For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொகுசு காரில் வலம் வந்த போலி நீதிபதி கைது

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சென்னையில் தான் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி எனக்கூறி சைரன் விளக்கு, தேசிய கொடி என சொகுசு காரில் வலம் வந்த ஆசாமி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சேத்துபேட்டை டி.வி.நாயுடு தெருவை சேர்ந்தவர் ஜெயனுல் ஆரிப். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பிளஸ் 2 படிக்கிறார். இரண்டாவது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். மகன் 9ம் வகுப்பு படிக்கிறான்.

55 வயதான இவர் கடந்த சில ஆண்டுக்களுக்கு முன் வரை சிங்கப்பூரில் வியாபாரம் செய்து வந்தார். அது நஷ்டமடைந்ததால் சென்னைக்கு வந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதுவும் சரியாக ஓடவில்லை. ஆனால் சொகுசு வாழ்கையில் பழகி போன ஆரிப்புக்கு அதை விட முடியவில்லை.

இதையடுத்து அவர் தான் கேரளாவில் நிர்வாக தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றதாக கூறி பொது இடங்களில் டி.என்.59-டி5785 என்ற குவாலிஸ் காரில் வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் சைரன் விளக்கு பொருத்தி வலம் வந்தார்.

அதில் வக்கீல்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கரையும் ஒட்டியுள்ளார். பின்னர் அதில் தேசிய கொடியையும் பறக்கவிட்டார்.

இந்நிலையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உண்மையிலேயே ஓய்வுபெற்ற நீதிபதியா என்று கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் கே.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், துணை கமிஷனர் சாரங்கன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜாமணி, இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸ் அவரது காரின் நம்பரை சரிபார்த்தபோது அப்படி ஒரு நம்பரில் கார் எதுவும் இல்லையென்றும் அது ஒரு மோட்டார் சைக்கிளின் நம்பர் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அங்கு அவர் லண்டன் சென்று இருப்பதாகவும், அவரை மொபைலில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மொபைலில் பேசிய போது அவர் தான் கேரளாவில் நிர்வாக தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளதாகவும், லண்டனில் இருந்து நாடு திரும்பியவுடன் நேரடியாக வந்து போலீசாரை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் அவர் உள்ளூரில் ஒழிந்திருப்பதாக கருதினர். அவரை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்டனர்.

இந்நிலையில் அவர் வீட்டிலேயே இருக்கும் தகவல் போலீசுக்கு தெரிய வர, அவரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய தேசியக்கொடியுடன் கூடிய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸாரிடம் போலி நீதிபதி கொடுத்த வாக்குமூலத்தில்,

நான் வக்கீலுக்கு படித்துள்ளேன். சிங்கப்பூரில் 12 ஆண்டுகள் வசித்தேன். அங்கு சட்டத்துக்கு புறம்பான சில தொழில்களில் ஈடுபட்டு வந்தேன். ஆரம்பத்தில் நல்ல வருமானம் வந்தது. சொகுசு வாழ்க்கை பழகி்ப் போனது.

திடீரென தொழில் நஷ்டம் அடைந்தது. ஆனால் சொகுசு வாழ்க்கையை என்னால் விடமுடியவில்லை. சென்னை வந்து எனது குடும்பத்தினரோடு தங்கினேன். சொகுசு வாழ்க்கையை தொடர்வது எப்படி? என யோசித்தேன்.

அப்போதுதான், ஓய்வுபெற்ற நீதிபதி போல் வேட ம்போட்டால் சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். அதை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தேன். நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று சொகுசு காரை வாங்கினேன்.

கடன் பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் காரின் நம்பரை மாற்றிவிட்டேன். ஏற்கனவே போலி முகவரி கொடுத்து கடன் வாங்கியதால் நிதி நிறுவனத்தினரால் என்னை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீதிபதி போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன். சமுதாயத்தில் நல்ல மரியாதை கிடைத்தது. போலீசார் கூட எனக்கு சல்யூட் அடித்தனர். வீண் பந்தாவுக்கு ஆசைப்பட்டு தவறு செய்துவிட்டேன் என்றார் ஆரிப்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X