For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமல்-ஜாக்கி சான் ஒற்றுமைகள்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கமலஹாசனுக்கும், ஜாக்கிசானுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து சிலாகித்தார் முதல்வர் கருணாநிதி.

தசாவதாரம் திரைப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கேசட்டை முதல்வர் வெளியிட அதை ஜாக்கி சான் பெற்றுக் கொண்டார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

ஒரு நாள் என் இல்லத்திற்கு காலை நேரத்தில் கமல் வந்தார். தசாவதாரம் படத்தைப்பற்றி பேசும்போது இதுவரையில் எடுத்திருக்கின்ற புகைப்பட ஸ்டில்களை என்னிடத்திலே காட்டினார். நான் பார்த்தது படமல்ல, புகைப்படங்கள்தான். ஸ்டில்கள்தான்.

அந்த ஸ்டில்களில் கமல் மாத்திரமல்ல, ஒரு வேதியர், ஒரு அமெரிக்க நாட்டு அதிபர், தமிழகத்தின் தலைவர் என்று இப்படி கமல் 10 உருவங்கள் கமல் ஒப்பனையால் அந்த படங்களில் விளங்கிய காட்சிகளை கண்டேன்.

ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது, இது யார், யாரைப்போல என்று கமலைக் கேட்டு தெரிந்து கொண்டேன். அவ்வளவு இயற்கையாக, அற்புதமாக அப்படியே அச்சாக ஒப்பனை செய்யப்பட்டிருந்த அந்த காட்சியை கண்டு நீங்கள் பெருமையாகக் கருதினாலும் சரி அல்லது கேலியாக கருதிக் கொண்டாலும் சரி அல்லது பாசத்தின் உச்ச கட்டமாக கருதிக் கொண்டாலும் சரி அல்லது கலைத் திறனை இந்த கருணாநிதி எப்படியெல்லாம் ரசிக்கிறான் என்று தெரிந்து கொண்டாலும் சரி கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்.

நான் முத்தம் கொடுத்தது எனக்கே தெரியாது. அவ்வளவு மெய் மறந்து போனேன். அந்தப் படங்களை பார்த்து அப்போதே சொன்னேன். ஸ்டில்களே இப்படி இருந்தால் படம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கிறேன் கமல் என்று நான் என்னுடைய உணர்வுகளை அன்றைக்கு வெளிப்படுத்தினேன்.

தசாவதாரத்தில் முதல் காட்சியாக ராமானுஜரை, நீ இனிமேல் நாராயணா என்று சொல்லக்கூடாது, பரமசிவத்தின் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்று மன்னன் வற்புறுத்துகிறான். அதற்கு இணங்க மறுத்த ராமானுஜர், தன்னுடைய மனைவி, மக்கள், குடும்பம், உற்றார், உறவு என்ற அத்தனை பேருடைய கெஞ்சுதலுக்கும் இணங்காமல் தியாகத்திற்கு தயாராகிறார்.

நான் தியாகம் செய்தாலும் செய்வேன். என்னுடைய உயிருக்குயிராக எந்த பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றேனோ, அந்த பெயரை நான் மறக்க மாட்டேன், அதை மாற்றிச் சொல்ல மாட்டேன் என்று அதே பெயரைத்தான் அவருடைய கொள்கை வெறியை, அவருடைய வைராக்கியத்தை புலப்படுத்துகிற வகையில் அந்த காட்சி அமைந்திருக்கிறது.

அப்போது என்னிடத்தில் கமல் சொன்னார். கொள்கை மாறக்கூடாது, ஒருவர் ஒரே நிலையில் இருக்க வேண்டும். மனதிலே சஞ்சலம் ஏற்படக்கூடாது என்ற உறுதிக்கு நீங்கள் கொண்டிருக்கின்ற கொள்கை உரத்திற்கு இது பக்தி கலந்த காட்சியாக இருந்தாலும் கூட, இந்த காட்சியின் மையம் அத்தகையப் பொருளைத் தருகிறதா அல்லவா என்று கேட்டார்.

நான் எண்ணிக்கொண்டேன். ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம், தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் இடம்பெயராமல், இதயம் மாறாமல், கொள்கை கோணாமல், அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்ற ஆதங்கத்தோடு தான் இந்த படத்தை நான் புகழ்ந்து கொண்டே வெளிவந்தேன்.

கமலஹாசனுக்கும், ஜாக்கிசானுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு

கமலஹாசன் பிறந்த ஆண்டும் 1954. ஜாக்கிசான் பிறந்த ஆண்டும் 1954. கமலஹாசன் பிறந்தது 7.11.1954. ஜாக்கிசான் பிறந்தது 7.4.1954. ஆக இருவரும் பிறந்தது 7ம் தேதிதான். கமலைவிட ஜாக்கிசான் சரியாக 7 மாதங்கள் தான் மூத்தவர். கமல் தனது 6-வது வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் முதன் முதலாக நடித்தார்.

ஜாக்கிசான் அவருடைய 8வது வயதில் "பிக் அண்ட் லிட்டில் வாங்க்டின் பார்'' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார்.

ஜாக்கிசான் நடித்த புகழ் பெற்ற படங்கள் ஆர்மர் ஆப் காட், போலீஸ் ஸ்டோரி', ரஷ் அவர் போன்றவை. ஜாக்கிசான் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். கமல் இதுவரையில் 240 படங்களில் நடித்திருக்கிறார்.

