ஓகேனக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்-ஸ்டாலின்
சென்னை: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. எந்தக் காரணம் கொண்டும் இந்தத் திட்டம் தாமதமாகாது என அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இன்று உள்ளாட்சிதுறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு ஸ்டாலின் பதிலளித்துப் பேசியதாவது:
நான் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு 2 முறை இந்தத் துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசி இருக்கிறேன். ஆனால், அந்த 2 முறையும் அதிமுக வெளிநடப்பு செய்தது. ஆனால் இம்முறை எனக்கும், இந்த துறைக்கும் மதிப்பளித்து முதல்முறையாக அதிமுகவினர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளில் ஊராட்சி, நகராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட பெரும் பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புறங்களுக்கும், ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த திட்டம் இந்தியாவின் மிகப் பெரிய குடிநீர் திட்டம்.
முதல்வர் இந்தத் திட்டம் பற்றி குறிப்பிடும்போது ஒருவேளை ஜப்பான் நிதி கிடைக்காவிட்டாலும் அரசே ஏற்று செயல்படுத்தும் என்று கூறியுள்ளார். அந்த அளவு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அட்டவணையையும் முதல்வர் வெளியிட்டுள்ளார். எந்தக் காரணம் கொண்டும் ஓகேனக்கல் திட்டம் தாமதமாகாது.
சென்னைக்கு கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார் ஸ்டாலின்.