• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரத்குமாரின் அரசியல் ஸ்டண்ட்-கருணாநிதி தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஓகேனக்கல் திட்டம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து சரத்குமார் மனு கொடுத்தது 'அரசியல் ஸ்டண்ட்' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: ஓகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற கவர்னரிடம் மனு கொடுக்க சில (ஐ.ஏ.எஸ்.) முன்னாள் அதிகாரிகள் சென்றுள்ளார்களே; அந்த மனுவைப் பெற்றுக் கொண்டு; கவர்னர், என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? ஒருவேளை தமிழ் நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பதாக அந்த அறிவார்ந்த அதிகாரிகள் கனவு கண்டிருப்பார்களா?

(முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகனுடன் சென்று ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார் ச.ம.க. தலைவர் சரத்குமார்)

பதில்: இப்போது இந்த ஆட்சியில் என்ன தான் தவறு நடந்து விட்டது? ஓகேனக்கல் திட்டம் கைவிடப்பட்டு விட்டதா?, இல்லை!. அது சம்பந்தமான கிளர்ச்சிகளும், வன்முறை வெறியாட்டங்களும் - இப்போது தொடர்ந்து நடந்தால்; அது கர்நாடகா சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது மேலும் அராஜகங்கள் நடந்து இரு மாநில மக்களையும் பாதிக்கும் என்பதால்- அந்தத் தேர்தல் நடந்து முடியும் வரையில் கிளர்ச்சிகளுக்கோ, போராட்டங்களுக்கோ இடம் தராமல் அமைதி காப்போம் என்று வேண்டுகோள் விடுத்தது கோழைத்தனமா? அல்லது துரோகமா?

இதோ ஒகனேக்கல் திட்டத்தை; கட்டம் கட்டமாக எப்படி நிறைவேற்றுவது என்று ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்- அந்தப் பணிகளுக்கான அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் புரிந்து கொள்ளாமல் சில அவசரக்காரர்கள்; 'மாலையிலே ஒப்பந்தம்- நள்ளிரவு திட்டம் தொடக்கம்- மறுநாள் காலையிலே திறப்பு விழா' என்பது போல 'மந்திரத்திலே மாங்காய் விழச் செய்வோம்' என்கிறார்களே.

அவர்கள் ஓகேனக்கல் திட்டம் நிறைவேறிடத் தேதி வாரியாக செய்து கொள்ளப்பட்ட அட்டவணையைப் படித்துப் பார்த்து, அதன் பிறகாவது விஷயத்தைப் புரிந்து கொள்வார்களாக!.

இதோ அந்த மாதாந்திரவாரியான ஓகேனக்கல் திட்ட செயல்பாட்டு கால அட்டவணைக் குறிப்பு:

1. திட்ட மேற்பார்வை ஆலோசகர் நியமனம் (இது போன்ற திட்டங்களுக்கு இந்த நியமனம் தான் முதலில் செய்யப்பட வேண்டும்) இவரை நியமிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது- பிப்ரவரி 2008. ஒப்பந்தப் புள்ளி பெற இறுதி நாள்- மார்ச் 2008. இதைப்பற்றி முடிவெடுத்தல்- ஜூலை 2008.

2. விரிவான திட்ட அறிக்கையையும் மற்றும் ஒப்பந்தப் புள்ளி ஆவணங்களையும் திட்ட மேற்பார்வை ஆலோசகர் ஆய்வு செய்தல்- அக்டோபர் 2008.

3.ஓகேனக்கல் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோருதல்-டிசம்பர் 2008.

4. திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை பரிசீலனை செய்து, முடிவெடுத்து திட்டத்தைத் தொடங்குதல்- மார்ச் 2009.

5. திட்டம் முடிவடைதல் -டிசம்பர் 2012.

இவ்வாறு ஓகேனக்கல் திட்டத்திற்கான பேச்சுவார்த் தையின்போது, ஒவ்வொரு பணிக்குமான காலக்கெடு குறிக்கப்பட்டு; 2012 டிசம்பர் மாதம் தான் திட்டம் முடிவடையும் என்றிருக்கும்போது,

சில அவசரக்காரக் கட்சித் தலைவர்கள் (சரத்குமார்) அரசியலிலும் 'ஸ்டண்ட்' என்று ஆரம்பித்தால் அது நடக்கிற காரியமா என்பதை ஆர அமர உட்கார்ந்து ஆலோசித்திட வேண்டாமா?

கேள்வி: மத்திய அரசு ரூ. 60,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி அறிவித்திருப்பதை பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மயக்கமாக இருந்தவருக்கு தண்ணீர் தெளித்தது மாதிரி என்று கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும்போது, மருத்துவத்துக்கு முதல் உதவி எவ்வளவு அவசியமோ, அது செய்யப்பட்டுள்ளது என்று சொல்லியிருந்தீர்கள். மயக்கத்துக்கு காரணம் கண்டுபிடித்து அதற்கு மருந்து அளிக்க வேண்டுமென்றும், முதலுதவியுடன் நின்று விடக் கூடாதென்றும் மீண்டும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: கடன் ரத்து செய்வதோடு நின்று விடாமல், தொடர்ந்து அவர்கள் மீண்டும் கடன் பெறவும், வேளாண்மை அபிவிருத்திக்கான பல்வேறு உதவிகளையும், சலுகைகளையும் செய்வதும் தான் முதல் உதவிக்குப் பிறகு முறையே மருந்து கொடுக்கும் காரியங்கள். அந்தப் பணிகளும் முறையாக மத்திய, மாநில அரசுகளால் செய்யப்பட்டுத்தானே வருகின்றன!.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X