ஜாக்கிசான் தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதாக அவரைப்பற்றிய புத்தகத்திலே நான் படித்து பார்த்தேன். உங்களுடைய பெற்றோரை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே வணங்கி விடுங்கள். இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்கு சென்று வணங்குவதை விட இது சிறந்தது.

இன்னொன்று, உலகமே ஜாக்கிசானை சூப்பர் ஹீரோ என்று அழைத்தாலும் கூட, அவர் தன்னுடைய ஹீரோ யார் என்று சொல்லிக் கொண்டாரென்றால் காவல் துறையைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக தீயணைப்பு படை வீரர்களையும் தான் நான் நிஜ ஹீரோக்கள் என்பேன். உயிருக்கு உலை வைக்கும் வேலையில் இருந்து கொண்டு இவர்கள் ஆற்றும் சமுதாய பணி பாராட்டுக்குரியது என்று சொன்னவர் ஜாக்கிசான்.

களத்தில் குதிப்போம்-வெற்றியை குவிப்போம் இதுவே ஜாக்கிசானின் தாரக மந்திரமாக போற்றப்படுகிறது.

அவருடைய சண்டைக்குழுவில் புதிதாகச் சேருபவர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் எடுபிடி வேலைகள் தான் தரப்படுமாம். அவர் சொல்கிறார்.

எனது குழுவினரை என் குழந்தைகள் போல் காப்பேன். அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் நான் தான் பொறுப்பு. உண்மையான அக்கறை செலுத்துவதால் நான் என்ன சொன்னாலும் அதை என் ஆட்கள் செய்கிறார்கள். கட்டிடத்திலிருந்து குதித்து கீழே காரில் கண்ணாடியில் தலைக்குப்புற விழ வேண்டுமானாலும் தயங்காமல் மறு நொடியே செய்வார்கள். ஆனால் ஒன்று என்னால் செய்ய முடியாத எவ்வித சண்டைக் காட்சிகளையும் அவர்களை விட்டு நான் செய்யச் சொல்வதில்லை என்று ஜாக்கிசான் கூறியிருக்கிறார்.

இவருடைய பிறப்பு, வளர்ப்பு இரண்டுமே அதிசயமானது, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, படித்தறிந்து தெரிந்து கொள்ளவேண்டியது.

சார்லஸ்-லீலீசான் தம்பதியருக்கு ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் என்னும் இடத்தில் பிறந்தவர் ஜாக்கிசான். ஜாக்கிசானின் தந்தையிடம் பிரசவ சிகிச்சையின் செலவான 500 ஹாங்காங் டாலர்களை கொடுக்க முடியாத நிலையில் அந்தக் குடும்பம் தடுமாறியது. அவருடைய பெற்றோர்களுக்கு அவர் பிறந்த போது பிரசவ செலவிற்காக மருத்துவர்களுக்கு 500 ஹாங்காங் டாலர்களை கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு, என்ன செய்வதென்று தடுமாறியபோது, அப்போது மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர், ஜாக்கிசானின் தந்தையிடம் எத்தனையோ பேருக்கு பிரசவம் பார்க்கும் எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. மருத்துவ செலவுத் தொகையை நானே கட்டிவிடுகிறேன். மேலும் 1500 டாலர் தருகிறேன். உங்கள் மகனை தத்து கொடுத்து விடுங்கள் என்று கேட்டார்.

ஜாக்கிசானின் தந்தை இரண்டொரு நாளில் பதில் கூறுவதாகச் சொல்லிவிட்டு வந்தார். ஆனால் உறவினர்கள் எல்லாம் கண்டித்தனர். நண்பர்கள் பண உதவி செய்ய முன்வந்தனர். அதனைக் கொண்டு மருத்துவமனையிலே பணத்தைக் கொடுத்து விட்டு குழந்தையுடன் வீடு திரும்பினார். இது நடக்காமல் போயிருக்குமேயானால் இன்றைக்கு நாம் ஜாக்கிசானை காண முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே உலகத்தில் அதிசயங்கள், ஆச்சரிய நிகழ்வுகள், எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுவதால் உலகுக்குக் கிடைக்கக்கூடிய பல நன்மைகளில் இதுவும் ஒன்று. அப்படி கிடைத்த நன்மைகளிலே ஒன்றுதான் நம்முடைய நண்பர் ஜாக்கிசான் ஆவார்.

நம்முடைய கலைஞானி கமலஹாசனுடைய புகழ் கிரீடத்தில் இன்னும் ஒரு முத்து பதிக்கப்பட்டது போன்ற விழா, இந்த விழா என்று கூறி, கமலை வாழ்த்தி, இந்த படம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, வாரக்கணக்கில் அல்ல, மாதக்கணக்கிலே, வருடக்கணக்கிலே தமிழகத்திலே மாத்திரமல்ல, இந்தியத் திருநாட்டிலும், வெளியிலே உள்ள பகுதிகளிலும் இந்த படம் வெற்றிபெற்று நடைபெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகளை உங்களுடைய வாழ்த்துகளோடு இணைந்து கமலுக்கு வழங்கி விடைபெறுகிறேன்.

முன்னதாக முதல்-அமைச்சர் நிவாரணநிதிக்காக ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் வழங்கிய ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நடிகர் ஜாக்கிசான் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X