For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவுக்கு தேவை பதவி பதவி பதவி: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சகல சுக பாக்கியங்களுடனும், சப்ர மஞ்சத்தில் ஜெயலலிதா சயனித்திருப்பதற்கும், சகல செளபாக்கியங்களுடன் உல்லாச வாழ்வில் உருண்டு புரண்டு திளைப்பதற்கும் அவருக்கு தேவைப்படுகிறது பதவி, பதவி, பதவி, பதவி என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா தனது சொந்த தொலைக்காட்சிக்கு தானே அளித்த பேட்டியில் அந்த அம்மையார் எனக்கொரு சவால் விடுத்துள்ளார்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது குற்றம் ஆகாது என்று பொடா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார். அந்தத் தீர்ப்பை அவரால் காட்ட முடியுமா என்று கேட்டுள்ளார்.

கடந்த மாதம் 25ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுதலைப் புலிகள் குறித்து பேசிய பிரச்சினை குறித்து 29ம் தேதி சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதன் மீது நான் பேசும்போது, அருமை நண்பர் திருமாவளவனும் மற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுகின்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையெல்லாம் சட்ட ரீதியாகத் தான் சந்திக்க வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பொடா சட்டம் பயன்படுத்தியும்கூட, அந்தப் பொடா சட்டத்தைப் பயன்படுத்தியது சரியா அல்லவா என்ற வினா எழுந்தபோது, உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு அது பற்றி என்ன வெளியிட்டது என்றால்,

தடை செய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பிலே ஒரு வரி வெளிவந்திருக்கிறது.

குற்றம் ஆகாது என்பதற்காக இப்பொழுது இங்கே ஞானசேகரன் எடுத்துக்காட்டிய அந்த வார்த்தைகள், முன்னாள் முதலமைச்சரைப் பற்றி அல்லது இப்பொழுது விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி சொல்லப்பட்ட இந்த வாசகங்களை எல்லாம் பேசலாம் என்று பொருள் அல்ல. அது எங்கே கொண்டு போய் விடும் என்பதையும் நாம் அறியாதது அல்ல. அதை நான் ஆதரிப்பவனும் அல்ல என்று கூறி அது அவைக் குறிப்பிலே இடம் பெற்றுள்ளது.

என்னுடைய இந்தப்பேச்சுத் தான் தவறு என்றும்,
உச்சநீதி மன்றத் தீர்ப்பிலே தடை செய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு
குற்றம் ஆகாது என்று தீர்ப்பில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்றும் பேரவையில் ஜெயலலிதா
பேசினார்.

அன்றையதினமே சட்டத்துறை அமைச்சரான தம்பி துரைமுருகன் பேரவையிலேயே உச்ச நீதிமன்றத்தின் முழுத் தீர்ப்பினையும் கொண்டு வந்து, நான் குறிப்பிட்ட பகுதி எங்கே வருகிறது என்பதையும் எடுத்துக் காட்டினார். அந்தச் செய்தி அவைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது.

மறுநாள் முரசொலியிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. மறுநாள் ஏட்டில் வெளி வந்த செய்தியையும் பார்க்கவில்லை.

அவருக்கு தீர்ப்பினைக் காட்டிய வழக்கறிஞர்களிடமும் அதைப் பற்றி முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் பேரவையில் தவறாகப் பேசியிருக்கிறார். அது மாத்திரம் அல்ல. இந்து நாளிதழ் இந்தச் செய்தி பற்றி என்னிடம் சிறப்பு பேட்டி ஒன்றினைக் கேட்டு, அது கடந்த 3ம் தேதியன்று தெளிவாக வெளி வந்திருக்கிறது. அதையும் ஜெயலலிதா படிக்கவில்லை.

இது மாத்திரமல்ல, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பேரவையில் ஜெயலலிதா இவ்வாறு தவறான செய்தியினைக் கூறியிருக்கிறார் என்று ஒரு உரிமைப் பிரச்சினையைக் கொடுத்து, அந்தச் செய்தியும் ஏடுகளிலே வெளி வந்திருக்கின்றது.

அதற்குப் பிறகாவது முதலமைச்சராக இருந்த ஒருவர் தனது வழக்கறிஞர்களிடம் கூறி, அந்தத் தீர்ப்பினைக் கேட்டுப் பெற்று முழுமையாகப் படித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும், அதன் அடிப்படையில் நேர்காணல் பேட்டியில் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் எதையும் செய்யாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பதைப் போல, திருப்பித் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக மாறி பேரவையில் முதன் முதலில் என்ன பேசினாரோ, அதையே சொல்லி வருவது மட்டுமல்ல, எனக்கு சவாலே விடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் கூற்று எவ்வளவு தவறானது என்பதை நான் ஏற்கனவே இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியிலே தெளிவாக்கியிருக்கிறேன் என்ற போதிலும், ஜெயலலிதாவின் நேர்காணலுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை தெளிவாக்குவது நல்லதென நினைக்கிறேன்.

