For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்புமணி நீடித்தது என்ன கணக்கு?-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்து விட்டது என்று கூறும் டாக்டர் ராமதாஸ், அது உண்மையானால், ஏன் அன்புமணி ராமதாஸை மட்டும் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க வைத்தார் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:

கேள்வி: டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், உருவப்பொம்மை எரிப்பு சம்பவத்தின் போது இல்லாத அவரது கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பாலு மீது; ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் வழக்கு போட்டு கைது செய்ய முற்பட்டிருப்பதாகவும், அந்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், அந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற ஒரே வரியுடன் நான் இதற்கான பதிலை முடித்து விடலாம். வழக்கறிஞர் பாலு யார் என்பது பற்றியோ, அவர் மீது வழக்கு போடப்பட்டிருப்பது பற்றியோ இதுவரை எனக்கு தெரியாது.

உருவப்பொம்மையை யார் கொளுத்தினாலும் வழக்கு போடுவது என்பது காவல் துறையினரின் பொறுப்பு. இதற்கெல்லாம் முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டு செய்ய மாட்டார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த நடவடிக்கைகள் நடைபெறும்.

ராமதாசுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் டாக்டர் ராமதாஸ் ஒரு முறை கைது செய்யப்பட்ட போது ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில்

"ஒரு சில தலைவர்களுக்கு கூட்டம் போடத்தெரியும், ஊர்வலம் நடத்த தெரியும். தொண்டர்களை தூண்டிவிட்டு வன்முறையிலே ஈடுபடச்செய்து, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் தெரியும். ஆனால் காவல் துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டால், அவர்கள் பேசிய வசனங்கள் காற்றில் பறந்தோடி விடும். தொண்டர்களின் நினைவு மறந்துவிடும்.

சிறையின் அசவுகரியங்களை சிறிது நேரம் கூட தாங்கிக்கொள்ள முடியாமல், எப்படியாவது வெளியே வந்து விட தோன்றும். அதற்கு தயாராக இடுப்பு வலி, தலைவலி, திருகு வலி, நெஞ்சு வலி என்று இதுவரையில்லாத வலிகள் எல்லாம் திடீரென முளைத்துவிடும். டாக்டர் ராமதாசை கைது செய்து ரிமாண்டு செய்யும்பொழுது, அதை எப்படியும் தடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் திடீரென இடுப்பு வலி, நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.

அங்கு மருத்துவ பரிசோதனையிலே அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்பு காவலர்கள் அவரை ரிமாண்டு செய்ய முற்பட்டவுடன் வேறுவழியின்றி சிறையில் உள்ள அசவுகரியங்களை பொறுத்துக்கொள்ள முடியாமலும், பழகிப்போன சுகங்களை விட்டுக்கொடுக்க முடியாமலும் தன்னை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி தனது மனைவி மூலமாக எனக்கு ஒரு வேண்டுகோள் அனுப்பியிருக்கிறார்.

டாக்டர் ராமதாசின் மனைவி எனக்கு அளித்துள்ள வேண்டுகோளையேற்று, ஒரு பெண்மணியின் துயரை இன்னொரு பெண்மணியால் தான் புரிந்து கொள்ள முடியும் என்பதால் டாக்டர் ராமதாசை உடனடியாக வேலூர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளேன்''

டாக்டர் ராமதாசின் தற்போதைய அறிக்கைக்கு ஜெயா போல் பதில் கொடுக்க நான் விரும்பவில்லை. விரும்பமாட்டேன். ஆனால் அவருடைய கட்சியை சேர்ந்த பாலு என்பவர் மீது வழக்கு போட நான் கூறவே இல்லை என்பதுதான் உண்மை.

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழினத்தை அழிக்க கருணாநிதி எந்த அளவுக்கு துரோகம் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு துரோகம் செய்துள்ளார். இந்த துரோகத்திற்கு முதன்மை காரணம் காங்கிரஸ் அரசுதான். அதற்கு துணை போவது கருணாநிதி. கருணாநிதியின் வீரவசனம் உலகத் தமிழரிடம் இனி செல்லாது. தமிழின தலைவர் பட்டம் கொடுத்த உலக தமிழர்கள், இனி தமிழின துரோகி என்று சொல்லும் நிலையாக மாறியுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் பேட்டியில் சொல்லியிருக்கிறாரே?

