• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனக்கு ஏன் கூட்டம் கூடுகிறது தெரியுமா?-விஜய்காந்த்

By Staff
|

Vijayakanth
சென்னை: திமுகவும் அதிமுகவும் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு கூட்டம் கூடப் போகிறது, இளைஞர்கள் ஏன் என்னைத் தேடி ஏன் வரப் போகிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

சென்னையில் திருமண நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில்,

திருமண வீட்டிற்கு செல்லும்போது சில விஷயங்களை பேசியாக வேண்டும். ஏனென்றால் இப்போது ஆளுகின்ற, ஆண்ட கட்சிகளெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளிலே பேசி தங்களது கட்சியை வளர்த்துள்ளனர்.

இங்கே என்னை வரவேற்று வழி நெடுக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அலங்கார வளைவுகள் தே.மு.தி.க. தொண்டனின் உழைப்பு. அவனுடைய வியர்வையை பணமாக்கி என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். இது போன்றதொரு வரவேற்பு இதுவரை எந்த கட்சியும் செய்திராதது.

இனிமேல் இதை பார்த்து 40 ஆண்டு, 50 ஆண்டு கட்சிகள் எல்லாம் இதே போல் செய்வார்கள். எல்லாத்துக்கும் தே.மு.தி.க. தான் வழிகாட்டி. அது போலதான் நாம் தேர்தல் அறிக்கையில் கூறியதை ஆளுங்கட்சி செய்து வருகிறது.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி மக்களுக்கு நன்மை செய்தால் எனக்கு ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது. இளைஞர்கள் என்னை தேடி ஏன் வரப் போகிறார்கள். ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் மக்களை மதிக்கவில்லை. சரியாக ஆட்சி செய்யவில்லை.

தொடரும் விலைவாசி உயர்வால் என் தாய்மார்கள் கஷ்டப்படுகிறார்கள். தினந்தோறும் 6 மணி நேரம் மின்சார தடை. கேட்டால் தமிழகத்தில் மின்தடை இல்லை என அறிக்கை விடுகிறார்கள்.

விருத்தாச்சலம் தொகுதியில் மாணவிகள் இலவசமாக கம்ப்யூட்டர் கற்று கொள்ள கணினி மையம் திறந்துள்ளேன். அந்த மாவட்ட மந்திரி தே.மு.தி.க. கம்ப்யூட்டர் மையம் திறக்க யாரும் இடம் தரக்கூடாது என மிரட்டினார். தடுத்து பார்த்தார். அதையும் மீறி எனது கட்சிகாரர்களின் விடா முயற்சியால் கம்ப்யூட்டர் மையம் இயங்கி வருகிறது. உங்களால் நன்மை செய்ய முடியாவிட்டால் விலகி கொள்ளுங்கள். எங்களை ஏன் தடுக்கிறீர்கள்.

போக்குவரத்தை சீர்படுத்த காவல்துறைக்கு நான் கொடுத்த பேரிகார்டுகளையும் பயன்படுத்த மறுக்கிறார்கள். எங்கே விஜயகாந்த் நல்ல பெயர் வாங்கி விடுவானோ என பயப்படுகிறார்கள்.

எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உணர்ச்சியை தடுக்க என் திருமண மண்டபத்தை இடித்தார்கள்.

கிராமத்தில் உள்ள பிள்ளைங்களுக்கும் ஒரு மாதிரியாகவும் நகரத்தில் உள்ளவர்களுக்கு வேறு மாதிரியாகவும் கல்வி கிடைக்கிறது. கிராமப்புற கல்வியில் தரம் குறைந்து விட்டது. கல்வி துறையின் தவறான அணுகுமுறையே இதற்குக் காரணம். நாடு முழுவதும் சமச்சீர் கல்வி வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும், படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காததால் தீவிரவாதம் அதிகரிக்கிறது. நேபாளத்தில் இருந்து கொடைக்கானல் வரை தீவிரவாதத்தை வளரவிட்டிருப்பது தான் ஆட்சியாளர்களின் சாதனை.

இடைவிடாத விலைவாசி ஏற்றம், தொடர்மின் வெட்டு. கேட்டால் மக்களுக்கு 2 ரூபாய் அரிசி கொடுத்தோம் என்கிறார்கள். அரிசியை வாங்கி கஞ்சி குடிக்கலாம். தொட்டு கொள்வதற்கு வெங்காயம் வாங்கனுமே. மிளகாய் வேனுமே. அதற்கு காசு வேனும். எல்லா பொருட்கள் விலையும் ஏறிப் போச்சு.

மக்களுக்கு இலவச டி.வி. கொடுப்பதை வரவேற்கிறேன். ஆனால் மாதம் ரூ. 100 கட்டி கேபிள் இணைப்பு பெற அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மீது அக்கறை இருந்தால் இலவச கேபிள் இணைப்பு கொடுத்திருக்க வேண்டும். கொடுக்க வேண்டும்.

கேபிள் டி.விக்கள், பாட்டு பிடித்திருந்தால் எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் எனக் கூறி பாட்டை போட்டு மக்களுக்கு பட்டை நாமத்தை போட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் நாள் தோறும் பல லட்சம் லாபம் பார்க்கின்றன. அப்படி இருக்கும்போது இலவசமாக கேபிள் இணைப்பு கொடுப்பதில் தப்பில்லை.

எனக்கு எப்போதுமே தெய்வம் தொண்டர்கள் தான். அதனால்தான் தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி என்று கூறி வருகிறேன். மக்களுக்காக அவர்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவேன். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன்.

மத்திய அரசில் தமிழகத்தில் இருந்து 12 மந்திரிகள் உள்ளனர். இவர்களால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்களுக்கான திட்டங்கள் பற்றி பேசுவதில்லை. தனது குடும்ப உறுப்பினர்களுக்காகத்தான் பேசுகின்றனர்.

நாளை நாமே நாற்பதும் நமதே என்ற கோஷத்துடன் டெல்லியில் கட்சி அலுவலகம் திறந்தோம். அங்கு பல்வேறு தேசிய கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி பற்றி பேசினேன். ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களுக்கு நன்மை செய்வோம் என எழுதி தந்தால் தே.மு.தி.க. கூட்டணி வைத்துக் கொள்ளும் என்றேன். அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை.

என்னடா விஜயகாந்த் கூட்டணி இல்லை என்கிறான். ஆனால் எழுதி தந்தால் கூட்டணி என்கிறான் என சிலர் கேட்டனர். நான் எனக்கு இத்தனை தொகுதி வேண்டும், இந்த மந்திரி பதவி வேண்டும் என்று எழுதி கேட்கவில்லை. மக்களுக்கு நன்மை வேண்டும் என்று தானே கேட்டேன். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தோன்றவில்லை என்றார் விஜய்காந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X