For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம்

By Staff
Google Oneindia Tamil News

டோக்கியோ: பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் இந்தியா-ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாகநேற்று முன்தினம் புறப்பட்டார். டோக்கியோ நகரில் அந்நாட்டு பிரதமர் டாரோ அசோவை அவரது இல்லத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார்.

இருநாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது, தீவிரவாதம், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சர்வதேச அமைப்புகளில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இருதலைவர்களும் உறுதி செய்தனர். அப்போது, அவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கொள்கை ரீதியிலான ஒத்துழைப்பு, சர்வதேச பிரச்சினைகள், நீண்டகால உத்திகள், பாதுகாப்பு ஆலோசனைகள், கடலோர பாதுகாப்பில் ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான போர், பேரழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், வெளியுறவு செயலாளர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்தில் பேச்சுவார்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தை முடிந்ததும் மன்மோகனுக்கு ஜப்பான் பிரதமர் விருந்து அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது மன்மோகன் கூறியதாவது:

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் சர்வதேச அணுசக்தி கழகத்திலும், அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அமைப்பிலும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததற்காக ஜப்பானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிவில் அணுசக்தி துறையில் ஜப்பானுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தியா விரும்புகிறது என்றார்.

அப்போது, ஜப்பானுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளுமா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு நாங்கள் நிதானமாக முயற்சி மேற்கொள்வோம் என்றார்.

பின்னர் டாரோ அசோவிடம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு இருப்பதால் இந்தியாவுக்கு ஜப்பான் நிறுவனங்கள் அணு உலை சாதனங்கள் ஏற்றுமதி செய்ய ஊக்கம் அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இல்லை. மன்மோகன் சிங் எதிர்காலத்தை பற்றிதான் குறிப்பிட்டார். அணுகுண்டு சோதனை நடத்துவது இல்லை என்று தனக்கு தானே விதித்துள்ள கட்டுப்பாட்டை இந்தியா தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜப்பான் பிரதமர் டாரோ அசோவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் ஜனநாயகம், சமூக-மனித உரிமைகள் பாதுகாப்பு, சட்டத்தின் மாண்பை பாதுகாப்பது ஆகியவற்றில் இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து டோக்கியோவில் இந்திய-ஜப்பான் தொழிலதிபர்கள் சார்பில் மன்மோகனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. அப்போது மன்மோகன் பேசுகையில்,

புதிய இந்தியாவை உருவாக்குவதில் ஜப்பான் முதலீட்டை வரவேற்பதாகவும் அன்னிய நாடுகளுக்கு ஜப்பான் வழங்கும் அபிவிருத்தி உதவித் தொகையில் 30 சதவீதத்தை இந்தியா பெறுவதாகவும் கூறினார். உலகில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஜப்பான் முக்கிய கேந்திரமாக விளங்குகிறது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிறிதளவே பாதிக்கப்பட்டு உள்ளது. இந்திய வங்கிகளின் நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டில் இந்தியா ஏழரை முதல் 8 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்ட முடியும் என்றார்.

மன்மோகன்-மன்னர் சந்திப்பு:

ஜப்பான் மன்னர் அகிஹிடோ, ராணி மிச்சிகோ ஆகியோரை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார்.

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹிரோபுமி நகாசோன், பொருளாதார, வர்த்தக, தொழில் மந்திரி நிகாய் தோஷிஹிரோ ஆகியோரும் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X