For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் கன மழை: பலி 13 ஆனது

By Staff
Google Oneindia Tamil News


Mapசென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

வங்கக் கடலின் தென் மேற்குப் பகுதியில், புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது வலுவடைந்து தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் எனத் தெரிகிறது.

இதன் காரணமாக வட தமிழகம், கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கப் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், புயல் சின்னம் வலுவடைந்து வருவதாலும், தமிழகம் முழுவதும் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதுவரை 13 பேர் பலி:

இதற்கிடையே தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழைக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று காலை தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு குழந்தைகள் பலியானார்கள்.

சென்னை பள்ளிக்கரணையில், அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கடலூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 35 வயது நபரின் உடல், நேற்று மாலை மீட்கப்பட்டது. கன்னியாகுமரியில் ஒரு பெண் மின்சாரம் தாக்கி இறந்தார்.

இன்று வரை மழைக்குப் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தொடர் மழை:

தலைநகர் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் இயல்பு நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று முழுவதும் நகரம் முழுவதும் பெய்த தொடர் மழையால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. தாழ்வான பல இடங்களில் மழை நீர் புகுந்துள்ளது.

நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

குமரியில் கடல் சீற்றம்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன.

மேலும் குழித்துறை தாமிரபரணியாறு, பரளியாறு, பழையாறு ஆகிய ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன.

அணைகள் திறக்கப்பட்டதால் வாழையத்துவயல் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடல் பகுதியில் பருவ நிலையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடலோர பகுதியிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் ராமன்துறை, முள்ளூர்துறை, இணையம், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அதிக வேகத்துடன் ஆக்ரோஷமாக வரும் அலைகள் கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி வருகிறது. கடலரிப்பு தடுப்பு சுவர் கடுமையாக சேதமடைந்துள்ளது.

மேலும் அப்பகுதியில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. கவிதா என்பவரின் வீட்டு கம்பவுண்ட் சுவர் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

ராமன்துறை பகுதியிலும் மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மீனவர்கள் பீதியில் உள்ளனர்.

இதற்கிடையே தொடர்ந்து கடுமையான காற்று வீசி வருவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. குமரி மாவட்டத்தில் ராமன்துறை பகுதியில் உள்ள மேற்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X