For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொண்டர்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi

திருநெல்வேலி: மு.க.ஸ்டாலின் குறித்த திமுக தொண்டர்கள், பத்திரிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும். அது எப்போது நிறைவேறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு முடி சூட்டும் விழாவாகவே நெல்லை திமுக இளைஞர் அணி மாநாடு பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஸ்டாலினே நேரடியாக நின்று மாநாட்டுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாகத தொடங்கிய மாநாடு நேற்று இரவு முதல்வர் கருணாநிதியின் சிறப்புப் பேருரையுடன் நிறைவு பெற்றது.

முதல்வர் கருணாநிதியின் உரையைத்தான் அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்தனர். காரணம், ஸ்டாலின் குறித்த முக்கிய அறிவிப்பை கருணாநிதி வெளியிடுவார் என்பதால்.

அமைச்சர் அன்பழகனின் உரைக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி பேசினார்.

அவரது பேச்சு:

சில பத்திரிக்கைகள் மிக மிக ஆடம்பரமாக நடைபெற்ற மாநாடு என்றும், செலவு ரூ. 40 கோடி ஆகியிருக்கும் என்றும் கூறியிருக்கிறது. நாங்கள் அவர்களை இந்த மாநாட்டுக்கான கணக்குப் பிள்ளையாக நியமிக்கவில்லை. ஒவ்வொரு மாநாட்டின் முடிவிலும் அந்த மாநாட்டின் வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்.

இந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தியாவிலேயே நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் ஒரே கட்சி திமுகதான். நுழைவுக் கட்டணம் செலுத்தி கருத்துக்களைக் கேட்க தொண்டர்கள் வரும் கட்சியும் திமுகதான்.

அந்த செலவுக் கணக்கை பத்திரமாக வைத்திருந்து, நாங்கள் வருமான வரி கணக்கு செலுத்தும்போது அவர்களுக்கு இந்தக் கணக்கை கொடுத்து உதவுங்கள். மாநாட்டு முடிவில் அந்த மாநாட்டுக்கு ஆன செலவு கணக்குகளை அறிவிப்பது, அப்படி முடியாவிட்டாலும் மறு நாள் அறிவிப்பது திமுகவின் பழக்கம். அந்த வகையில், இந்த மாநாட்டில் என்ன மிச்சம் என்று கேட்கலாம்.

இந்த மாநாட்டு நுழைவுக் கட்டணமாக 20 ரூபாய், 10 ரூபாய் என்று வசூலித்ததில், இந்த மாநாட்டு செலவு போக மீதி உள்ள தொகை ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 472 என்பதை உங்கள் மகிழ்ச்சிக்காகவும், மற்றவர்கள் வயிற்றெரிச்சலுக்காகவும் சொல்கிறேன். இந்த நிதியும், இளைஞர் அணி ஏதாவது சேர்த்து வைத்திருந்தால் அந்த நிதியையும், இளைஞர் அணியின் வளர்ச்சிக்காக செலவிட அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அறிவிக்கிறோம்.

சென்னையில் உள்ள அன்பகத்திற்கு ஒரு விலை மதிப்பீடு செய்து வழங்கியிருக்கிறோம். அதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் பேசப்பட்டிருக்கிறது. விரைவில் அந்த கட்டடத்தை கட்டி முடித்து திறப்பு விழாவுக்கு உங்களுக்கு அழைப்பு அனுப்புவார்கள்.

ஸ்டாலின் என் மகன் என்றாலும் கூட மகனை எப்படி வளர்க்க வேண்டும், மகனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதை திருக்குறள் வாயிலாக தேர்ந்து, தெரிந்து செய்திருக்கிறேன்.

அவையில் முந்தியிருப்பச் செயலை நான் செய்து விட்டேன். அதேபோல திருக்குறளை உணர்ந்து ஸ்டாலினும் ஊரில் இருப்பவர்கள் எல்லாம் இவனைப் பெற்ற தந்தை என்ன தவம் செய்தாரோ என்று கூறும் அளவுக்கு உணர்ந்து செயல்படுவார் என்று நம்புகிறேன்.

வைரமுத்து பேசும்போது கடிகாரத்தின் இரு முட்கள் போல ஸ்டாலினும், அழகிரியும் இருக்க வேண்டும் என்றார். சிறிய முள் அமைதியான முள் என்றும், பெரிய முள் ஆர்ப்பாட்டமான முள், ஆத்திரமான முள் எனவும் கூறினார். அது கைக்கடிகாரமா, டைம் பீசா என நான் கேட்ட போது பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.

கடிகாரத்தை பார்க்கும் போது நேரம் சரியாக தெரிய வேண்டும். சின்ன முள் ஓடி, பெரிய முள் நகர்ந்ததா, பெரியமுள் ஓடி சிறிய முள் நகர்ந்தா என்பது பிரச்னை இல்லை. கடிகாரம் நன்றாக ஓடுகிறதா, மொத்தத்தில் கட்சி நன்றாக செயல்படுகிறதா என்பது தான் முக்கியம். நான் நேரம் பார்க்கும்போது நேரம் சரியாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின், நான் உனக்குத் தந்தை என்றாலும், நான் குடும்ப உறவோடு, குடும்பப் பாசத்தோடு நடந்ததில்லை என்று உனக்குத் தெரியும். இதை அன்பழகன், துரைமுருகன், ராசா போன்றோர் உணர்ந்திருக்கிறார்கள். நான் எனது தந்தை இறக்கும் தருவாயிலும், என் முதல் மனைவி பத்மா இறக்கும் தருவாயிலும் கூட கூட்டத்திற்குச் சென்றவன்.

தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் கூட போதாது, நடந்து காட்ட வேண்டும். நடப்பார் என்று உணர்ந்து கொண்டதால்தான் உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எங்கள் நம்பிக்கை மேலும் உறுதிப்படும் அளவுக்கு நடந்து கொண்டால் எனக்கு, கழகத்திற்குப் பெருமை. அந்தப் பெருமையை எனக்கு அவர் ஈட்டித் தருவார் என்று நம்புகிறேன்.

சேது சமுத்திரத் திட்டத்தால், என்ன பலன் கிடைக்கும், ராமருக்கு நாம் எதிரிகள் அல்ல, விஞ்ஞான ரீதியாக ராமர் கட்டிய பாலம் அல்ல என்பதையெல்லாம் விளக்கி இளைஞர் அணியினர் கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்யலாம். இதை நாளை முதலே நீங்கள் தொடங்கி நடத்தலாம். இதன் மூலம் மக்கள் தெளிவடைவார்கள்.

எதிர்பார்ப்பது விரைவில் நிறைவேறும்....

இன்னும் காலம் அதிகம் உள்ளது. இங்கு கூடியுள்ள தொண்டர்களும், பத்திரிக்கையாளர்களும் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.

எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும், அறிவிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதன் மூலம் முதல்வர் பதவிக்கும், கட்சித் தலைவர் பதவிக்கும் ஸ்டாலின் விரைவில் உயர்த்தப்படுவார் என்று திமுக தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X