For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக மாநாட்டால் யாருக்கு பாதிப்பு வந்தாலும் போராட்டம்: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha

சென்னை: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டினால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அதிமுக நேரடியாக போராட்டத்தில் குதிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

டிசம்பர் 15, 16ம் தேதிகளில் திமுக இளைஞர் அணி மாநாடு நெல்லையில் நடத்துவதற்காக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடம்பர பேனர்களையும், கட்-அவுட்களையும் விழா நடைபெறுவதற்கு 20 தினங்களுக்கு முன்னரே வைக்க ஆரம்பித்து விட்டனர்.

திமுக அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட அரசாணையில் விழா நடைபெறும் 3 நாட்களுக்கு முன்பாகத்தான் இது போன்ற பேனர்களையும், கட்-அவுட்களையும் வைக்க வேண்டும் என்றும், விழா முடிந்தவுடன் 2 நாட்களுக்குள் அவைகளையெல்லாம் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன பற்றாக்குறை ஏற்பட்டு அதன் காரணமாக தங்கள் மாநாட்டுக்கு கூட்டம் குறைந்து விடுமோ என்ற பயத்தில் தற்காலிக உரிமங்கள் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்குமாறு திமுக வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு மறைமுக உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதன் காரணமாக சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக கைவிடவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கில், மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் கொடிகள், வளைவுகள், பேனர்கள், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் பொருத்தக்கூடாது. மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது. மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 4 லட்சம் சதுர அடி இடத்தைத் தவிர வேறு எந்த இடத்தையும் பயன்படுத்தக் கூடாது என்ற பல நிபந்தனைகளை விதித்து, அந்த மைதானம் தற்போது எப்படி இருந்ததோ அதே போல திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

திமுகவினரால் பொதுமக்கள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர்கள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு எந்த இடையூறோ அல்லது பொதுச் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால் அதற்காக அதிமுக நேரடி போராட்டத்தில் இறங்கும் என்பதை எச்சரிக்கையாக விடுக்க விரும்புகிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X