தமிழகத்தில் ரூ.2000 கோடியில் சோலார் தொழிற்சாலை
சென்னை: சூரிய ஒளியி்ல் இருந்து மின்சாரம் தயாரிக்க உதவும் போட்டோ வோல்டிக் சிலிகான் பிலிம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ரூ.2,000 கோடியில் தமிழகத்தில் தொடங்கப்படுகிறது.
அமெரிக்காவின் சிக்னட் சோலார் நிறுவனம் இதை அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னையையடுத்த ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புக் கிடைக்கும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் திரிபாதி, தொழில் துறை செயலாளர் பரூக்கி, கூடுதல் செயலாளர் தீரஜ்குமார், சிக்னட் சோலார் நிறுவன தலைவர் பிரபு கோயல், துணைத் தலைவர் கேசவ் பிரசாத், இயக்குனர் ராஜேஷ் ஜெயின் ஆகியோர் உடனிருந்தனர்.
ஒப்பந்தம் கையெழுத்தான பின் நிருபர்களிடம் பேசிய பிரபு கோயல், தமிழக அரசு மிகச் சிறப்பாகவும், மிக வெளிப்படையாகவும் செயல்படுகிறது.
தொழில்துறையினருக்கு உறுதுணையாக உள்ளது. இதனால் தான் தமிழகத்தை தேர்ந்தெடுத்தோம். இந்த தொழிற்சாலை 2010ம் ஆண்டு முதல் உற்பத்தியைத் தொடங்கும் என்றார்.