For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலே பாமக: ஒரே நேரத்தில் திமுக-அதிமுகவுடன் பேரம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: பாமக பலே பேரத்தில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் விரும்பும் ஏழு தொகுதிகளைக் கொடுப்பதாக சொல்லுங்கள். உடனே கூட்டணிக்குத் தயார் என ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் இரு பெரும் கட்சிகளும் அதற்கு உடன்படாமல் இருப்பதால் கூட்டணி ஏற்படுவது இழுபறியாக உள்ளதாம்.

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியல் தலைவர்கள் எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளலாம், பேசிக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் என்று வந்து விட்டால் இவை அத்தனையும் மறந்து போய், பவர், பலம், பலன் இவைதான் முக்கியமாக கருதப்படுகிறது. இவற்றின் அடிப்படையில்தான் கூட்டணிகள் உருவாகின்றன.

முன்பு பேசியவை எல்லாம் தற்காலிகமாக மூளையிலிருந்து மறந்து போய் விடும். இதை அப்படியே நிரூபிக்கிறது தற்போதைய சூழ்நிலைகள்.

பாமக யாருடன் சேரப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் உள்ளது. ஆனால், யார் நாங்கள் விரும்புவதைக் கொடுத்தாலும் சேரத் தயார் என்ற நிலையில் இருக்கிறது பாமக.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பாமக பேரம் பேசிக் கொண்டிருக்கிறதாம். இரு கட்சிகளிடமும் பத்து தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாமக கொடுத்துள்ளது. அதில் ஏழு தொகுதிகள் எங்களுக்குத் தேவை. அதில் புதுச்சேரி கட்டாயம். மற்ற 6 தொகுதிகளைத் தேர்வு செய்து தருகிறோம் என உறுதியாக கூறுங்கள், கூட்டணிக்கு நாங்கள் தயார் என்று பாமக கூறியுள்ளதாம்.

பாமக கொடுத்துள்ள அந்த பத்து தொகுதிகள் இவைதான்...

விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், ஆரணி, சேலம், தர்மபுரி, வேலூர், அரக்கோணம், மயிலாடுதுறை, புதுச்சேரி.

இவற்றில் ஏழு தொகுதிகளை ஒதுக்குவதில் திமுக, அதிமுகவுக்கு தயக்கம். காரணம், சில தொகுதிகளை தற்போது கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் கேட்டிருப்பதும், சிலவற்றில் தாங்களே போட்டியிட விருப்பதாலும்.

குறிப்பாக புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட உறுதியாக உள்ளது. ஆனால் அதை கண்டிப்பாக கொடுத்த ஆக வேண்டும் என பாமக கோருகிறது. அதேபோல மயிலாடுதுறை தொகுதியும் காங்கிரஸ் தராது. காரணம், அது மணிசங்கர அய்யர் தொகுதி.

மேலும் காங்கிரஸ் தரப்பில் இந்த முறை வன்னியர்களுக்கு அதிக சீட் தரும் வகையில் வட மாவட்டங்களில் அதிக தொகுதிகளைக் கேட்கிறார்கள். வேலூர், அரக்கோணம், தர்மபுரி உள்ளிட்டவை அவர்களது பட்டியலில் இருக்கிறதாம்.

இதனாலும், பாமகவுக்கு கேட்கிற தொகுதிகளைக் கொடுக்க முடியாத நிலை திமுகவுக்கு.

அதிமுக ஓ.கே.?:

அதேசமயம், பாமகவுக்கு ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்சென்னை, சிதம்பரம், புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் அளிக்க அதிமுக ஒப்புக் கொண்டுள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது.

இப்படி, கொள்கைகளை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு தொகுதிகளை பட்டியலிட்டு, திமுக,அதிமுகவுக்கு 'சிசி' போட்டுக் கொடுத்து விட்டு பாமக ஹாயாக உட்கார்ந்திருக்கிறது. யார் தொகுதிகளைக் கொடுத்தாலும் அந்தக் கூட்டணியில பாமக சேரும் எனத் தெரிகிறது.

அதேசமயம், தேமுதிக தரப்போ வேறு மார்க்கத்தில் போய்க் கொண்டிருக்கிறதாம். தேமுதிக நிச்சயம் திமுக கூட்டணியில் சேராது என காங்கிரஸ் தரப்பி்ல தற்போது கூறத் தொடங்கியுள்ளனர்.

காரணம், தேமுதிகவே கூட்டணியில் சேர விருப்பமில்லை என்று கூறி வருகிறதாம். பிறகு ஏன் சுதீஷும், பண்ருட்டி ராமச்சந்திரனும் டெல்லிக்குப் போய் காங்கிரஸுடன் பேசினார்கள் என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் பாமகவும், தேமுதிகவும் நிலையில்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பதால், திமுக, அதிமுகவால் கூட்டணிகளை இறுதி செய்ய முடியவில்லை என்பதே லேட்டஸ்ட் செய்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X