For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டைக் கொலை: சிக்கினார் சங்கீதா-பரபரப்பு வாக்குமூலம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Police Commissioner Radhakrishnan with photo of Sangeetha
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் முதிய தம்பதியின் கொடூரக் கொலைக்கு காரண கர்த்தாவான சாகசப் பெண் சங்கீதா போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். போலீஸாரிடம் இரட்டைக் கொலைக்குத் திட்டமிட்டது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் உள்ள டெம்பிள் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த அனந்தகிருஷ்ணன் (59), அவரது மனைவி யமுனா (50) ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறி்த்து 7 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்ததுய

அனந்த கிருஷ்ணனின் செல்போனுக்கு, கடைசியாக சங்கீதா என்ற பெயரில் போன் வந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், சங்கீதாவின் நான்காவது கணவர் திணேஷ், அவரது நண்பர்கள் புகழேந்தி, செந்தில்நாதன் ஆகியோர் சிக்கினர்.

அனந்த கிருஷ்ணனின் சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடன் சங்கீதா சொல்லித்ததான், திணேஷும், அவரது நண்பர்களும் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சங்கீதா தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந் நிலையில் அரக்கோணத்தில் வைத்து போலீஸாரிடம் சங்கீதா பிடிபட்டார்.

சங்கீதா போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலம்:

எனக்கு வேலூர் மாவட்டம் சோளிங்கர் பூர்வீகம். அப்பா அழகர் தேசிகனுக்கு கண் பார்வை சரியாக தெரியாது. 2 அண்ணன்கள், மூத்த அண்ணன் ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் அவரது மனைவியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இளைய அண்ணன் திட்டாவுக்கு கை கால் செயல் இழந்து உடல் நலம் பாதிக்கப்பட்டார். இவர்கள் கோவிலில் பூஜை செய்து என்னை வளர்த்தனர். அர்ச்சனை தட்டில் விழும் எட்டனா, ஒத்த ரூபாய்தான் எங்களது வயிற்று பசியை போக்கியது.

நாட்டமில்லாத முதல் கணவர்...:

15 வயதிலேயே கண்ணன் என்ற 35 வயதுகாரருக்கு என்னை திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு இல்லறத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. இதனால் அவருடன் நரக வாழ்க்கை வாழ்ந்தேன். 8 ஆண்டுகளாக தவித்தேன். குழந்தை பாக்கியமும் இல்லை.

இந் நிலையில் ரயில்வே ஊழியர் ஜெகதீசன் (40) என்பவரை ரயில் பயணத்தில் சந்தித்தேன். அவர் மனைவியை பிரிந்து வாழ்வதாகத் தெரிவித்தார்.

ஜெகதீசனுடன் ஓடினேன்...:

எனக்கு கண்ணனுடன் வாழ்வதை விட இவருடன் வாழ்வதே மேல் என தோன்றியது. இதையடுத்து கணவருக்கு தெரியாமல் ஜெகதீசனுடன் ஓடி வந்து விட்டேன்.

அரக்கோணத்தில் குடித்தனம் நடத்தினேன். ஜெகதீசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அதனால் என்னுடன் சேர்ந்து இருப்பதைவிட மது பாட்டிலுடன் மயங்கி கிடக்கும் நேரம் தான் அதிகம். இதனால் எனக்கு சலிப்பு ஏற்பட்டது.

இந் நிலையில், எங்கள் வீட்டுக்கு 3 வீடு தள்ளி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவர் என்னுடன் பழகினார். இதை தவறாக நினைத்து ஜெகதீசன் ஆபாசமாக திட்டினார். நான் கர்ப்பமானேன். இதனால் அடிக்கடி சந்தேகப்பட்டு அடித்து உதைக்க ஆரம்பித்தார்.

கலைத்தேன் கர்ப்பத்தை...:

இதனால் அவருடன் வாழ்வது வீண் என முடிவு செய்தேன். இதனால் எனது கர்ப்பத்தை கலைத்து விட்டேன். ஒரு நாள் ஜெகதீசனுக்கு தெரியாமல் ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காஞ்சீபுரம் வந்து வீடு எடுத்து தங்கினேன். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

என் மீது பைத்தியம் கொண்ட உமா சங்கர்...:

அதே நிறுவனத்தில் வேலை பார்த்த உமாசங்கர் என்ற வாலிபர் என்னை காதலித்தார். நாங்கள் இருவரும், அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வந்தோம். இதனால் உமாசங்கர் என் மீது பைத்தியம் பிடித்தவர் போல் ஆகிவிட்டார்.

திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதால் வேறு வழியில்லாமல் 3வதாக உமா சங்கரை திருமணம் செய்ய வேண்டியதாகி விட்டது. சோளிங்கர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

அங்கு சாமி கும்பிட வந்த அனந்த கிருஷ்ணன், யமுனா தம்பதியினரிடம் தற்செயலாக ஆசீர்வாதம் வாங்கினோம். அவர்களிடம் எங்களுக்கு அப்பா, அம்மா இல்லை. இதனால் வயதில் பெரியவர்களான உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கினோம் என்றோம்.

இந்தப் பேச்சு, அவர்களை கவர்ந்தது. அவர்களும் எங்களுக்கு இதுவரை வாரிசு இல்லை. இதுபோன்ற பாக்கியம் கிடைக்காது என்று எண்ணினோம். ஆண்டவன் உங்கள் மூலம் எங்களது ஆசையை நிறைவேற்றி விட்டான் என பெருமையாக கூறினர்.

