For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3வது அணி்யே தீர்மானிக்கும்...கருத்துக் கணிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Congress and BJP
டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் நாட்டின் மிகச் சிறந்த அரசியல் ஆய்வு நிபுணரான யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன.

இதன் முடிவுகளை ஐபிஎன் தொலைக்காட்சி இந்த வாரம் முழுவதும் வெளியிடவுள்ளது. நேற்று முதல் கட்ட முடிவுகளை இந்தத் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்டார்.

இதில் வரும் தேர்தலில் முக்கியப் பிரச்சனை எது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு 32 சதவீத மக்கள் மக்கள் பொருளாதார நிலைமை, பணவீக்கத்தையே சுட்டிக் காட்டியுள்ளனர்.

21 சதவீத மக்கள் தேசிய பாதுகாப்பு, தீவிரவாதத்தையும், 18 சதவீத மக்கள் வேலைவாய்ப்பின்மையையும், 5 சதவீத மக்கள் இட ஒதுக்கீட்டையும், அமெரிக்க-இந்திய அணு ஒப்பந்தத்தை 2 சதவீத மக்களும் முக்கிய பிரச்சனையாகக் கூறியுள்ளனர்.

தேர்தலை தீர்மானிக்கும் முக்கியமான பிரச்சனை இந்துத்துவா தான் வெறும் 1 சதவீத மக்களே கருத்துத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வரும் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருக்கப் போவது மக்களின் அடிப்படை பிரச்சனையான பொருளாதாரமே என்று தெரியவந்துள்ளது.

மீண்டும் ராமர் கோவில் கட்டுவோம் என்ற பாஜக மீண்டும் கிளப்பி வரும் இந்துத்துவா கோஷம் அதன் முக்கியத்துவத்தை சுத்தமாக இழந்துவிட்டதை அறிய முடிகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது விலைவாசி அதிகரித்துவிட்டதாக 44 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே போல கிராம வாக்காளர்களை மனதில் வைத்து காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் யாரால் அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்தத் திட்டத்தை மாநில அரசு நடத்துவதாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த இந்தத் திட்டம் ஒன்றையே பிரதானமாக வைத்து தேர்தலில் வென்று விடலாம் என்ற காங்கிரசின் கனவில் மண்ணை அள்ளிப் போடும் விதத்தில் இதை மாநில அரசு நடத்துவதாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் தான் செய்த நல்ல செயலைக் கூட மக்களிடம் காங்கிரஸ் ஒழுங்காக பிரச்சாரம் செய்யவில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆக, இந்தத் திட்டம் காங்கிரசுக்கு எந்த அளவுக்கு வாக்குகளாக மாறும் என்பது சந்தேகமே.

அதே போல தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு சரியாக செயல்பட்டு வருவதாக 26 சதவீதம் பேரும் சரியாக செயல்படவில்லை என்று 22 சதவீதத்தினரும் கருத்துத் தெரிவித்து ள்ளனர். மும்பை தாக்குதலா.. 'அப்படின்னா என்ன?' என்று 28 சதவீதம் பேர் பதிலுக்கு கேள்வி கேட்டு அதிர்ச்சியைத் தந்துள்ளனர். இந்தத் தாக்குதலை நாட்டின் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒரு வாரம் முழுவதும் 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பியும் கூட அந்த விவரம் கிராமப் பகுதிகளில் போய்ச் சேரவே இல்லை.

(இதன்மூலம் நமது டிவிக்களின் ரீச் என்ன என்பதும் தெளியாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வட்டம் கொண்ட வெறும் நகர்ப்புற மக்களைத் தான் இவை அடைகின்றன. பெரும்பாலான கிராமப் பகுதி மக்கள் செய்திகள் குறித்து கவலையே படுவதில்லை போலும் அல்லது சினிமா, சிரி சிரி, நடந்தது என்ன, நீயா நானா போன்ற உலகின் 'மிக முக்கியமான' விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள் போலும்)

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூறியவர்களில் 47 சதவீதம் பேர் மட்டுமே காங்கிரசுக்கு மீண்டும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். 28 சதவீதம் பேர் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

இது பாஜகவுக்கு பெரும் சறுக்கலாகக் கருதப்படுகிறது. மேலும் தீவிரவாதத் தாக்குதல் குறித்து 30 சதவீதம் பேருக்கு விஷயமே தெரியாத நிலையில், இதை ஒரு பிரச்சனையாக்கி வாக்குகளை 'அப்படியே சாப்பிடலாம்' என்ற பாஜகவின் கனவும் பெரிய அளவில் ஒர்க் ஆவுட் ஆகாது என்றெ தெரிகிறது.

ஒட்டுமொத்தத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசால் மகிழ்ச்சியடைகிறீர்களா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர். இதை நம்பி காங்கிரஸ் மகிழ்ந்தால் அது நல்லதல்ல.

காரணம், கடந்த 2004ம் தேர்தலின்போது ஆட்சியிலிருந்த பாஜக கூட்டணி அரசு குறித்து இதே கேள்வியை இதே கருத்துக் கணிப்பு அமைப்பு கேள்வி கேட்டபோது 57 சதவீதம் பேர் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று தான் பதிலளித்தனர். ஆனால், அடுத்து வந்த தேர்தலில் பாஜக டன் கணக்கில் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.

மேலும் மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் ஆம் என்றும் 30 சதவீதம் பேர் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இங்கும் காங்கிரஸ் மகிழ ஏதுமில்லை. காரணம், 2004ம் ஆண்டில் 45 சதவீதம் பேர் பாஜகவுக்குத் தான் வாக்களிப்போம் என்று கருத்து கூறிவிட்டு கவிழ்த்துவிட்டனர்.

மொத்தத்தில் இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரசுக்கு பெரிய அளவில் இழப்போ அல்லது பாஜகவுக்கு பெரிய அளவில் சாதகமான அம்சங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இரு தரப்புமே கிட்டத்தட்ட சரி சமமான நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

இந்த கருத்துக் கணிப்பு குறித்த விவாதத்தில் பங்கேற்ற த இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் கூறியதைப் போல, அடுத்த தேர்தலில் மூன்றாவது அணி தான் யார் ஆட்சியில் இருக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கப் போகிறது...

இந்த வாரம் முழுவதும் தினமும் இரவு 10 மணிக்கு இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை ஐபிஎன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X