சென்னையில் பதுங்கிய நக்ஸல்கள்-துப்பு தந்தால் ரூ. 1 லட்சம்
சென்னை: கொடைக்கானலில் இருந்து தப்பியோடிய நக்ஸலைட்டுகள் சென்னையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் குறித்த துப்பு கொடு்த்தால் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நக்சல்களைப் பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டம் வருசநாடு, முருகமலை வனப்பகுதி, கொடைக்கானல் மலைப் பகுதிகள், தர்மபுரி காட்டுப் பகுதி, பழனி ஆகிய இடங்களில் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் நவீன் பிரசாத் என்ற நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவருடன் இருந்த காளிதாஸ், தசரதன், சேகர், பெண் டாக்டர் சந்திரா உள்ளிட்ட 8 பேர் தப்பிவிட்டனர்.
தப்பியோடியவர்களில் இருவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் நக்சல் அமைப்பின் கொரில்லா படையின் சீனியர் கமாண்டர் தசரதன், மற்றொருவர் கமாண்டர் சேகர்.
இவர்களைப் பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பழனிமலை பகுதியில் டி.ஐ.ஜி. கிருஷ்ண மூர்த்தியின் மேற்பார்வையில் 120 அதிரடி படை போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பழனி மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி, பாச்சலூர், பண்ணைகாடு, பொள்ளாச்சி, மறையூர் பகுதிகளில் அதிரடிப்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் வழக்கமாக நக்ஸல்கள் நடமாடும் பகுதிகளில் போலீசாரின் வேட்டை தீவிரமடைந்துள்ளதால் தப்பியோடியவர்கள் சென்னைக்குள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள மேன்சன்கள், லாட்ஜ்கள், மாணவர்கள், வாலிபர்கள் தனியே தங்கியுள்ள வீடுகள், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர்களை க்யூ பிராஞ்ச் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சில இடங்களில் சோதனைகளும் நடந்துள்ளன.
இது குறித்து க்யூ பிராஞ்ச் எஸ்பி அசோக்குமார் கூறுகையில்,
காளிதாஸ், சேகர், சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் எந்த நக்சல்ளும் போலீசிடம் சிக்கவில்லை.
காளிதாஸ், சேகர் ஆகிய நக்ஸலைட்டுகள் பற்றிய துப்பு தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும். அவர்கள் சென்னையில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து அவர்களை தேடி வருகிறோம் என்றார்.