அணு ஒப்பந்தம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வைரமுத்திரை - தங்கபாலு
சென்னை: சோனியா காந்தியின் ழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான மத்திய அரசின் நான்கரை ஆண்டுகால சரித்திரச் சாதனைகளின் பட்டியலில் இந்த அணுசக்தி ஒப்பந்தம் ஓர் வைர முத்திரையாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறியதன் மகிழ்ச்சியை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர். அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக நிறைவேறியுள்ளது இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்.
சோனியாவின் வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான மத்திய அரசின் கடந்த நான்கரை ஆண்டுகால சரித்திரச் சாதனைகளின் பட்டியலில் இந்த அணுசக்தி ஒப்பந்தம் ஓர் வைர முத்திரையாகும்.
அணு சோதனை தடுப்பு ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமலேயே இந்தியாவின் நம்பகத் தன்மையை மட்டுமே உறுதியாக எடுத்துக்கொண்டு அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்கா உட்பட 45 அணுசக்தி வழங்கும் நாடுகள் இந்தியாவிற்கு உதவியதன் மூலம் நிறைவேறியுள்ளது. இது உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் கிடைத்திராத பெருமை.
இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வரவேற்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் கூட்டத்தில் கலந்து கொள்வேன்.
ஒவ்வொரு கட்சியும் தனித் தனியாக போராட்டம் நடத்தி விளம்பரம் தேட முயற்சிக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
இலங்கைத் தமிழர்களுக்காக எங்கள் தலைவர் ராஜீவ்காந்தியையே நாங்கள் இழந்துள்ளோம். இன்றைக்கு இலங்கையில் தமிழினம் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்.
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யவில்லை. இலங்கைக்கு சீனா தான் ஆயுதங்களை வழங்கியுள்ளது. இலங்கைக்கு அருகே இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு உள்ளது. எதாவது விபரீதம் என்றால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாவது நம்நாடுதான்.
எனவே இந்தியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் காக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். அதனை மத்திய அரசு சரியாக செய்து வருகிறது.
இதுதொடர்பான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்றார் அவர்