For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக வெற்றி பெறும்-சர்வே கூறுவதாக ஜெ. தகவல்

By Sridhar L
Google Oneindia Tamil News

திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என சர்வே கணித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா.

அவர் பேசுகையில், பாலார், பெரியாறு, ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் மக்கள் நலனை புறக்கணித்து விட்டது திமுக அரசு. கச்சத்தீவிலும் மக்களைக் கைவிட்டு விட்டது திமுக அரசு.

திருமங்கலம் மக்கள் திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். ஜனநாயக கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது திமுக அரசு.

அனைத்து தேர்தல் கருத்துக் கணிப்புகளும் அதிமுகவே வெற்றி பெறும் என கணித்துள்ளன. இதை அறிந்து திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மு.க.அழகிரியை தேர்தல் பணிக்குழுத் தலைவராக நியமித்ததற்கு முக்கிய காரணமே, வாக்காளர்கள், ஓட்டுப் போட வரக் கூடாது, அவர்கள் அச்சமடைய வேண்டும் என்ற உள்நோக்கம்தான். அப்போதுதான் முறைகேடுகளில் ஈடுபட முடியும் என்பதால் அழகிரியை தேர்தல் பணிக் குழுத் தலைவராக நியமித்துள்ளனர்.

தேர்தல் நாளன்று மு.க.அழகிரியின் மூலம் படைபலம், பணபலம், அதிகார பலத்தை பயன்படுத்தியும், குண்டர்கள் மூலமும் அவர்களே வாக்குகளை பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

திமுக தோல்வி பயத்தில் அதிமுகவினரை தேர்தல் பணி செய்யவிடாமல் பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது.

திருமங்கலம் தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி என்ற நிலையில் இந்த தேர்தலை தள்ளிப் போட கருணாநிதி முயற்சி மேற்கொண்டார். இதற்காக மூத்த அமைச்சர்கள் மூலம் மத்திய அரசை கெஞ்சிப்பார்த்தார். தேர்தலை தள்ளிப் போடுவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. சூது, சதி செய்து வெற்றியை பறிக்க நினைக்கிறார்.

இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என சர்வே கணித்துள்ளது.

ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். அதிகாரிகளின் துணையுடன் ..

வாக்குப்பதிவு நாளன்று மிகப்பெரிய சதித்திட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி துணையுடன் சதித்திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

மொத்தமுள்ள 190 மின்னணு இயந்திரங்களில் 130 மின்னணு இயந்திரங்களை அவர்கள் விருப்பம் போல் தயாரித்து திமுகவுக்கு அதிக வாக்குகள் விழும்படி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதானால் மாற்று ஏற்பாட்டிற்காக கூடுதலாக இயந்திரம் கொண்டுசெல்லப்படும். முதலில் வைக்கப்பட்ட இயந்திரம் பழுதான தாகக் கூறி மாற்று இயந்திரத்தை வைப்பார்கள். அதில் மேற்கண்ட ஏற்பாடுகள் இருக்கும்.

எனவே வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு இயந்திரத்தின் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சதித்திட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம் என்றார் ஜெயலலிதா.

பின்னர் கரடிக்கல், கீழ உரப்பனூர், மேல உரப்பனூர், சித்தாலை, புங்கங்குளம், வாகைக்குளம், சின்ன வாகைக்குளம், காண்டை, பண்ணிக்குண்டு, சாத்தங்குடி ஆகிய இடங்களில் பேசினார்.

இன்று கூத்தியார் குண்டு, சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, வில்லூர், கள்ளிக்குடி, கே.வெள்ளாகுளம், மேலப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், நொச்சிக்குளம், மருதக்குடி, வேப்பங்குளம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்து பேசவுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேர்மையான அதிகாரி என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இது தேர்தல் கமிஷனுக்கும் தெரியும் என்றார்.

கூட்டணி கட்சியினருக்கு ஜெ நன்றி:

இதற்கிடையே அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அவரை திருமங்கலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் எம்பி மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஆகியோரும்,

இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் எஸ்.ஜெ.இனாயத்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலர் எம்.ஜி.தாவூது மியா கான், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இந்திய உழவர் உழைப்பளார் கட்சி மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்தனர்.

அப்போது, அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக அயராது தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X