கடந்த 2003ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா கேட்டுள்ள வினா பற்றி நீதிபதிகள் தெரிவித்திருக்கும் பகுதி வருமாறு:

நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடா சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ள போது, ஒரு நபர் பகிரங்கமாக அறிவிப்பதாலோ (20வது பிரிவின் கீழ் உள்ளபடி) அல்லது ஆதரவைக் கோரினாலோ அல்லது ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ,

அல்லது ஏற்பாடு செய்ய உதவினாலோ அல்லது ஒரு கூட்டத்தில் பேசினாலோ (21வது பிரிவு), ஒரு பயங்கர வாத அமைப்பின் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கரவாதச் செயலைச் செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்.

அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே 20 அல்லது 21 அல்லது 22வது பிரிவுகளின் கீழ் குற்றம் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். ஒரு நபர் பயங்கரவாதச் செயலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் அல்லது பயங்கர வாதச் செயலைச் செய்ய உதவும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும்.

வேறு வார்த்தைகளில் கூறினால், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும் அல்லது செய்து முடிக்க உதவி செய்யும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே, இந்தப் பிரிவுகள் பொருந்தும். இந்த முறையில் இந்தப் பிரிவுகள் புரிந்து கொள்ளப்பட்டால் தவறாகப் பயன்படுத்துகிற வழி இருக்காது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கூற்று தவறு என்பதற்கும், நான் பேரவையில் கூறியது உண்மையானது என்பதற்கும் தீர்ப்பில் உள்ள இந்த வரிகள் போதும் என்பதை இதனைப் படிக்கும் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் பருவ காலத்தில் மழை பெய்யத் தவறினாலும் அல்லது உழவர்களின் எதிர்பார்ப்புக்கு மேல் மழை பொழிந்தாலும் ஒரு கொள்ளையோ, கொலையோ நடந்து அதை நடத்திய கொடியவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாலும்

ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குடி தண்ணீர் கிடைப்பதில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும் எங்கேயோ ஒரு நகரத்தில் சாலை விபத்து ஒன்று நடந்தாலும் விலைவாசியில் சற்று உயர்வு தென்பட்டாலும் திமுக ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும்' என்று மத்திய அரசைப் பார்த்து ஆணையிடுவதும்,

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழக ஆட்சியினுடைய சாதனைகள், தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தொகை தொகையாக பெருக்கெடுப்பதைப் பார்த்து ஜெயலலிதா பெருமூச்சு விடுகிறார், புலம்புகிறார், அலறுகிறார்.

ஐயோ, இந்த ஆட்சியைக் கலைத்தால் தான் தனக்கு நிம்மதி என்றும் கலைப்பீர்களா, மாட்டீர்களா என்று தூது விட்டும் பார்க்கிறார். கலைத்தே தீருவேன் என்று தோள் தட்டி முழக்குகிறார்.

தேர்தல் நேரத்து வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொன்றாக வரிசையாக ஏழையெளியோர், உழவர் பெருமக்கள், உழைப்பாளி வர்க்கத்தினர் உவகை அடையும்படி தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற கழக ஆட்சி இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் தொடருமேயானால்,

திட்டமிட்டபடி புதிய சட்டமன்ற மாளிகை கட்டி முடித்து விடுவார்களே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தமிழகம் எதிர்காலத்தில் வளம் கொழிக்கும் அற்புதத்தை விளைவித்து விடுவார்களே, மெட்ரோ ரெயில் திட்டம் வரவிருக்கிறதே, சென்னையிலிருக்கும் நெரிசல் குறைந்து விடுமே.

ஊராட்சி, பேரூராட்சிகளுக்கெல்லாம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் உரிய நிதி வழங்கி பட்டிதொட்டி முதல் பட்டினங்கள் வரை வளமை கொழிக்கும் பூமியாக தமிழகம் மாறி விடுமே இப்பொழுதே இருபது லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய அளவிற்கு தொழிற்சாலைகள் தொடங்கும் நிலை தோன்றியுள்ளதே,

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஒகனேக்கல் குடிநீர் திட்டம் போன்ற பெருந் திட்டங்கள் எல்லாம் முடிவுற்று அந்தப்பகுதி மக்களின் தாகம் தணிந்து விடுமே சென்னையில் மட்டும் மையம் கொண்டிருந்த தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி தமிழகம் முழுவதும் பரவி விடுமே,

மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படத் தொடங்கி விட்டதே அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியாக வாரியங்கள் அமைக்கப் பட்டு, அவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்க்கான உதவி நிதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறதே,

எல்லோராலும் மறக்கப்பட்ட அரவாணிகளுக்குக் கூட வாரியம் அறிவிக்கப்பட்டு விட்டதே அருந்ததியருக்கு தனி ஒதுக்கீடு தர அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதே என்று இத்தனையும் இன்னும் எத்தனையோ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு முடிவடையும் என்றால்,

பிறகு தன்னைப் போன்ற தன்னல சுகவாசிகளுக்கு தமிழ்நாட்டில் மதிப்பு மரியாதை மகிமை மாண்பு என்று எந்த மண்ணாங்கட்டி தான் மிஞ்சப் போகிறது.

