For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணிவெடியால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்தில்லை: கடலோர காவல்படை

By Staff
Google Oneindia Tamil News


ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, தனது கடல் எல்லைக்குள் மிதக்க விட்டுள்ள கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கடலோரக் காவல் படையின் மண்டபம் மைய அதிகாரி கே.ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளது. விடுதலைப் புலிகள் நடமாட்டத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை என்று இலங்கை கூறியுள்ளபோதிலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் உலவுவதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த பயங்கர செயலை செய்துள்ளது இலங்கை அரசு.

இந்த நிலையில், இன்று மண்டபம் கடலோரக் காவல் படை மையத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்கள், ஹோவர்கிராப்ட் படகு மூலம், சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்தாம் தீவுத் திட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு செய்தியாளர்களிடம், இலங்கையின் கண்ணிவெடிகள் குறித்து நிலைய அதிகாரி கே.ஜனார்த்தன் விளக்கினார். அவர் கூறுகையில், இலங்கையின் கடல் எல்லைக்குள்தான் கண்ணிவெடிகள் மிதக்க விடப்பட்டுள்ளன. எனவே நமக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

மேலும், சர்வதேச கடல் எல்லைப் பகுதியிலிருந்து கண்ணிவெடிகள் மிதக்க விடப்பட்டுள்ள பகுதி தொலைவில்தான் உள்ளது. நமது எல்லையிலிருந்து சர்வதேச கடல் பகுதி கிட்டத்தட்ட 12 கடல் மைல் தொலைவில் உள்ளது.

எனவே இந்த கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கோ நமது கடற்படைக்கோ எந்த ஆபத்தும் இல்லை.

கடலில் கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருப்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும். இதில் நாம் தலையிட முடியாது.

சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என நமது மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மீனவர் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் புகுந்து விடாமல் கடலோரக் காவல் படை கண்காணித்து வருகிறது. கடல் ரோந்தையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளோம்.

கச்சத்தீவுக்கு இந்திய மீனவர்கள் செல்ல வேண்டாம். அங்கு கடல் புலிகள் பிரிவுக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

அப்பகுதியில் மீன் பிடிக்கச் சென்றால் நமது மீனவர்கள் அவர்களுக்கிடையே சிக்கிக் கொள்ள நேரிடும். இந்திய மீனவர்கள், கச்சத்தீவில் மீன் வலைகளை உலர்த்திக் கொள்ள உரிமை இருந்தாலும் கூட, தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை.

இந்தியாவுக்குள் ஊடுறுவ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முயன்றால் அது அவருக்கு ஆபத்தாகத்தான் முடியும்.

கடந்த ஒரு ஆண்டில், சர்வதேச கடல் எல்லையில், உள்ள பல்வேறு தீவுகளில் சிக்கிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளை கடலோக் காவல் படை மீட்டு கரை சேர்த்துள்ளது என்றார் அவர்.

காவல்துறை எச்சரிக்கை:

இதற்கிடையே, இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்ட கடல் பாதுகாப்பு போலீஸார், மீனவர்களை எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விடுத்துள்ள எச்சரிக்கையில், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் மீன்வளத்துறை சார்பாக கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

கடல் பாதுகாப்பு போலீசாரோ, பாதுகாப்பு படையினரோ தங்களிடம் விசாரணை நடத்தினால் கண்டிப்பாக தங்களுடைய உரிமம் மற்றும் படகு குறித்த ஆவணங்கள் அனைத்தையும் கண்டிப்பாக காட்ட வேண்டும்.

மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கைக்குள் ஊடுருவிச் சென்றால் கண்டிப்பாக சிறை பிடிக்கப்படுவார்கள்.

சந்தேகப்படும்படியாக அந்நியர்கள் யாராவது நடமாடினால் மீனவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மீனவர்கள் தங்களுடைய படகுகளை மற்றவருக்கு விற்பனை செய்தால் உடனே மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடற்படை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X