For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸின் நடவடிக்கைகளை மக்களிடம் விளக்குவோம்: தங்கபாலு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் நேரில் விளக்கப் போகிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் நேற்று அவர் பேசுகையில், இலங்கையில் போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவி தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

இந்திய அரசின் முயற்சியால்தான் இலங்கையில் 48 மணி நேர போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதனைப் பயன்படுத்தி அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி இருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பியிருந்தால் இந்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்திருக்கும்.

ஆனால் மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, வெளியேறாமல் தடுத்து விட்டனர். தமிழர்களை புலிகள் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய அரசின் முயற்சியால்தான் தற்போது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என குரல் கொடுக்கின்றன. போர் நிறுத்தத்திற்காக மத்திய அரசு இதுபோன்ற பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆனால் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் சிலரால் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. இது முறியடிக்கப்பட வேண்டும்.

எனவேதான் இலங்கைப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதனால் கிடைத்த பலன்கள் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்குவதற்காக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல சமூக அமைப்புகள் இந்தப் பேரவையில் இடம்பெற்றுள்ளன.

பேரவையின் சார்பில் பிப்ரவரி 7-ம் தேதி சென்னையிலும், 8, 9 ஆகிய தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களிலும் விளக்கப் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

இது யாருக்கும் போட்டி அமைப்பு அல்ல. எங்கள் தரப்பு விளக்கத்தை மக்களிடம் அளிக்கவும், எங்கள் கொள்கைகளை பரப்பவுமே இந்தப் பேரவையை தொடங்கியுள்ளோம்.

இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என முதல்வர் கருணாநிதி கூறவில்லை. ஒருவேளை தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அவ்வாறு கூறினால், மத்திய அரசில் அவர்களும் இடம்பெற்றுள்ளனர். எனவே மத்திய அரசின் நடவடிக்கைகளில் அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

தாம்பரம் விமானப்படை தளத்தில் வெளிநாட்டு விமானப்படை வீரர்கள் பயிற்சி பெறுவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையிலேயே இலங்கை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. எனினும் அவர்கள் உடனடியாக தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இலங்கையில் அமைதி தீர்வு ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசால்தான் நிர்பந்திக்க முடியும். எனவே மத்திய, மாநில அரசுகளோடு அனைவரும் இணைந்து நின்றால்தான் நமது வலிமையைக் காட்ட முடியும். ஆனால் இங்குள்ள சிலர் தனித்தனியாக போராடுவதால் எந்தப் பயனும் ஏற்படாது.

வேலூரில் ஞானசேகரன் எம்.எல்.ஏ. அலுவலகம் மீது தாக்குதல், சென்னையில் காங்கிரஸ் வழக்கறிஞர் மீது தாக்குதல் ஆகியவை கண்டனத்துக்குரியவை. வன்முறையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அதனை சீர்குலைக்க சிலர் முயல்கின்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. புதன்கிழமை நடத்தப்பட்ட பந்த் போராட்டத்தை தமிழக மக்கள் அங்கீகரிக்காததே அதற்கு சிறந்த உதாரணம் என்றார் தங்கபாலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X