
பி.சுசீலா, ஆனந்த்க்கு பத்ம விருது-ஜனாதிபதி வழங்கினார்
டெல்லி: பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பத்ம பூஷண் விருதும் மற்றும் செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷண் விருதையும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த 5ம் தேதி பத்ம விருதுகளை ஒரு பகுதியினருக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் வழங்கினார். மீதி பேருக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தொழிலதிபர்கள் ரத்தன் டாட்டா, லட்சுமி மிட்டல், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. சுனிதா சார்பில் அவரது உறவினர் விருதை பெற்றுக் கொண்டார். இந்தி நடிகை மாதுரி தீட்சித்துக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.