
அண்ணா நகர் டவர் பூங்காவில் காதலர்களுக்கு தடை

சென்னை நகரில் கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் முன்பெல்லாம் காதலர்கள் கூட்டம் நிரம்பி வழியும். மடி மீது படுத்தபடியும், குடைகளால் தங்களது முகத்தை மறைத்துக் கொண்டும், துப்பட்டாவுக்குள் புதைந்து கொண்டும் சில்மிஷங்களில் ஈடுபடுவது சகஜமான காட்சியாக இருந்தது.
இவர்களின் லீலைகளை ஒரு பெரும் கூட்டமே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் கொடுமையும் நடக்கும். மெரீனா கடற்கரையில் இத்தகைய காட்சிகளை இப்போது காண முடியாது. காரணம், போலீஸார் போட்டுள்ள தடை.
மெரீனா போன்ற பொது இடங்களில் நல்ல இடைவெளி விட்டு அமர்ந்து பேச வேண்டும். சில்மிஷங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் போட்ட பொடாவால் காதலர்கள் இப்போது சமர்த்தாக அமர்ந்து பேசி விட்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், அண்ணா நகரில் உள்ள பிரபல விஸ்வேஸ்வரய்யா டவர் பிளாக் பூங்காவிலும் இந்த தடை உத்தரவை போலீஸார் அமல்படுத்தியுள்ளனர்.
மேற்கு அண்ணா நகரில் உள்ள இந்தப் பூங்கா பரந்து விரிந்துள்ளது. இப்பகுதி மக்களின் ஒரே பொழுது போக்கு இடம் இதுதான். இந்தப் பூங்காவில் உள்ள உயரமான கோபுரம், பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளது.
பூங்காவுக்குள் ஏராளமான செடிகள், புதர்கள் இருப்பதால் காதலர்கள் என்ற பெயரில் பலர் வேறு வேலைகளில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பூங்காவுக்கு வாக்கிங் வருவோர், குடும்பத்தோடு பொழுதைக் கழிக்க வருவோர், பெண்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக போலீஸாருக்கு புகார்கள் பறந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி புதர்களுக்குள் புதைந்து கிடந்த பல ஜோடிகளை வெளியே கொண்டு வந்து வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
அப்படியும் கூட சில்மிஷ ஜோடிகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த நிலையில் காதலர்களுக்கு இப்போது போலீஸார் தடை விதித்துள்ளனர். இனிமேல் திருமணமானவர்கள், குடும்பத்தினர், குழந்தைகள் மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர். காதலர் ஜோடி என்ற பெயரில் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. ஒருவேளை உண்மையான காதல் ஜோடியாக இருந்தால் எந்தவித சேட்டைகளும் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன், உள்ளே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பூங்கா நுழைவாயிலில் ஒரு காவலர் பணியில் அமர்த்தப்படவுள்ளார். அவர் பூங்காவுக்கு வருவோர் குறித்த தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்வார். சந்தேகத்திற்கிடமான வகையில் வரும் நபர்களை அவர் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று போலீஸ் படை ஒன்று பூங்காவில் ரெய்டு நடத்தி, மெய் மறந்த நிலையில் இருந்த பலஜோடிகளை தட்டி எழுப்பி எச்சரித்து அனுப்பி வைத்தது.
பூங்கா என்பது பொதுமக்கள் வந்து செல்லும் இடம். அனைத்து வயதினரும் வரும் ஒரு இடம். இங்கு அநாகரீகமாகவும், அசிங்கமாகவும் நடந்து கொள்வது கடும் கண்டனத்துக்குரியது. இனிமேல் அண்ணா நகர் பூங்காவில் இதுபோன்ற அலங்கோலக் காட்சிகள் இடம் பெறாது என்று காவல்துறை பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.