For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணிக் கட்சிகளின் போக்கு - கருணாநிதி வேதனை

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi

சென்னை: எங்கள் மீது வீண் பழியை போட்டுத்தான் ஆட்சி மாற்றம் வரும் என்றால் நாங்கள் அந்த ஆட்சி மாற்றத்தை சந்திக்கத் தயார். கூட்டணிக் கட்சிகளின் பேச்சும், போக்கும் வேதனை அளிப்பதாக உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வரின் செயலாளர் சண்முகநாதனின் இல்லத் திருமணம் சென்னையில் இன்று நடந்தது.

இதில், கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

சண்முகநாதன் என்னோடு 40 ஆண்டுகாலம் உதவியாளராக இருக்கிறார். அவரை நான் நன்கு அறிவேன். அவரும் என்னை அறிவார்.

நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ. 5வது முறையாக நான் ஆட்சி பொறுப்பேற்ற போது சண்முகநாதனை அழைத்து என்னுடன் இருக்கிறாயே. மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்றேன்.

அதற்கு அவர், நான் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரை உங்களிடமே என்னை ஒப்படைத்திருக்கிறேன். சம்பளமே வேண்டாம் என்றார்.

அந்த அன்புக்குரிய தம்பி சண்முகநாதன் சின்னக் குறிப்புகளை கூட எழுதித் தந்து அவை எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட உதவுகிறார். அது அரசியல் பணியாக இருந்தாலும், இலக்கியம் ஆனாலும் நான் எப்படி பன்முக பணியாளராக இருக்கிறேனோ அந்த பணிக்கு உதவி செய்பவராக சண்முகநாதன் இருக்கிறார்.

சட்டமன்றத்தில் இப்போது நடந்துள்ள சில விஷயங்களை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். அதில் எது சரி, எது தவறு என உணராத கருத்துக்கள் ஆங்காங்கே புகழப்படுகிறது. அது சில பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது. எனவே அதில் சிலவற்றை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஏதோ தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாக ஆகி விட்டது என்ற உணர்வில் காங்கிரசாரும் பேசுகிறார்கள். இதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

நேற்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலரும் நாகர்கோவில் கூட்டத்தில் பேசும் போது தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாக மாறிவிட்டது போல் பேசி இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தப்படக் கூடியது.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்த முதலில் நிற்பது நான்தான். காங்கிரஸ் மட்டுமல்ல திமுக, பாமக, திக ஆகியோருக்கும் அந்த பொறுப்பு உண்டு.

யார் யார் திமுக தோழமை கட்சியாக உள்ளார்களோ, அவர்களுக்கும் இந்த பொறுப்புண்டு. இவர்கள் கூட்டணியில் இருந்து கொண்டுதான் பேசுகிறார்களா என்ற மாச்சரியத்தை ஏற்படுத்தும் விடுதலை சிறுத்தைகளுக்கும் அந்த பொறுப்பு இருப்பதாக கருதுகிறேன்.

அதனால் தான் கூட்டணியில் உள்ளோரிடம் சில கருத்து வேறுபாடு தோன்றினாலும் அவர்களும் இந்த விஷயத்தில் திருந்த வேண்டும் என்பதற்காக அறிவுரை கூறி இருந்தேன்.

தமிழகத்தில் யார் தேச விரோதமாக ஈடுபட்டாலும் சரி, சட்டவிரோதமாக ஈடுபட்டாலும் சரி. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த சட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் உள்ளாவார்கள் என்று சட்டசபையிலேயே அறிவித்தேன். அதை சட்டமாக்குவோம் என அமைச்சர் துரைமுருகனும் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் பிறகும் இன்னும் விடுதலைப்புலிகளுக்கு கருணாநிதி இங்கு இடம் கொடுத்துவிட்டார் என கூறுகிறார்களே. இதை நினைக்கும்போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது.

விடுதலைப்புலிகளை ஆதரித்ததில் எம்.ஜி.ஆரா, கருணாநிதியா என்றால், எம்.ஜி.ஆருக்கு நிகர் இதில் யாரும் கிடையாது. கருணாநிதிக்கு ஒரு துரும்பு கூட விடுதலைப்புலிகள் மீது ஆதரவு கிடையாது என்று ஆங்கில பத்திரிக்கையிலேயே பேட்டி கொடுத்தவர் சட்டசபையில் பேசும்போது நாட்டை காட்டிக் கொடுக்கிறாய் எனப் பேசினார்.

இதை கேட்டதும் அங்கிருந்த காங்கிரஸ் உறுப்பினரான பீட்டர் அல்போன்ஸ் எழுந்து இல்லை என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரமும், இது போன்று தான் பேசுகிறார். நான் அவரது செய்தியை காலையில் பார்த்ததும் ப.சிதம்பரத்துக்கு போன் செய்தேன்.

ஏதோ தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு இருப்பது போல் பேசி இருக்கிறீர்களே. இது சரியில்லை என்று நான் சொன்னபோது அதற்கு அவர், நீங்கள் சரியாகத்தான் நடவடிக்கை எடுக்கிறீர்கள், கையாளுகிறீர்கள் என பதில் அளித்தார்.

கடந்த 1 ஆண்டு காலத்தில் திமுக அரசு பதவிக்கு வந்ததில் இருந்து இதுவரையில் விடுதலைப்புலிகளுக்காக பால்ரஸ் குண்டுகள், அலுமினியக் கட்டிகள் வெடிபொருட்கள் கடத்தியதாக கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி முதல் 2008 ஜனவரி மாதம் 30ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வழக்கு 12. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 103 பேர். இதில் விடுதலைப்புலிகள் 13 பேர் ஆவர்.

இது மட்டுமல்ல. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இலங்கைத் தமிழர்கள் 31 பேர். இந்திய தமிழர்கள் 61 பேர். இதில் 40 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளனர். இதில் 3 பேர் விடுதலைப்புலிகள்.

எனவே இந்த கணக்கு எங்களிடம் உள்ளது. இது மத்தியில் உள்ள உளவுத்துறைக்கு தெரியாமல் இருக்காது. அதுவும் நிதியமைச்சர் பொறுப்பில் உள்ள ப.சிதம்பரத்துக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

யார் தேச விரோத செயல்களில் ஈடுபட்டாலும் திமுக அரசு அவர்களை மன்னிக்காது மன்னிக்காது மன்னிக்காது என 3 முறையல்ல, 30 முறை, 300 முறைகூட சொல்லுவேன்.

இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாமை, ஒற்றுமையை காப்பாற்ற இந்தியா வளமான நாடாக இருக்க அந்த வளத்தை மேலும் மேலும் வலுப்படுத்த திராவிட நாடு கொள்கையை கைவிட்ட தலைவர் அண்ணா. அவரது வழியில் செயல்படும் நமது ஆட்சியிலும் தேச துரோகத்துக்கு இடமில்லை.

ஆனால் எங்கள் மீது இப்படி ஒரு பழியை போட்டுத்தான் ஆட்சி மாற்றம் வரும் என்றால் அந்த ஆட்சி மாற்றத்தை நாங்கள் சந்திக்கத் தயார். எங்கள் மீது வீண் பழி சுமத்தாதீர்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல. தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அவர்களிடம் எந்த சஞ்சலத்தையும் உண்டாக்க வேண்டாம் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X