For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

By Staff
Google Oneindia Tamil News

-வடிவேல்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு அறியலாம்.

பொது மக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கும் செய்திக் கட்டுரை இது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது.
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை.

எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் மறுக்கப்படலாம். உதாரணத்திற்கு நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை.

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் முதல், மத்திய, மாநில அரசு அலுவலகங்ளில் ஒரு பொது தகவல் அதிகாரி உள்ளார்.

தகவல் பெற விரும்புவோர் அவருக்கு முகவரியிட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு கொடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம்.

இதற்காக தனியாக ஏதும் படிவம் இல்லை. ஒரு வெள்ளை தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஒரு மனுவில் எத்தனை கேள்விள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம்.

எந்த காரணம் கொண்டும் தபாலிலோ அல்லது மணியாடர் மூலமாகவோ கட்டண தொகையை அனுப்பக்கூடாது.

சரியான அலுவலகத்தில் மனுவை அளிக்க வேண்டும்.

இவ்வாறு தகவல் கேட்கும் உங்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும்.
தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும்.

தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375,
முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.

தொலைபேசி எண் 044-24357580

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன்
2 வது தளம், பி-பிரிவு.
நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056

தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137

-வடிவேல்([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X