For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்க - விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மின் பற்றாக்குறை நிலவரம், அதைப் போக்க என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது, என்ன செய்தால் மின் பற்றாக்குறை போகும் என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மின் உற்பத்தித் திட்டங்கள் இருந்தால்தான் மின் தட்டுப்பாடு வராது. மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணம் முதல்வர் கருணாநிதியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தான்.

ஜெயலலிதாவின் 10 ஆண்டு ஆட்சியில் 83 மெகாவாட் மின் உற்பத்திக்கே அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் 560 மெகா வாட் மின் உற்பத்தி திட்டங் களுக்கே கருணாநிதி அனுமதி அளித்துள்ளார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

1991 முதல் இன்று வரை இருவரும் 643 மெகா வாட் மின்சார உற்பத்தி அளவுக்கே அனுமதி அளித்துள்ளனர். இந்த 17 ஆண்டுகளில் மின் தேவை 4,875 மெகாவாட்டிலிருந்து 9,567 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு இன்று இருண்ட காலத்தில் உள்ளது. மின் பற்றாக்குறை எவ்வளவு இதுவரை அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. 1000 மெகா வாட்டிலிருந்து 3,500 மெகா வாட் வரை பற்றாக்குறை என்று பத்திரிகையில் செய்திகள் வருகின்றன. ஒரு நாணயமான அரசு எவ்வளவு பற்றாக்குறை என்பதையாவது மக்களுக்கு அறிவிக்க வேண்டாமா?

மின்சார அமைச்சர் டெல்லிக்கு சென்றதன் பலன் என்ன? இதர மாநிலங் களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறதா? தனியார் ஆலைகளிடம் மின்சாரம் பெறப்போவதாக செய்திகள் வருகின்றனவே, அவை உண்மையா? மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? தனியாரிடம் இருந்தும், பிற நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் வாங்குவதால் மின்சார வாரியம் திவாலாகிவிடும் என்கிறார்களே அது உண்மையா?

ஒரு மனிதனுக்கு உடலில் ரத்தம் எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு ஒரு நாட்டிற்கு மின்சாரம் முக்கியம். இன்று மின்சார நெருக்கடி யால் தமிழ்நாட்டு மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கைத் தரம் படுகுழியில் விழுந்து விட்டது.

மக்களாட்சியில் மக்கள்தான் எஜமானர்கள். இன்றியமையாத தேவையான மின்சாரத்தில் எவ்வளவு பற்றாக்குறை என்பதையும், அவற்றை நிவர்த்தி செய்ய எத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு உள்ளது என்பதையும், எவ்வளவு காலத்தில் மின்சார நெருக்கடி தீரும் என்பதையும் அரசு வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X