For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை கத்திரி வெயில் தொடக்கம்-25 நாட்களுக்கு வறுக்கும்!

By Staff
Google Oneindia Tamil News

Summer Road
சென்னை: தமிழகத்தில் கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் நாளை தொடங்குகிறது. 25 நாட்களுக்கு அனல் காற்றும், கடும் வெயிலும் வாட்டி வதைக்கவுள்ளதால் மக்கள் பெரும் கவலையுடன் காணப்படுகின்றனர்.

தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த அடுத்த நாளே கடும் வெயில் தலை காட்டத் தொடங்கி விட்டது. தொடர்ந்து வெளுத்து வாங்கி வரும் வெயிலுக்கு மத்தியில் அவ்வப்போது கன மழையும் வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் மிகக் கடுமையாக உள்ளது. நர்கீஸ் புயலின் தாக்கத்தையே ஓரம் கட்டும் வகையில் வெயில் வெளுத்து வாங்கியது.

நேற்று தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தியது. அதிகபட்சமாக அரக்கோணத்தால் 108 டிகிரியாக வெயிலின் அளவு இருந்தது. வேலூரில் 106 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது.

சென்னை நகரில் 105 டிகிரிக்கு வெயில் இருந்தது. கடலூர், திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் 104 டிகிரியாக வெயில் இருந்தது.

இந்த நிலையில், நாளை முதல் கத்திரி தொடங்குகிறது. நாளை முதல் 25 நாட்களுக்கு அதாவது மே 28ம் தேதி வரை கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கும்.

கடும் வெயில், அனல் காற்று என இந்தக் காலகட்டம் மிகக் கடுமையாக இருக்கும். எனவே மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருப்பது நல்லது.

எப்படி சமாளிக்கலாம்?

கத்திரி வெயிலின்போது சன் ஸ்டிரோக்-தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெயிலில் செல்லும்போது முடிந்த அளவுக்கு பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. உடலை முடிந்த வரை மூடும் அளவுக்கு உடைகள் இருக்க வேண்டும்.

நீண்ட நேரம் வெயிலில் இருக்குமாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், மோர், இளநீர், ஜூஸ் உள்ளிட்டவற்றை அடிக்கடிப் பருகுவது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

காலையில் 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் மிகக் கடுமையாக இருக்கும். அந்த நேரத்தில் வெளியில் நடமாடுவதை முடிந்த வரை குறைத்துக் கொள்வது நல்லது. போயே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால் போதிய தற்காப்பு ஏற்பாடுகளுடன் செல்வது உடலுக்கு நல்லது.

குழந்தைகள், இருதய நோயாளிகள்தான் இந்த கால கட்டத்தில் மிக மிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளை தினசரி மறக்காமல் குளிக்கச் செய்ய வேண்டும். வெளியில் போய் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

அம்மை போன்ற வெப்ப நோய்கள் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளை அதிக அளவில் தாக்கக் கூடும். எனவே உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் இளநீர், நுங்கு போன்றவற்றை தரலாம். அதேசமயம், பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்பானங்கள், ஐஸ்வாட்டர் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும், சட்டென சளி பிடித்து அவஸ்தையை ஏற்படுத்தி விடும்.

அதேபோல வெயில் காலத்தில் சில உணவு வகைகளை மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது வெள்ளரி, திராட்சை, தர்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்சு, பார்லி கஞ்சி ஆகியவை வெயிலின் தாக்கத்திலிருந்து நமது உடல் பாதிக்காமல், குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

கேரட், புடலங்காய், கீரை வகைகளும் வெயில் காலத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.

முடிந்தவரை கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதனால் உடல் உஷ்ணம் இன்னும் ஜாஸ்தியாகும், வயிற்றுக் கோளாறுகளுக்கு இது வித்திடும்.

பால் அதிகம் சாப்பிடலாம். ஆனால் டீ, காபி போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

இவையெல்லாம் வெயிலின் வீரியத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள உதவும். எனவே இவற்றையெல்லாம் கடைப்பிடித்து இந்த வருடத்து கத்திரியை வியர்க்க விறுவிறுக்க வரவேற்று, 'இனிதாக' வழியனுப்பி வைப்போம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X