For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'கோடிகள் பேரம்'-விஜயகாந்த் மீது புகார் வந்தால் நடவடிக்கை: ஆணையம்

By Staff
Google Oneindia Tamil News

Vijaykanth
டெல்லி: கூட்டணி சேர தன்னிடம் சில கட்சிகள் பல கோடி பணத்தை காட்டி பேரம் பேசியதாக கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது யாரேனும் புகார் கொடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கூட்டணியில் சேர பல கோடி பணத்தையும், சில சீட்களையும் காட்டி சில கட்சிகள் தன்னிடம் பேரம் பேசியதாக சமீபத்தில் பிரசாரத்தின்போது விஜயகாந்த் கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சு அவருக்கே சிக்கலை ஏற்படுத்தும் போலத் தெரிகிறது. இந்தப் பேச்சு குறித்து எந்தக் கட்சியேனும் புகார் கொடுத்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் துணை தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணியில் சேருவதற்கு பல கோடி ரூபாய் மற்றும் அதிக தொகுதிகள் ஒதுக்குவதாகவும் சில கட்சிகள் பேரம் பேசியதாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்து அரசியல் கட்சிகள் புகார் செய்தால் பரிசீலிக்கப்படும்.

பாராளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனத்துடன் தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளிலும் பதற்றமான பகுதிகள் எவை என்பதை கண்டறியும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் இந்த முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை பதற்றம் நிறைந்த பகுதிகளை கண்டறிவதற்காக 3 கட்டங்களாக இந்த ஆய்வு நடைபெறும். முதல் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான தொகுதிகளில் முதல் கட்ட ஆய்வு பணி ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.

அத்துடன் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கும்படியும், மாநில தலைநகர் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனுடன் அவற்றை இணைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார் அவர்.

மாபா பாண்டியராஜன் மீது வழக்கு

இதற்கிடையே, வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கியதாக விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாபா பாண்டியராஜன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதிக்கான தே.மு.தி.க. வேட்பாளரும், தே.மு.தி.க. உயர்மட்ட பார்வையாளருமான மாபா பாண்டியராஜனின் தொண்டு நிறுவனமான சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் 22.3.09 அன்று அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சில மகளிருக்கு பண உதவி வழங்கப்பட்டுள்ளது.

4 மகளிருக்கு இலவச கிரைண்டர், 3 பெண்களுக்கு தையல் இயந்திரம், ஒரு பெண்ணுக்கு இட்லி கொப்பரை, ஒருவருக்கு இஸ்திரி பெட்டியும், 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி போன்றவற்றை பாண்டியராஜன் வழங்கியுள்ளார்.

மார்ச் 2-ந் தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தே.மு.தி.க.வின் முக்கிய தலைவரும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாபா பாண்டியராஜன் தேர்தலை மையமாக கொண்டு இலவசமாக பல பொருட்களை வழங்கியுள்ளார். இது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.

இதன் அடிப்படையில், அருப்புக்கோட்டை தாசில்தார் அருப்புக்கோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மாபா பாண்டியராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சிவகாசி விளாம்பட்டி சாலையில் எக்ஸ்னோரா அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனை சுற்றி போடப்பட்ட கம்பி வேலியை தன்னார்வ அமைப்பிற்கு இலவசமாக வழங்கி, அதில் அமைப்பு மாபா பாண்டியராஜன் என பெயர் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் மாபா பாண்டியராஜனின் பெயர் இதில் இடம் பெறுவது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகும். இந்த பெயர் பொறித்த கம்பி வேலிகளை உடனே அகற்ற கோரி நெடுஞ்சாலை துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதையும் மீறி அகற்றவில்லையெனில் சம்பந்தப்பட்ட துறை மூலமாக அகற்றப்படுவதுடன், அதற்குண்டாகும் செலவுத் தொகை வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X