For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஞ்சம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர் கைது

By Staff
Google Oneindia Tamil News

Inspector Ruskin
சென்னை: சென்னையில் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

குற்றப் பிரிவில் நிலமோசடி புகார் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரஸ்கின்.

சென்னை பெருங்குடியில் தனசேகர் என்பவர் தனது பல கோடி மதிப்புள்ள நிலத்தை ஒருவருக்கு விற்றார். அதே நிலத்தை அவரது மகன் குணசேகர் அண்ணா நகரை சேர்ந்த இன்னொருவருக்கு விலைக்கு விற்றார்.

இவ்வாறு தந்தையும் மகனும் சேர்ந்து இந்த நில மோசடியைச் செய்தனர். இது தொடர்பான புகாரை இன்ஸ்பெக்டர் ரஸ்கின் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் தந்தை- மகன் இருவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு ரூ.20 லட்சம் கேட்டுள்ளார் ரஸ்கின்.

இதுகுறித்து குணசேகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கூறியபடி ரூ.2 லட்சத்தை இன்று முன் பணமாக இன்ஸ்பெக்டர் ரஸ்கினிடம், குணசேகர் கொடுத்தார்.

ஆயிரம் விளக்கில் உள்ள அலுவலகத்தில் வைத்து இந்தப் பணம் தரப்பட்டபோது அங்கு அதிரடியாக புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் ரஸ்கினை கைது செய்தனர்.

ரஸ்கினுக்கு உடந்தையாக இருந்த ஏட்டு மோகனும் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்த இன்னொரு போலீஸ்காரர் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்தவுடன் தப்பியோடி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வருடமாக நில மோசடி பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்து வரும் ரஸ்கின் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி திருச்சியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமூல்-டிரைவரை உதைத்த எஸ்.ஐ:

இதற்கிடையே கரூர் அருகே உள்ள பரமத்தியில் மணல் லாரி சென்ற போது அதை தடுத்து லாரி டிரைவரிடம் மாமூல் கேட்டு எஸ்.ஐ மற்றும் காவலர்கள் சிலர் அடித்து உதைத்ததாக பரபரப்பு எழுந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் பாய்ந்து செல்லும் காவிரி ஆற்றில் பல இடங்களில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த மணல் குவாரியில் இருந்து லாரி மூலம் எடுத்துச் செல்லப்படும் மணல் ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கும் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் கரூரில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அந்த லாரியை பரமத்தியில், வழி மறித்த போக்குவரத்து எஸ்.ஐ, மற்றும் சில காவலர்கள் தங்களுக்கு மாமூல் கொடுக்குமாறு லாரி டிரைவர் மனோகரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் டிரைவர் மனோகரன் (44) மாமூல் தர மறுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த எஸ்.ஐ. மற்றும் காவலர்கள் ஆகியோர் இணைந்து லாரி டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அடித்து உதைத்து உள்ளனர்.

காயமடைந்த லாரி டிரைவர் மனோகரன் புதுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் லாரி டிரைவர் மனோரகனிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமூல் கேட்டு லாரி டிரைவர் மிரட்டிய எஸ்.ஐ. பெயரை வெளியிடாமல் போலீஸ் தரப்பில் ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X