்றங்கள் உணர்ச்சி வசப்பட்டு கருத்துக் கூறிவிடுதல் கூடாது. இந்திய ஜனநாயகத்திற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றங்கள் தான். அதனால் நீதிநிலை தடுமாறி விடக்கூடாது.

மூத்த வழக்கறிஞர் நாரிமன் கூறுகையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என்று நடுவண் அரசை எப்போதும் உச்சநீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. நீதிமன்ற ஆணையை மீறினால், நீதிமன்ற அவமதிப்புக்காக அந்த அரசைத் தண்டிக்கலாம். ஆனால் முழு அடைப்பு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதைக் கேள்விப்பட்ட நிலையில் எழுந்த வருத்தத்தின் வெளிப்பாடு தான் அது என்று கூறியுள்ளார்.

அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி கூறுகையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்வது உச்சநீதிமன்றத்தின் வேலை கிடையாது. முழு அடைப்பை தடை செய்தது சரியா இல்லையா என்பது நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்யப்படும் வரை அது நடைமுறையில் இருக்கும். உச்சநீதிமன்ற ஆணை மீறப்பட்டால், அதற்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது விதியை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்.

இது போன்ற கருத்துக்களை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் பி.என்.பகவதி, வர்மா, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆகியோரும் தெரிவித்திருக்கிறார்கள்.

சேது சமுத்திரக் கால்வாய் திட்டப்பணி அறிவிக்கப்பட்ட காலத்துக்குள்ளாக செய்து முடிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துவதற்காக முழு அடைப்பு என பல கட்சிகள் கூடி முடிவெடுத்தன. இதை தமிழக அரசு நடத்துவதாக ஒருவர் புகார் கூற, அதை அவசரக் கோலத்தில், விடுமுறை நாளில் விசாரித்து முழு அடைப்புக்கு தடை விதிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதை அரசியல் கட்சிகள் ஏற்று கடையடைப்பை கைவிட்டு உண்ணாவிரதம் இருக்கு முடிவு செய்தன. அதுவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என ஒரு கட்சி எடுத்துக் கூறிய வார்த்தை மட்டும் கேட்டுவிட்டு, முழுப் பரிசீலனை இல்லாமல் மறுதரப்பு வாதங்களையும் கேட்காமல் நீதிபதி அவர் மனதில் தோன்றிய உணர்ச்சி வசப்பட்ட பல பதங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அதில் நீதிமன்றத்தை அவமதித்த புகாரை நீ எழுதிக் கொடு, பின்னர் நான் கவனிக்கிறேன் என்பது ஒரு வரி. அதாவது புகார் எழுதவும் வழி சொல்லி, நான் அதுபற்றி முன் கூட்டியே தீர்ப்பு எழுத தயாராகி விட்டேன் என்ற பிரகடனமாகும் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

என்னைப் பார்த்து ஐயங்களையும், கேள்விகளையும் எழுப்புகின்றவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமேயானால், திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் அக்டோபர் 1ம் தேதி நடத்த அறிவித்திருந்த முழு அடைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடைவிதிக்க மறுத்து, அதே நேரத்தில் சில நிபந்தனைகளை மட்டும் விதித்திருந்த நிலையில் தான், இந்தக் கட்சிகளின் அனைத்து அமைப்புகளும் வேலை நிறுத்தத்திற்கான அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டுவிட்டனர்.

அவர்கள் எவருக்கும் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமையில் வழக்கு அவசர அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக வேறு ஒரு எதிர்மறையான தீர்ப்பை 30ம் தேதி மாலையில் வெளியிட்ட செய்தி தெரிந்திருக்க நியாயமில்லை. உச்சநீதிமன்றத்திந் இந்தத் தீர்ப்பு எழுத்து பூர்வமாக 30ம் தேதி இரவு 10-30 மணிக்குத் தான் தலைமைச் செயலாளருக்குக் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அந்தத் தீர்ப்பு வெளியானதற்கும், 1ம் தேதி காலையில் பந்த் தொடங்குவதற்கான நேரமும் இடையிலே சில மணி நேரங்கள் தான் இருந்தன. ஆனாலும்கூட, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அது கடைபிடிக்கப்பட்டு சென்னையிலே தலைமைச் செயலகம் இறங்கியுள்ளது.

முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் அலுவலகத்திலே பணியாற்றியிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், சில பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கியுள்ளன. அனைத்து புகை வண்டிகளும் ஒன்று கூட மிச்சமில்லாமல் அன்றையதினம் ஓடியுள்ளன.

விமானப் போக்குவரத்தில் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. பேருந்து ஓடுவதிலே கூட கணிசமான அளவிற்கு நேரம் அதிகமாக முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரளவு பேருந்துகள் ஓடியுள்ளன. பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் முன்கூட்டியே பந்த்துக்கு தடைவிதிக்கப்பட்ட செய்தி கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள போதிய அவகாசம் இல்லாத நிலைமை. எனவே இதுபற்றி வினா எழுப்புகிறார்கள். சிந்தனைக்கு கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் எந்தவிதமான நிந்தனைக்கும் இடமில்லாமல் போயிருக்கும் என்பது தான் விளக்கமாகும்.

கேள்வி: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்ட அறிக்கையில் திமுக மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதோடு முடிந்தால் வன்முறை. முடியாது போனால் அகிம்சை முறை என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே...

பதில்: வன்முறையைப் பற்றி பாஜக தலைவர் இல.கணேசன் சொல்லியிருப்பது, ஜெயலலிதா மொழியிலே சொல்ல வேண்டுமானால் நல்ல ஜோக். கரசேவையை நடத்தி இந்திய நாட்டில் ரத்த ஆறு ஓடச் செய்தவர்கள் பாஜகவினர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், விஎச்பியையும் தங்கள் சவலைப்பிள்ளைகளாக வளர்த்து வருபவர்கள். வன்முறையைப் பற்றி கருத்து கூறுவது சரியா. எனது ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசி காமராஜரை அவமானப்படுத்திவிட்டதாகவும் அந்த அறிக்கையிலே இல. கணேசன் கூறியிருக்கிறார்.

டெல்லியிலே காமராஜர் இல்லத்திலே புகுந்து கலகம் விளைவித்தது எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதை இல.கணேசன் மறந்து விட்டாரா. மக்கள் நம்பும் ராமர் பாலத்தைப் பாதுகாப்பது ஒரு பெருமையான செயலாகும் என்று கூறுகின்ற இவர், கரசேவையின் போது இஸ்லாமியர்கள் நம்பும் பாபர் மசூதியை இடித்ததற்கு என்ன காரணம் கூறப்போகிறார்.

சேது சமுத்திரம் பிரச்சனையில் திரும்ப திரும்ப இவர் அந்த இடத்தில் தோரியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன என்றும் அவை அழிக்கப்படக்கூடாது என்றும் ஒரு காரணத்தை சொல்லி வருகிறார். அந்த இடத்தையோ, அந்த இடத்தில் உள்ள மணலையோ சேது சமுத்திரம் திட்டத்திற்காக யாரும் அழிக்கப் போவதில்லை.

அந்த இடத்திலே குவிந்துள்ள மணலை அள்ளி கடலிலேயே வேறொரு இடத்தில் கொட்டத்தான் போகிறார்கள். அதனால் தோரியம் என்ற தாதுப்பொருள் அழிந்துவிடும் என்று கூறுவதெல்லாம், திட்டத்தை தடுக்கின்ற முயற்சிகள் தான்.

கொள்கை ரீதியான எதிராளி திமுக என்றும் இல. கணேசன் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். அவரது இந்தப் பிரகடனம் திமுகவிற்கு கிடைத்துள்ள நற்சான்றிதழ் என்று தான் கருதவேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X