அதனால் இவையெல்லாம் கண்ணுக்கு இனிய சாதனைகளாக கருத்துக்கு இனிய பணிகளாக விதைத்து, முளைத்து, வேரோடி, செடியாகி, கொடியாகி, பூத்துக் குலுங்குகின்ற புதிய தமிழ்நாட்டை மக்களும் காணாமல் மனச்சாட்சியற்ற தானும் காணாமல் அதற்குள் சாதனை புரியும் சரித்திரப் பொன்னேடாம், திமுக ஆட்சியை இல்லாமல் செய்து விடுவது ஒன்று தான் பிறவி எடுத்தப் பயனாகும் என்றும், தன் இனத்துக்கு தேடித் தந்த வரப் பிரசாதம் என்றும் எண்ணுகிற ஜெயலலிதா,

விடுதலைப் புலிகளை நாம் ஆதரிக்கிறோம் என்று பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி மத்திய அரசிடம் மண்டியிடுகிறார். மக்களைப் பயமுறுத்துகிறார்.

அன்று மகாமக குளத்திலே நடத்திய மாயாஜாலங்களை மறைத்தது போல் இவரது ஆட்சியில் நடத்தப்பட்ட மகா பாதகங்களை மறைத்திடலாம் என்று அந்தப் பாதகச் செயல்களால் பழி வாங்கப்பட்ட மக்கள், அரசு அலுவலாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்கள் எல்லாம் அந்தக் கொடுமைகளை மறந்து விடுவார்கள் என்றும்;

தவறுக்கும் தவறான தப்புக் கணக்குகளைப் போடுகிறார். விடுதலைப் புலிகளுக்கும், பிரபாகரனுக்கு,ம் எம்.ஜி.ஆர். உதவிய அளவுக்கு அதில் கடுகளவு கூட கருணாநிதி உதவவில்லை என்றும் பிரபாகரனுக்கு இலங்கையிலே ஒரு துன்பம் என்றால் தமிழ்நாடு எரிமலை ஆகுமென்றும், பூகம்பம் ஆகுமென்றும் இந்து, எக்ஸ்பிரஸ் நாளேடுகளுக்கு அளித்த சிறப்பு பேட்டிகளிலும் எச்சரித்த ஜெயலலிதா அய்யோ;

இன்றைக்கு விடுதலைப் புலிகளை இந்த அரசு எந்த வகையிலும் ஆதரிக்காமல் இருக்கும்போதே அவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்போதே மீறி நடப்பவைகளை தடை செய்து கடுமையான தண்டனைகளை வழங்கிக் கொண்டிருக்கும்போதே அதற்கான புள்ளி விவரங்களை ஆதாரப்பூர்வமாக அவை நடுவே எடுத்துக் காட்டிய பிறகும் அம்மையார் ஜெயலலிதா ஆவேசமாக அலறுகிறார், ஆட்சியைக் கலை, கலை என்று அண்டப்புளுகுகளை அள்ளிக் கொட்டுகிறார்.

என் செய்வது சகல சுக பாக்கியங்களுடனும், சப்ர கூட மஞ்சத்தில் அவர் சயனித்திருப்பதற்கும் சகல செளபாக்கியங்களுடன் உல்லாச வாழ்வில் உருண்டு புரண்டு திளைப்பதற்கும் அவருக்கு தேவைப்படுகிறது பதவி, பதவி, பதவி, பதவி.

அதனால்தான் மத்தியில் உள்ள அரசைப் பார்த்து கூப்பாடு போடுகிறார் உதவி, உதவி, உதவி, உதவி என்று மக்கள் பணியே மகேசன் பணி என்று தொண்டாற்றும் இந்த மண்ணின் மைந்தர்களை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டுமாம்!

மக்களின் தலைகளை உருட்டிப் பந்தாடிய மாபாவிகள் மீண்டும் மகுடம் புனைய வேண்டுமாம் இதை ஏற்றுக் கொள்ள எமது தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்த சோணகிரிகளாப இளித்தவாயர்களா? இல்லை, இல்லை, இல்லை.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X