அபு சலேமின் தாயார் மரணம்
வாரணாசி:
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான அபு சலேமின் தாயார் மரணமடைந்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சலேம் தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்பட்டார்.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் சலேம். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர், தனது காதலியான நடிகை மோனிகா பேடியுடன் போர்ச்சுகல் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது தாயார் மரணமடைந்தார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாயாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக சொந்த ஊரான உ.பி. மாநிலம் அசம்கர் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தாயாரின் மறைவு குறித்து சலேம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாய்க்கு நிகர் வேறு யாரும் இல்லை. அந்த இழப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த இழப்பை ஈடு கட்டவே முடியாது என்று சோகத்துடன், கண்ணீர் மல்கக் கூறினார் சலேம்.
தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தவிர மும்பையில் நடந்த இரட்டைக் கொலை, டெல்லியில் 3 கடத்தல் வழக்கு, லக்னோவில் ஒரு பாஸ்போர்ட் மோசடி ஆகிய வழக்குகளிலும் சலேம் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!