For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசுக்கு ஆதரவு 'வேஸ்ட்'- தாஸ்குப்தா பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்ட மத்திய அரசுக்கு இடதுசாரிகள் அளித்த ஆதரவின் நோக்கம் அர்த்தமில்லாமல் போய்விட்டது. பிரதமர் மன்மோகன் திராணி அற்றவராகிவிட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்பி குர்தாஸ் தாஸ்குப்தா சாடியுள்ளார்.

லோக்சபாவில் இன்று விலைவாசி பிரச்னை குறித்த விவாதத்தை தொடங்கிவைத்து உறுப்பினர் குர்தாஸ் தாஸ்குப்தா பேசுகையில்,

'ஆன்லைன் வர்த்தகத்தி்ல அத்தியாவசிய உணவுப் பொருளை அனுமதித்ததன் மூலம் உலக பங்கு வர்த்தகர்களிடம் இந்திய உணவு பொருளாதாரத்தை மத்திய அரசு அடகு வைத்துவிட்டது. அதிகரித்துவரும் விலைவாசி ஏற்றத்தையும் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது.

இது முற்றிலும் வெட்கக்கேடான விஷயம். கேட்டால், உலக அளவில் அத்தியாவசிய உணவுப் பொருள்களும், முக்கிய பண்டங்களும் விலை உயர்வதால் அதன் விளைவு இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்திருப்பதாக பிரதமர் மன்மோகன் பீதியை கிளப்பியுள்ளார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த திராணியற்றவர் பிரதமர் மன்மோகன் என்பது இதன் மூலம் தெரியவில்லையா?

இன்றைக்கு அரசாங்கம் என்ற ஓர் அமைப்பே நாட்டில் இல்லை. இந்த அரசாங்கம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். பதுக்கல்காரர்கள், பணம் கொழிப்பவர்களிடம் பொதுமக்கள் சிக்கி சீரழிவதை தடுக்கும் அரசாங்கம் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இது.

மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்துவரும் மத்திய அரசின் அத்தியாவசிய உணவுத் தொகுப்பின் அளவை குறைத்து விட்டனர். மளமளவென அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் வறட்சி, பஞ்சம் ஏற்பட்டு உணவுக்காக கலவரம் ஏற்படும் அபாயம் உண்டாகும்.

பருப்பு, தானியங்கள், சமையல் எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அடித்தட்டு மக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைக்கு ரூ.20 கொடுத்தால் தான் வெறும் சப்பாத்தி, பருப்பு மற்றும் ஒரு காய்கறிக்கூட்டுதான் வாங்கிச் சாப்பிட முடியும். அதற்குகூட போக்கற்ற ஏழைகள் ஏராளமாக இந்தியாவில் உள்ளனர்.

உணவுப் பொருள் சப்ளை அதிகரித்துள்ள நிலையில் பாமர மக்களுக்கு கிடைக்கும் அளவுமட்டும் குறைந்துள்ளது. அப்படியென்றால் பதுக்கல் அதிகரித்துவிட்டது என்றுதானே அர்த்தம்?

பொது விநியோகத் திட்டமா, அப்படியென்றால் என்ன? என்று கேட்கும் நிலையில் அந்தத் திட்டத்தின் செயல்பாடு முடங்கிவிட்டது.

வேளாண் உற்பத்தியை பெருக்க ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு முயலவில்லை. உணவு மானியம் குறைப்பு, பயிர் கடன் வழங்குவதில் தேக்கம், விவசாயத்தில் குறைந்துவரும் பொதுத்துறை முதலீடு ஆகிய விஷயங்களால் உணவு உற்பத்தி அருகி விட்டது.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கொள்முதலை முந்தைய பாஜக அரசு தனியார்மயமாக்கியது. இதை ரத்து செய்யப்போவதாக அறிவித்துதான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணவீக்கம் 7.41 சதவீதத்தையும் கடந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பொருட்களின் மொத்தவிலை குறியீட்டுக்கும் சில்லறை விலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத நிலையாக உள்ளது. இதனால் அப்பாவி பொதுமக்கள்தான் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கான காரணங்களையும் அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட கொள்கை முடிவுகளி்ல் இருந்த தவறுகளையும் தாஸ் குப்தா பட்டியலிட்டதோடு இடதுசாரிகளின் அதிருப்தியையும் வெளியிட்டார்.

தாஸ் குப்தாவின் இந்த தீப்பொறி பேச்சால் லோக்சபாவில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X