டிவி அதிகாரி கொலை: காதலருடன், கன்னட நடிகை கைது
கன்னடத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் மரிய மோனிகா சூசைராஜ் (27). தற்போது நான்கு கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய காதலர் ஜெரோம் மாத்யூ (25).
மும்பை புறநகர்ப் பகுதியான மலட் என்ற இடத்தில் மரியாவுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு உள்ளது. இங்கு மே 7ம் தேதி நீரஜ் அமர்நாத் குரோவர் (25) என்பவர் மிகக் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி சேதப்படுத்தியிருந்தனர்.
பிணத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தினர். மரியாவின் வீட்டில் குரோவர் பிணமாகக் கிடந்ததால் அவரை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் மரியா தலைமறைவாகி விட்டார். கூடவே அவரது காதலர் மாத்யூவும் தலைமறைவானார்.
இந்த நிலையில் இருவரையும் மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
நீரஜ் குரோவர், சினர்ஜி ஆட்லேப்ஸ் என்ற டிவி நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ஆக இருந்தார். முன்பு பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தில் கிரியேட்டிவ் ஹெட் ஆக இருந்தார்.
முக்கோணக் காதலால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
மாத்யூ கொச்சியில் உள்ள கடற்படைத் தளத்தில், அஸ்ட்ரோநாட்டிகல் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.
கைது செய்யப்பட்ட மரியாவிடமும், மாத்யூவிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.