திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். முருகனின் ஜென்ம நட்சத்திர விழாவாக விசாக திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா இன்று நடக்கிறது. திருவிழாவையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடைபெறுகிறது.
மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்.. விழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் கோயில் வாளகத்தில் அடிப்படை வசதிகள், கியூ வரிசை முறை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன் செய்துள்ளார்.