அப்போது முதல் அனந்த கிருஷ்ணனுடன் நெருங்கி பழகினேன். உமாசங்கரும், நானும் அவரது வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டோம். நான் ஐயங்கார் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அனந்தகிருஷ்ணனும், அவரது மனைவியும் என்னிடம் நெருங்கி பழகினர்.

அனந்தகிருஷ்ணன் பேச்சில் இருந்து அவருக்கு இசை மற்றும் யோகாவில் ஆர்வம் அதிகம் என தெரிந்து கொண்டேன். அவர் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்த அனைவரும் வெறுத்தாலும், நான் அவரது இசையை ரசிப்பது போல் காட்டிக்கொண்டேன். இதனால் அவரும் என் மீது அளவு கடந்த பாசம் வைத்தார். அடிக்கடி வந்து செல்வேன்.

அப்போது அவரது வீட்டில் ஏராளமான நகை, பணம் இருப்பதை தெரிந்து கொண்டேன். எப்படியாவது அதை கொள்ளையடிக்க திட்டமிட்டேன் அதற்கு சரியான நேரம் பார்த்து காத்திருந்தேன்.

இசை இம்சை-போலீஸ் பஞ்சாயத்து:

ஒருநாள் இவரது இசை இம்சை தாங்க முடியாமல் குடியிருப்பில் உள்ளவர் ஒருவர் தகராறு செய்தார். போலீஸ் வரை போய் அவரை எச்சரித்து அனுப்பினர்.

இதற்கிடையே நான் மற்ற ஆண் நண்பர்களுடன் பேசுவதை உமாசங்கர், சந்தேகத்துடன் பார்த்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் அவரை பிரிந்தேன்.

ஆட்டோ டிரைவர் மூலம் திணேஷ்...:

எனது நண்பர் ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருடன் அவரது வீட்டில் தங்கினேன். அவர் மூலமாக தினேஷ் அறிமுகமானார். அவரும் வழக்கம் போல் என்னுடைய அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினார். 6 மாதத்துக்கு முன்பு தினேசை பதிவு திருமணம் செய்து கொண்டேன்.

சிறுவயதில் இருந்தே வறுமையுடனும், ஏமாற்றத் துடனும் போராடி வாழ்க்கையை ஓட்டிய எனக்கு சொகுசு வாழ்க்கை வாழ ஆசை ஏற்பட்டது. எப்படியாவது அனந்தகிருஷ்ணன், யமுனா தம்பதிகளின் லட்சக்கணக்கான நகை, பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அதற்கு தினேசை பகடைக்காய் ஆக்க முடிவு செய்தேன்.

கொலைத் திட்டம் வகுத்தேன்...:

அதன்படி வாரிசு இல்லாத தம்பதியரை தினேஷ் மூலம் கொலை செய்ய திட்டம் வகுத்தேன். நான் கூறியபடியே தினேஷ் அவரது கூட்டாளிகள் புகழேந்தி, செந்தில்நாதன் ஆகியோருடன் அனந்தகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று இசை கற்பதற்காக வந்திருக்கிறோம் எனக்கூறி வீட்டிற்குள் நுழைந்தனர்.

தம்பதிகள் 2 பேரையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் எடுக்காமல் 20 பவுன் நகையையும், ரூ. 25,000 மட்டுமே எடுத்து வந்து விட்டனர். அங்கு திருடிய செல்போன்கள், எங்களை காட்டிக்கொடுத்து விட்டது. சொகுசு வாழ்க்கை ஆசை என்னை கொலைகாரி ஆக்கி விட்டது என்று கூறியுள்ளார் சங்கீதா.

சங்கீதாவை இன்று மாலை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

சாட்சிகள்...:

சைதாப்பேட்டை கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக கொலையாளிகள் வந்த காரின் டிரைவர் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்ததாக சங்கீதாவின் 3வது கணவர் உமா சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

3 பேருக்கு 15 நாள் காவல்:

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த திணேஷ், செந்தில்நாதன், புகழேந்தி ஆகியோரை தனிப்படை போலீசார் சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தர விட்டார். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் விடிய விடிய விசாரணை நடந்தது.

அனந்த கிருஷ்ணன் வீட்டிலிருந்து 70 முதல் 80 பவுன் நகை கொள்ளை போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை 9 சவரன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதி நகைகள் சங்கீதாவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிர்ச்சியில் சங்கீதா குடும்பம்...:

ஆச்சாரமான வைணவக் குடும்பம் சங்கீதாவுடையது. அவரது செயலைப் பத்திரிக்கைச் செய்திகளில் பார்த்து சங்கீதாவின் குடும்பத்தினர் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பணரீதியில் கஷ்டப்பட்டாலும் கூட மிக நேர்மையாக வாழ்ந்து வரும் குடும்பம் இது.

சங்கீதாவின் தந்தை கோயில் அர்ச்சகராக இருந்து வருகிறார். தங்களுடைய மகளின் படம் பத்திரிகையில் பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். போலீசார் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது அவர்கள் மேலும் அதிர்ந்து விட்டனர்.

சங்கீதாவின் செயலுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டாவது திருமணம் செய்த பிறகு சங்கீதாவிடம் இருந்த தொடர்பு அனைத்தையும் இந்தக் குடும்பம் துண்டித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X