For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு அரசின் மறு ஆய்வு மனு மீது நாளை விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

Supreme Court

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பதட்டம், பரபரப்பு நிலவுகிறது. ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் கடையடைப்புப் போராட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர். நேற்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.

இதுதவிர ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்றவை நடைபெறும் கிராமங்கள் அனைத்திலும் பதட்டம் காணப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது சரியல்ல என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறியுள்ளன.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மறு ஆய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

இதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து உயர் மட்டக் குழு டெல்லி விரைந்தது. இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவஹர், பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன், உளவுப் பிரிவு ஐஜி ஜாபர் சேட் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மாலையில், உச்சநீதிமன்றப் பதிவாளர் நீரஜ் பரத்வாஜ் இல்லத்திற்குச் சென்று தமிழக அரசின் வழக்கறிஞர் பிரகாசம், மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் தமிழகத்தில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. எனவே தடை உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

மத ரீதியிலான, மத நம்பிக்கையின் அடிப்படையிலான நிகழ்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று சர்வதேச சட்டம் கூறுகிறது.

ஜல்லிக்கட்டு, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி.

1909ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது, தமிழகத்தில் கலெக்டராக இருந்த தேர்ஸ்டன் என்பவர், ஜல்லிக்கட்டு 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே இதனை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில், கூறப்பட்டுள்ளது.

நிலைமையின் அவசரம் கருதி, இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் வழக்கறிஞர் பதிவாளரை வலியுறுத்தினார்.

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு பேசினார் நீரஜ் பரத்வாஜ்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் மறு ஆய்வு மனு நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாளன்று விசாரணைக்கு வரவுள்ள தமிழக அரசின் மறு ஆய்வு மனு மீது என்ன மாதிரியான தீர்ப்பு வரப் போகிறது, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X