For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நட்புடன் பார்க்கும் தேசிய கட்சிகள்: விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவை மாநிலக் கட்சிகள்தான் குறை கூறுகின்றன. தேசிய கட்சிகள் அனைத்தும் நட்புடனேயே பார்க்கின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிகவின் 4ம் ஆண்டு துவக்க விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது இல்லத்தில் கட்சிக்கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாநில இளைஞர் அணிக்கான சின்னத்தை விஜயகாந்த் வெளியிட அதனை சுதீஷ் பெற்றுக் கொண்டார். இளைஞரணியின் புதிய பேனரை பண்ருட்டி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், இன்று கட்சியின் 4ம் ஆண்டு துவக்கம். இதை முன்னிட்டு அடுத்த மாதம் 18ந் தேதி சென்னை தீவுத்திடலில் தேமுதிகவின் 4ம் ஆண்டு துவக்க விழா, இளைஞரணி மாநில மாநாடு, அண்ணா நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெறுகிறது.

அன்று 100 ஆட்டோ டிரைவர்களுக்கு வட்டியில்லா கடனில் ஆட்டோ வழங்கப்படும். இதற்கு முன் பணமாக ரூ.30,000 செலுத்தினால் போதும். டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பெர்மிட் வைத்திருக்க வேண்டும்.

மாதந்தோறும் ரூ.3405 வீதம் 3 வருடத்தில் இந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்கு ஆகும் வட்டித் தொகையான ரூ.45,000ஐ செலுத்த வேண்டியதில்லை.

மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாங்கித்தர திட்டமிட்டுள்ளோம். இது உறுதியான வேலைவாய்ப்பு. போலியான வேலைவாய்ப்பு அல்ல.

தகுதி அடிப்படையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். படிப்புக்கு ஏற்ற தொழிலும், படிக்காதவர்கள் சுய தொழில் தொடங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இளைஞரணி மாநாடு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார துவக்கமா என்று கேட்கிறீர்கள். தேர்தல் பிரச்சார துவக்கம் என்பது வேறு. இளைஞரணி மாநாடு என்பது வேறு.

தேர்தல் கூட்டணி பற்றி பேச இருப்பதாக சில தலைவர்கள் கூறுகிறார்கள். சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பது பற்றி இப்போது சொல்லக் கூடாது. அது ரகசியம். நேரம் வரும்போது சொல்வேன். உங்களுக்கு தெரியாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்.

டெல்லியில் நேற்று குண்டு வெடிப்பு தாக்குதலில் பலர் பலியாயினர். நாட்டில் உளவுத்துறை என்ன செய்கிறது? தூங்கிக்கொண்டிருக்கிறதா? எதற்காக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்? இந்திராகாந்தி போல எமர்ஜென்சி கொண்டு வந்தால்தான் இந்த நாடு உருப்படும். உளவுத்துறை தானே கண்காணித்து முன்கூட்டியே தகவல் சொல்ல வேண்டும்? ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றுவதற்காக தானே உளவுத் துறையை பயன்படுத்துகிறார்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் பற்றாக்குறை இல்லை என்றும், இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார்.

நான் சொன்னதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லவில்லை. புதிய மின் உற்பத்தி செய்வதற்கான வழிவகைகளை பற்றி பேசாமல், காற்றாலை மூலம் மின் உற்பத்தி குறித்துதான் முன்பும், இப்போதும் பேசுகிறார்கள் என்று கூறினேன்.

இப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூட காற்றாலை மின் உற்பத்தியை நம்பித்தான் இருக்கிறோம் என்று சொல்கிறார். இவரும் புதிதாக மின் உற்பத்திக்கு என்ன செய்யப் போகிறார் என்று சொல்லவில்லை.

மேலும் தனியாரிடம் ஜெனரேட்டர் மூலம் மின் தயாரிப்பு குறித்து பேசுவதாக அமைச்சர் கூறுகிறார். ஏன் அதை இவர்களே செய்ய வேண்டியது தானே.

கிராமப் பெண்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் கிராம மக்களுக்கு கறவை மாடுகள் கொடுக்கப்படும் என்று கூறியிருந்ததற்கு அந்த மாட்டிற்கு மூக்கணாங்கயிறு யார் கொடுப்பது என்று முதலமைச்சர் கிண்டலடித்தார்.

ஆனால் அவர்தான் இப்போது கிராம மக்களுக்கு கறவை மாடு கொடுப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் முன்பு கோபப்பட்டார்கள். இப்போது வெறுப்பில் இருக்கிறார்கள். கவர்ச்சிகர திட்டங்களை அவர்கள் நம்ப மாட்டார்கள்.

தேர்தல் வரும்போது என் வியூகம் என்ன என்பதை கூறுகிறேன். தேமுதிகவில் தற்போது 55 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

யாரும் அரிசியை மட்டும் சாப்பிட்டுவிட முடியாது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்டதால் ஏழைகளுக்கு அதிகமாக குடும்ப செலவாகிறது. இதனை குறைக்க என்ன வழி என்றுதான் நான் கேட்கிறேன்.

கேப்டன் டிவி எப்போது தொடங்கும் எண்ணம் உள்ளது. திமுக ஆட்சியில் இருக்கும் வரை நாங்கள் டிவி தொடங்க முடியாது. வசந்தகுமாரின் வசந்த் டிவி, தங்கபாலுவின் மெகா டிவி ஆகியவை அவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதால் வந்துள்ளது.

விஜய டி.ராஜேந்தர் என்னை பற்றி குறை கூறி வருகிறார். நோ கமெண்ட்ஸ். நான் மக்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். காந்தி பிறந்த நாளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக வளர்ந்து வருவதால் அதனைக் கண்டு அச்சம் அடைந்து மாநில கட்சிகள் எங்களை குறை கூறுகின்றன. ஆனால் என்னுடைய கருத்துக்களில் உண்மை இருப்பதால் தேசிய கட்சிகள் தேமுதிகவை நட்புடன் பார்க்கின்றன.

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தேமுதிக தயாராக உள்ளது என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X