• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா: பரிதாபத்தில் இந்திய தொழிலாளர்கள்- தூதர் அலட்சியம்

By Staff
|

Ronen Sen
சென்னை: அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட இந்தியர்களுக்கு உதவ அந் நாட்டுக்கான இந்தியத் தூதர் முன் வரவில்லை. இதை மதிமுக பொதுச் செயலாளர் கடுமையாக கண்டித்துள்ளதோடு, இந்த விஷயத்தில் தலையிடுமாறு பிரதமருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில்,

மும்பையைச் சேர்ந்த திவான் கன்சல்டன்சி என்ற சட்டவிரோத பணியமர்த்தும் நிறுவனத்தால், இந்திய இளைஞர்கள் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனம், நிறைய சம்பளத்தோடு அனைத்து வசதிகளுடன், அமெரிக்காவில் நிரந்தர வேலை வாய்ப்பை பெற்று தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளுடன் விளம்பரம் செய்து சென்னையிலும் மற்ற நகரங்களிலும் 2006ம் ஆண்டு போலியான நேர்முகத் தேர்வையும் நடத்தி இருக்கிறது.

இந்த போலி நிறுவனத்தின் கட்டாயத்தின் பேரில் வேலை வாய்ப்புக்காக சுமார் 600 பேர் தலா ரூ.6 லட்சம் கொடுத்ததுடன், அவர்கள் நீட்டிய காகிதங்கள் அனைத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டு அங்கு நியூ ஆர்லியன்ஸ்சில் உள்ள சிக்னல் என்ற சர்வதேச நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள்.

ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மாறாக பேரதிர்ச்சி அடையும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கொடுமையான வேலை கொடுக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல், தங்கும் இட வசதிகள் எதுவுமின்றி ஆடு மாடுகளை அடைப்பது போல நீண்ட சரக்கு லாரிகளில் படுக்கைகளைப் போட்டு தங்க வைத்திருக்கின்றனர்.

ஒரு வழியாகச் சமாளித்து அந்த நிறுவனத்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பி உள்ளனர். பாதுகாப்பு கோரியும், நீதி வேண்டியும் அவர்கள் மே மாதம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வாஷிங்டன் வரை நடைப் பயணம் மேற்கொண்டனர்.

அவர்களில் 17 பேர் மே 14ம் தேதி வாஷிங்டனில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை முன் அமைதியான வழியில் உண்ணா நோன்புப் போராட்டம் மேற்கொண்டனர். 10 நாட்களுக்கு பிறகு இந்த உண்ணாவிரத நோன்பில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களின் உடல்நிலை மிகவும் மோசமானது.

மே 25ம் தேதி பட்டினிப் போராட்டக்காரர்களின் குழு ஒன்று, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ரோனனை சந்தித்து இந்திய அரசின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இந்திய தூதர் 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அவர்களது கோரிக்கை விண்ணப்பத்தை, அதுவரை தாம் பார்க்கவில்லை என்று போராட்டக்காரர்களிடம் தெரிவித்ததாக எனக்கு தெரிய வருகிறது.

இந்தியத் தூதரின் இது போன்ற செயல்பாடுகள், அவரது அலட்சியப் போக்கையும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நலன்களில் துளியும் அக்கறையில்லாத இரக்கமற்ற தன்மையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருந்து நீதிமன்றங்களில் தங்களுடைய வழக்குகள் தொடர்பாக வாதாடுவதற்கு உதவியாகவும், அந்த நிறுவனத்திடம் இருந்தும் அவர்களைப் பணியில் அமர்த்திய சட்ட விரோத கும்பலிடம் இருந்தும் போதிய ஈட்டுத் தொகையைப் பெறும் வகையிலும்,

தொழிலாளர்களை ஏமாற்றியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டியும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X