For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். மக்கள் கட்சித் தலைவராக பெனாசிர் மகன் பிலாவல் நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

Bilawalbhutto

இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் படிப்பை முடித்து விட்டு வரும் வரை அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி, கட்சி தலைமைப் பொறுப்பை கவனித்துக் கொள்வார்.

கடந்த 27ம் தேதி பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு அடுத்து அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழி நடத்திச் செல்லப் போவது யார் என்ற கேள்வி பாகிஸ்தான் மக்களிடையே விஸ்வரூபம் எடுத்து வந்தது.

இந்த நிலையில் தனக்கு அடுத்து கட்சியை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும், யார் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது குறித்து பெனாசிர் உயில் எழுதி வைத்திருப்பதாக அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி கூறியிருந்தார்.

பெனாசிரின் உயில்:

இந்த நிலையில் நேற்று பெனாசிரின் உயில் படிக்கப்பட்டது. பெனாசிரின் சொந்த ஊரான நவ்தேராவில் நடந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பெனாசிரின் உயில் படிக்கப்பட்டது. மூன்று மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், உயிலை பிலாவல் பூட்டோ படித்தார்.

அதன்படி கட்சியின் தலைவராக ஆசிப் அலி சர்தாரி பொறுப்பேற்க வேண்டும். கட்சியின் இணைத் தலைவராக தற்போதைய துணைத் தலைவர் மக்தூம் அமீன் பாஹிம் நியமிக்கப்பட வேண்டும். அவரே கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தலைவர் பதவியை ஏற்க மறுத்த சர்தாரி, பெனாசிரின் கனவுகளை நனவாக்கும் பொறுப்பை தனது மகன் பிலாவல் பூட்டோவிடம் ஒப்படைப்பதாக கூறி அவரே தலைவராக இருப்பார் என அறிவித்தார்.

பழிவாங்க ஜனநாயகம் - பிலாவல்:

பின்னர் பிலாவல் பேசுகையில், எனது படிப்பு முடியும் வரை எனது தந்தையே கட்சி விவகாரங்களைக் கவனித்துக் கொள்வார்.

சர்வாதிகாரத்தை பழிவாங்க ஜனநாயகமே சிறந்த ஆயுதம் என்று எனது தாயார் எப்போதுமே கூறுவார். அவர் கூறிய வழியில் நான் சென்று கட்சியை நடத்துவேன். தொடர்ந்து ஜனநாயகத்திற்காக போராடுவேன்.

அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக நான் விளங்குவேன். கட்சியின் நீண்ட வரலாற்றை பேணிக் காப்பேன் என்றார் பிலாவல்.

தேர்தலில் போட்டி:

சர்தாரி பேசுகையில், நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. தேர்தலை சந்திக்க தீர்மானித்துள்ளோம். அதேபோல முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியும் தேர்தல் புறக்கணிப்பு முடிவைக் கைவிட்டு விட்டு தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும்.

பெனாசிர் கொலை வழக்கை விசாரிக்க ஐ.நா.வின் உதவியை நாங்கள் நாடவுள்ளோம். முன்னாள் லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரியின் மரணம் குறித்து சர்வேத விசாரணை நடந்தது போல பெனாசிர் கொலை வழக்கையும் விசாரிக்க வேண்டும்.

பாகிஸ்தான் அரசின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சர்வதேச அளவிலான விசாரணைக் குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும் என ஐ.நா.வுக்கு கடிதம் எழுதவுள்ளேன்.

பெனாசிர் சிந்திய ரத்தம் வீண் போகாது. ஜனநாயகம் மீண்டும் திரும்பவும், ஏழை மக்களுக்காவும் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி பாடுபடும்.

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தொண்டர்கள் தேர்தலில் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்றார் சர்தாரி.

கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஹிம், பெனாசிர் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2007 வரை பாகிஸ்தானில் இல்லாத போது கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். பெனாசிர் கொல்லப்பட்டபோது அவரும் அதே காரில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலாவல் - டேக்வாண்டோ சாம்பியன்:

பிலாவல் பூட்டோவுக்கு 19 வயதாகிறது. பெனாசிரின் ஒரே மகன். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார் பிலாவல். படிப்பை முடித்து விட்டு பிலாவல் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்பார். அதுவரை சர்தாரியே கட்சித் தலைமைப் பொறுப்பை கவனித்து வருவார்.

1988ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பிறந்த பிலாவல், இஸ்லாமாபாத், ப்ரோபெல்ஸ் சர்வதேச பள்ளியிலும், பின்னர் துபாயில் உள்ள ஷேக் ரஷீத் பள்ளியிலும் படித்தார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து வருகிறார்.

வேட்டையாடுவதிலும், துப்பாக்கி சுடுவதிலும் விருப்பம் கொண்டவர் பிலாவல். குதிரையேற்றத்திலும் தேறியவர்.

உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட பிலாவர், டேக்வாண்டோவிலும் தேர்ந்தவர். அதில் கருப்பு பெல்ட் வாங்கியுள்ளார். பிலாவலுக்கு பக்தவார், ஆசிபா என இரு தங்கைகள் உள்ளனர்.

முன்னதாக பிலாவல் பூட்டோ குறித்து, பெனாசிரின் நெருங்கிய உதவியாளர் ஷெர்ரி ரஹ்மான் கூறுகையில், கட்சியின் தலைமைப் பதவியை பிலாவல் மீது திணிக்க மாட்டோம்.

பிலாவல் தற்போது படிப்பை முடிப்பதில் ஆவலாக உள்ளார். அதற்காக அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அவர் தலைவராக அறிவிக்கப்பட்டாலும் கூட, குறிப்பிட்ட காலம் வரை வேறு யாராவதுதான் தலைமைப் பொறுப்பை கவனித்து வருவார்கள் என்றார் ஷெர்ரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X