
சென்னையில் கடும் வெயிலுக்கு 3 பேர் பலி
சென்னை: சென்னையில் கடும் வெயிலுக்கு 3 முதியவர்கள் பலியாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அக்னி வெயில் மண்டையைப் பிளக்கிறது. கடந்த 3ம் தேதி தொடங்கிய அக்னி வெயில் தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. பல பகுதிகளில் அனல் காற்றுடன் கடும் வெயில் அடிப்பதால் மக்கள் புழுங்கித் தவித்து வருகின்றனர்.
இளநீர், குளிர்பானம் என எதைக் குடித்தாலும் அடங்காத தாகம். அருவியாய் கொட்டும் வியர்வை. இப்படி பகல் முழுவதும் கசகசப்பாக கழிக்கும் மக்கள், இரவில் புழக்கத்தில் தவிக்கின்றனர்.
வெயிலுக்கு ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்படுட்டு வருகின்றன. சென்னை கீழ்பாக்கம் ராஜா அண்ணாமலை தெருவைச் சேர்ந்த 73 வயது சாரதாம்பாள் என்ற மூதாட்டி வெயிலில் மயக்கமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல டான்டன் சாலையில், நாணையா என்ற 65 வயது தொழிலாளி, நடுச் சாலையில் உயிரிழந்தார். கீழ்பாக்கம் லட்சுமி தெருவில் 60 வயதான தொழிலாளி ஒருவர் வெயிலில்
மயக்கமடைந்து இறந்துள்ளார்.