தெருப் பெயர் மாற்றத்தால் திண்டுக்கல்லில் பதற்றம்
திண்டுக்கல்: தெரு பெயரை மாற்றியதால் திண்டுக்கல்லில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இது தொடர்பாக மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி 70 பேரை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியி்ல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த தெருவில் 'ஈத்கா பள்ளிவாசல் தெரு' என்று புதிய பெயர் பலகையை வைத்துள்ளனர்.
இதனால் கடந்த 2 நாட்களாக பிரச்னை நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்து முன்னணி சார்பில் அங்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் அந்நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதிதர மறுத்தனர்.
அந்த பகுதியில் சர்ச்சையைக் கிளப்பிய புதிய பெயர் பலகையையும் போலீசார் அகற்றினர். அந்த பலகையை வைத்தது தொடர்பாக கணவாசையது, அக்பர்அலி, அப்துல்ரக்மான், ஹக்கீம், உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்கக்கோரி நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் நடந்தது. இதில், பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை விடுவித்தனர்.
இந்தநிலையில் அங்கு தொடர்ந்து பதற்ற சூழ்நிலை இருந்ததால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நள்ளிரவில் இந்து முன்னணியின் மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன், வினோத்குமார், ஆனந்த், நாகராஜ், விஜயகுமார், சந்திரசேகர், பாண்டி, வீரணன், மற்றொரு வீரணன் ஆகிய 9 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய முயன்றனர்.
கைது செய்தவர்களை விடுவிக்காத நிலையில் போராட்டத்தை கைவிட மக்கள் மறுத்தனர். மாலை 5 மணியளவில் பேச்சு நடத்தலாம் என்று திண்டுக்கல் கோட்டாட்சியர் பேச்சியம்மாள், ஏடிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோர் கூறியதையும் ஏற்கவி்ல்லை.
இதைத் தொடர்ந்து, தாடிக்கொம்பு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதுதொடர்பாக பாஜ மாவட்ட பொதுச் செயலாளர் திருமலைபாலாஜி, நகர தலைவர் ஜெயபால் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மறியல் நடந்த சிறிது நேரத்தில் திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு மீண்டும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் அங்கும் சென்று தடியடி நடத்தினர். இதைப் பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர். 2 இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட சுமார் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் நாகல்நகர், பறைப்பட்டி ஆகிய இடங்களில் மறியல் நடப்பதாக தகவல் பரவியதால் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து சென்றனர். ஆனால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.