For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகள் தமிழர்களின் ஒரே பிரதிநிதி அல்ல-ஜெ

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: விடுதலைப் புலிகள்தான் இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை நாங்கள் நம்பவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினரான மதிமுக, சிபிஐ, சிபிஎம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜெயலலிதா: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால், அவர்கள் அனைவருக்குமே எல்லாப் பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு.

இந்த உண்ணாவிரதம் கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம்.

கேள்வி: இலங்கை விஷயத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன? மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமா? கூடாதா?

ஜெயலலிதா: இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனையில் எந்த நாடும் தன்னிச்சையாக தலையிட முடியாது. இலங்கை பிரச்சனையைப் பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். கௌரவமான வாழ்வு அமைய வேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பது தான். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதை பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை நாங்கள் நம்பவில்லை.

கேள்வி: போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்களே?

ஜெயலலிதா: கருணாநிதியும் திருமாவளவனும் தொடர்ந்து போர் நிறுத்தம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: 1983ம் ஆண்டில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரித்தாரே?

ஜெயலலிதா: அப்போதிருந்த நிலை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு.

கேள்வி: ஈழத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டு வருகிறார்களே?

ஜெயலலிதா: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பிரச்சனையை மறைப்பதற்காகத்தான் இந்த நாடகமா?

ஜெயலலிதா: ஆமாம். நிச்சயமாக அதுதான் காரணம். சத்யம் என்கிற தனியார் நிறுவனத்தில் ரூ. 7,000 ரூபாய் மோசடிக்கே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. போலீசார் ஐபிசியின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் தலைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் அரசு பணம் எதையும் களவாடவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனியார் மீது வேகமாக நடவடிக்கை எடுத்தவர்கள் இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீதோ, அதற்கு உடந்தையானவர்கள் மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கேள்வி: சத்யம் நிறுவனத் தலைவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் மத்திய அமைச்சர் ராஜா ஒப்புக் கொள்ளவில்லையே?

ஜெயலலிதா: உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது?

கேள்வி: சத்யம் நிறுவன ஊழலில் அரசியல்வாதிகளும் உடந்தை என சொல்லப்படுகிறதே?

ஜெயலலிதா: யாராக இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் என்னுடைய கேள்வி என்பது தனியார் நிறுவனத்தின் ரூ. 7,000 கோடிக்கே நடவடிக்கை எடுத்த அரசு ஒரு லட்சம் கோடி அரசுப் பணம் முறைகேட்டின்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

கேள்வி: அதிமுக கூட்டணிக்கு பாமகவுக்கு அழைப்புண்டா?

ஜெயலலிதா: நிச்சயம் எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். போகப் போக அது உங்களுக்குத் தெரியும்

கேள்வி: பாஜக உங்கள் அணிக்கு வருமா?

ஜெயலலிதா: ஏற்கனவே இதற்கு பதிலளித்து விட்டேன். வீணாக என்னை வம்புக்கு இழுக்க முடியாது. என்னை யாரும் கோபப்படுத்த முடியாது.

கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வருமா? நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ஜெயலலிதா: நான் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.

கேள்வி: சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருமா?

ஜெயலலிதா: சட்டமன்றத்துக்கும் தேர்தல் எப்படியாவது வரும். வரவழைப்போம். எப்படியாவது அது வரும்வரை ஓயாது செயல்படுவோம். ஏனென்றால் நாடு விடுதலை அடைந்த பிறகு இந்த அளவுக்கு மிக மோசமான ஊழலாட்சி தமிழகத்தில் நடந்ததில்லை. வரலாறு காணாத ஊழல் ஆட்சியாக திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வரும் செயல்படவில்லை. கையாலாகாத்தனம், நிர்வாக திறமையின்மை தினமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம்... குடும்பம் என்றும் சொல்ல மாட்டேன். ஒரு வன்முறை கும்பல் தமிழகத்தையே வேட்டை காடாக்கி வருகிறது. நிர்வாகத்தில் துளியும் அக்கறை இல்லாமல் தமிழகத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த குடும்பத்தின் ஆட்சியை அகற்றி அழிவுப் பாதையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு என்ன வழியோ அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபடுவோம். திமுக ஆட்சியை அகற்றி நிச்சயம் எங்கள் இலக்கை அடைவோம் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X