• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிரஞ்சீவிக்கு ஜாதி ரீதியாக 'செக்' வைக்கும் காங்கிரஸ்

By Staff
|

Chiranjeevi
ஹைதராபாத்: அரசியல் கட்சி தொடங்கும் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜாதி ரீதியாக செக் வைக்கும் வகையில், சிரஞ்சீவியின் ஜாதியைச் சேர்ந்த ஒருவரை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளார் சோனியா காந்திய

ஆந்திர மாநில அரசியல் வானில் புதிய நட்சத்திரமாக ஜொலிக்க தயாராகி விட்டார் சிரஞ்சீவி. சிரு என்றும ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சிரஞ்சீவி எப்போது அரசியலுக்கு வருவார் என்று, இங்கு ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதைப் போல ரொம்ப காலமாக சிரஞ்சீவி ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரஜினி எதுவும் சொல்லாமல் டபாய்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை உறுதி செய்து விட்டார். தெலுங்குப் புத்தாண்டு தினமான உகாதியன்று அவரது அரசியல் கட்சி உதயமாகவுள்ளது.

அவரது அரசியல் பிரவேசம் ஆந்திர மாநில அரசியல் கட்சிகளிடையே சற்றே கிலியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், சிரஞ்சீவிக்கு உள்ள ரசிகர் படை.

சிரஞ்சீவி ஆந்திராவில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. ராமாராவுக்குப் பிறகு சிரஞ்சீவிக்குத்தான் அங்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதன் காரணமாக சிரஞ்சீவியால் தங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணக்கு போட்டுப் பார்க்க ஆரம்பித்துள்ளன அரசியல் கட்சிகள்.

மேலும், சிரஞ்சீவியை எப்படி சமாளிப்பது என்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன.

குறிப்பாக காங்கிரஸ் படு ஜாக்கிரதையாக பல காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. அதில் ஒரு கட்டமாக மாநில காங்கிரஸ் தலைவராக ஆந்திர உயர் கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீனிவாசன், பிற்பட்ட பிரிவான காபு சமூகத்தைச் சேர்ந்தவர். இதே பிரிவைச் சேர்ந்தவர்தான் சிரஞ்சீவியும். இதன் மூலம் ஜாதி ரீதியாக சிரஞ்சீவி வாக்குகளை அள்ளி விடாமல் செக் வைக்க முடியும் என காங்கிரஸ் கருதுகிறது.

அதேசமயம், ஸ்ரீனிவாசன், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர். எனவே தெலுங்கானாவை காங்கிரஸ் புறக்கணிக்கவில்லை என்பதை இது காட்டும்.

மேலும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் செக் வைக்க முடியும். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் 18 எம்.எல்.ஏக்களும், 4 எம்.பிக்களும் ராஜினாமா செய்துள்ளதால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பபடும் சூழ்நிலை எழுந்துள்ளது. அந்த இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஸ்ரீநிவாசன் நியமனம் உதவியாக இருக்கும் எனவும் காங்கிரஸ் கருதுகிறது.

சீறுவாரா சிரு?:

ஆனால் ஸ்ரீனிவாசன் நியமனத்தால் சிரஞ்சீவி கட்சிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்று அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.

சிரஞ்சீவி நேரடி அரசியலில்தான் இன்னும் ஈடுபடாமல் இருக்கிறார். ஆனால் பல்வேறு சமூக சேவைகள், ரத்ததானம், கண்தானம் உள்ளிட்ட செயல்களின் மூலம் ஏற்கனவே மக்கள் மனதைக் கவர்ந்து விட்டார். சிரஞ்சீவி சாதி, மத கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டவர். அவரை ஜாதி ரீதியாக சமாளிக்க முயற்சிப்பது பலிக்காது என்று சிரஞ்சீவி தரப்பு கூறுகிறது.

அதேசமயம், என்.டி.ஆர். சாதித்தது போல சிரஞ்சீவியால் சாதிக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்று ஆந்திர அரசியல் நோக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

என்.டி.ஆர். அதிரடியான அரசியல்வாதி. முடிவெடுத்து விட்டால் அதை முடிக்காமல் விட மாட்டார், யாருக்கும் அஞ்ச மாட்டார். மிகவும் துணிச்சலானவர். ஆனால் அவருக்கு அப்படியே நேர் மாறானவர் சிரஞ்சீவி.

ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு பல முறை யோசிப்பவர் சிரஞ்சீவி. துணிந்து இறங்க மாட்டார். ரிஸ்க் எடுக்க தயங்குவார். என்.டி.ஆரைப் போல தீவிரமான நபர் இல்லை என்று சிரஞ்சீவியின் பலவீனங்களை அவர்கள் அடுக்குகிறார்கள்.

ஒரு சினிமா நடிகராக தான் சம்பாதித்து வைத்துள்ள செல்வாக்கை மட்டும் வைத்து அரசியலில் சாதிக்க முடியாது என்பதை சிரஞ்சீவியும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.

காரணம், என்.டி.ஆர். பெரும்பாலும் புராணப் படங்கள் மூலம்தான் ஆந்திர மக்களை வசீகரித்து வைத்திருந்தார். ஆனால் சிரஞ்சீவி படங்களில் வெறும் மசாலாக்கள்தான் அதிகம். இதனால் இந்த ஆக்ஷன் செல்வாக்கை மட்டும் நம்பி களம் இறங்க முடியாது எனவே அவரும் ஜாதி அரசியலில் களம் இறங்கக் கூடும் என்று ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அவர் சார்ந்த காபு சமுதாயத்தினர் ஆந்திராவில் 3வது பெரும்பான்மை சாதியினர் ஆவர். கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் காபு சமூகத்தினர்தான் மிக மிக அதிகம். தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அதிலும் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் ஆட்சிக்கு வருவதையே காபு சமூகத்தினர் விரும்புவார்கள் என்பதால், சிரஞ்சீவிக்கு காபு சமூக வாக்குகள் பெருமளவில் கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தடுக்கத்தான் காங்கிரஸ் கட்சி முன்யோசனையுடன் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. காபு சமூகத்தினர் இதுவரை காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக அளவில் வாக்களித்து வந்துள்ளனர். இந்தமுறை அது சிரஞ்சீவி பக்கம் போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் ஸ்ரீநிவாசன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸின் ஆப்புகளைத் தாண்டி காபு சமூகத்தின் ஆதரவை சிரஞ்சீவி பெறுவாரா, என்.டிஆர். சாதனையை முறியடித்து புதிய சாதனை படைப்பாரா, அதிரடி அரசியல்வாதியாக மிளிர்வாரா என்று பல்வேறு கேள்விகள் ஆந்திர அரசியல் வட்டாரத்தை வலம் வந்து கொண்டுள்ளன. அத்தனை கேள்விகளுக்கும், சிரஞ்சீவியின் புதிய கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X