'அண்ணாச்சி' ராஜகோபால்-2வது மனைவி லடாய்?
இருவரும் அடுத்தடுத்து மாநகர காவல்துறை ஆணையரிடம் வந்து புகார் கொடுத்துள்ளனர். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ரத்தக் காயத்துடன் கிருத்திகா ஆணையரிடம் புகார் கூறியுள்ளார்.
ஜீவஜோதி விவகாரம் வெடித்து வெளிக் கிளம்பியபோதுதான் சரவண பவன் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா விவகாரமும் வெளியே வந்தது. குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் மீறி கிருத்திகாவை திருமணம் செய்து கொண்டார் ராஜகோபால். ராஜகோபாலின் ஹோட்டலில் பணியாற்றிய ஒருவரின் மனைவி தான் கிருத்திகா.
அவரிடம் இருந்து கிருத்திகாவை வலுக்கட்டாயமாகப் பிரித்து மணந்து கொண்டார் ராஜகோபால். ராஜகோபாலின் பணத்துக்கு மயங்கி அவருடன் வந்தார் கிருத்திகா என்றனர்.
அவரிடம் தனது ஹோட்டல் பொறுப்புகள் சிலவற்றையும் கொடுத்திருந்தார். ஜீவஜோதி விவகாரத்தின்போது கிருத்திகா குறித்த இந்த விவரங்களும் வெளியில் வந்தன.
இதையடுத்து அவ்வப்போது கிருத்திகாவுக்கும் ராஜகோபாலுக்கும் இடையிலான மோதல்களும் வெளியில் வந்து கொண்டிருந்தன. மிகப் பெரிய பங்களாவில் கிருத்திகாவை குடி வைத்திருந்தார் ராஜகோபால். ஆனாலும் அவருக்கென எந்த சொத்துக்களும் தரவில்லை என்று தெரிகிறது.
ஜீவஜோதி விவகாரத்துக்குப் பின் ராஜகோபால்-கிருத்திகா இடையே சொத்து சண்டையும் ஏற்பட்டது. இந்த மோதலால் அவ்வப்போது கிருத்திகா கோபித்துக் கொண்டு வெளியேறுவதும் அவரை சமாதானப்படுத்தி ராஜகோபால் அழைத்து வருவதுமா கதை நடந்து கொண்டிருந்தது.
இந் நிலையில் ராஜகோபாலின் மகனால் கிருத்திகாவுக்கு தொல்லை நேர்ந்து வருவதாக சில பத்திரிக்கைககளில் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இந் நிலையில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், கிருத்திகா ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
நேற்று ஆணையர் அலுவலகம் வந்து ஆணையர் நாஞ்சில்குமரனைச் சந்தித்து அரை மணி நேரம் பேசினார் கிருத்திகா. பின்னர் வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டபோது பதிலளிக்க மறுத்தார்.
பின்னர் வலியுறுத்திக் கேட்ட பின்னர் அவர் கூறுகையில், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கோரி புகார் மனு அளித்துள்ளேன் என்றார். யாரால் ஆபத்து என்று கேட்டபோது, அவரால்தான் என்றார் கிருத்திகா.
அவரால் என்று அவர் குறிப்பிடுவது ராஜகோபாலைத்தான் என்று தெரிகிறது.
மேலும், அவரது கையில் ரத்தக் காயமும் காணப்பட்டது. இடது கையில் காணப்படும் அந்தக் காயம் எப்படி ஏற்பட்டது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, குறுக்கிட்ட அவரது வக்கீல் யானை ராஜேந்திரன், இதுகுறித்த முழு உண்மைகளும் விரைவில் வெளி வரும் என்று புதிர் போட்டார்.
இதேபோல உள்துறைச் செயலாளரையும் சந்தித்து மனு கொடுத்துள்ளாராம் கிருத்திகா.
நேற்று முன்தினம்தான் சரவணபவன் ராஜகோபால், ஆணையரை சந்தித்து ஒரு மனு கொடுத்து விட்டுச் சென்றார். அவர் எதற்காக மனு கொடுத்தார் என்பது தெரியவில்லை.
ராஜகோபாலுக்கும், கிருத்திகாவுக்கும் இடையே சொத்து தொடர்பாக பெரும் பிரச்சினை உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
ஜீவஜோதி கடத்தல் வழக்கிலிருந்து சமீபத்தில்தான் ராஜகோபால் விடுதலையானார் என்பது நினைவிருக்கலாம்.