For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழையின் தாக்கம் குறைந்தது - பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

Bridge
சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக புரட்டியெடுத்து வந்த மழை சற்று தணிந்துள்ளது. வட தமிழகத்தில் மழையின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. தென் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் சுமாரான மழை உள்ளது. மழைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி, இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்து இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது.

தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழ்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடல் பக்கம் போய் விட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மழையின் தாக்கம் குறைந்தது. வட மாவட்டங்களில் மழை நின்று விட்டது. வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது.

தென் மாவட்டங்களிலும் மழை குறைந்துள்ளது. இருப்பினும் ஓரிரு மாவட்டங்களில் லேசான மழை காணப்பட்டது.

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு:

இதற்கிடையே, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மதுரையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கடலென பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோல அமராவதி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள பல வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

இதேபோல மேலும் பல ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் அதிகாரிகள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாலம் இடிந்தது:

சென்னை அருகே உள்ள சோழவரம் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள காரனோடை பாலம் வெள்ளப் பெருக்கில் இடிந்து விட்டது.

இந்தப் பாலம் கடந்த 1994ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இடிந்தது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்டது. மேலும் அருகிலேயே புதிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டது.

இந்த நிலையில், பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், குசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் இதில் பழைய பாலம் இடிந்து விட்டது.

அப்போது அந்தப் பாலம் வழியாக போக்குவரத்து நடைபெறவில்லை. இதனால் அசம்பாவிதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது.

இதுவரை 45 பேர் பலி:

மழைக்கு இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் ஆண்கள் 29 பேர், பெண்கள் 16 பேர் ஆவர்.

திருச்சி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 6 பேர் பலியாகியுள்ளனர். சென்னை, விழுப்புரம், தஞ்சை, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 4 பேரும், திருவாரூர், திருவண்ணாமலை, விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், மதுரை, தேனி, காஞ்சிபுரத்தில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, நாகப்பட்டனம், வேலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

காவிரி டெல்டாவில் மழை ஓய்ந்தது:

காவிரி டெல்டாவைப் புரட்டிப் போட்டுள்ள மழை ஓய்ந்துள்ளதால் விவசாயிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசனப் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டதால் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நின்றுள்ளதால் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

சென்னை நகரில் நேற்றே மழை நின்று விட்டது. இதனால் சகஜ நிலைக்கு சென்னை மக்கள் திரும்பியுள்ளனர். மழையும், காற்றும் நின்று வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.

சென்னை நகரில் தேங்கிக் கிடந்த மழை நீர் மெல்ல மெல்ல வடிந்து வருகிறது. புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் சோகத்தில் உள்ளனர்.

மழை காரணமாக பல சாலைகள் அரிப்பெடுத்து சேதமடைந்துள்ளன. அவற்றை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சுரங்கப் பாதைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தின் தென் பகுதிகளில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு முறை மழை பெய்யலாம். கடற் காற்று பலமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X