பதில்: துரோகத்திற்கு முதல் காரணம் காங்கிரஸ் என்று சொல்கிறார். அப்படியென்றால் கடந்த நான்கரை ஆண்டு காலத்திற்கு மேலாக அந்த காங்கிரஸ் கட்சி பிரதான கட்சியாக இருந்து ஆட்சி செய்த மத்திய அரசில் இவருடைய புதல்வரை நீடிக்க அனுமதி அளித்தது ஏன்? அப்போதே அவரது புதல்வரை பதவியிலிருந்து ராஜினாமா செய்யச்சொல்லியிருந்தால், அவரை யோக்கியர் என்று நம்பலாம்.

இலங்கை தமிழர்களுக்கு துரோகி நானா? டாக்டர் ராமதாசா? என்பதை உலகத் தமிழர்கள் நன்கறிவார்கள். 1956ம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவன் நான். ராஜபக்சே தொடுத்துள்ள போரை ஆதரித்து, போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம் தான் என்றெல்லாம் கூறியவர் ஜெயலலிதா. அவருடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதிலிருந்தே உலகத் தமிழர்கள்-இலங்கை தமிழர் பிரச்சினையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்வார்கள்.

கேள்வி: ஆட்சியை மட்டுமே கருணாநிதி பெரிதாக நினைத்திருந்தார்; அதனால் இலங்கையில் தமிழின மக்கள் கொத்துக்கொத்தாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறாரே ராமதாஸ்?

பதில்: இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தது தி.மு.க. அப்படி ஆட்சி இழக்க காரணமாக இருந்தது அ.தி.மு.க. குறிப்பாக இரண்டாவது முறை ஆட்சியை இழக்க பிரதான காரணமே ஜெயலலிதா தான். ஆனால் மூன்றாவது முறையாகக்கூட, தி.மு.க. ஆட்சியை இழக்க முன் வந்தால், இலங்கையிலே போர் நிறுத்தம் நிச்சயமாக ஏற்படும் என்ற ஒரு உத்திரவாதமான நிலை கிடையாது. நாமும் ஆட்சியை இழந்து - இலங்கை தமிழர்களின் நிலையும் மாறாமல் இருந்தால் அதனால் என்ன பயன்? ஆனால் ராமதாஸ் போன்றவர்களுக்கு வேண்டுமானால் பயன் கிடைத்திருக்கலாம். அது கிடைக்காமல் போய் விட்டதே என்ற ஆத்திரத்தில் தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்.

கேள்வி: நீங்கள் காங்கிரசை விட்டு விலகி எந்தவித ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று அறிவிக்க வேண்டுமென்றும், அப்படி அறிவித்தால் இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழினத்துரோகி என்ற பட்டத்தை மாற்றி அமைக்க முடியுமென்றும் ராமதாஸ் கொடுத்துள்ள பேட்டி பற்றி?

பதில்: நேற்றையதினம் டாக்டர் ராமதாஸ் கொடுத்துள்ள ஒரு பேட்டியிலே கூட-தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றும்-காங்கிரசாரின் கனவான காமராஜர் ஆட்சி தமிழகத்திற்கு வரவேண்டுமென்றும் தான் விரும்புவதாக டாக்டர் ராமதாஸ் பேட்டி கொடுத்து விட்டு-இன்றைய பேட்டியில் என்னை காங்கிரசை விட்டு விலக வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அண்மைக்காலம் வரை டாக்டர் ராமதாஸ் தமிழகத்திலே காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியிலேதான் பா.ம.க. இருக்குமென்று சொன்னதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் நினைக்கிறாரா?

கேள்வி: விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று பொதுக்குழுவிற்கு பிறகு வைகோ அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறாரே?

பதில்: இந்த குரலை அவர் மட்டுமல்ல, அவருடைய கூட்டணியிலே உள்ள அ.தி.மு.க.வும், அதன் தலைமையும் சேர்ந்து குரல் கொடுப்பார்கள் என்று நாம் நம்புவோமாக! ஏனென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் இறந்து போன நேரத்தில் இரங்கல் கவிதை ஒன்று நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விடுத்தார்? இந்த ஆட்சியையே கலைக்க வேண்டுமென்றார். இப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக உள்ள வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் போன்றவர்களின் குரல் பற்றி ஜெயா என்ன சொல்லப் போகிறார்?

கேள்வி: அ.தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு திருப்திகரமாக இருந்தது என்றும், தாங்கள் எதிர்பார்த்த தொகுதி கிடைத்தது என்றும் வைகோ சொல்லியிருக்கிறாரே?

பதில்: உண்மை! உண்மை! நம்புங்கள்! நம்புங்கள்!

கேள்வி: மத்திய அமைச்சரவை கூட்டங்களில் இலங்கை பிரச்சினை குறித்து எத்தனை முறை விவாதிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ராமதாஸ் கேள்விக்கணை தொடுத்துள்ளாரே?

பதில்: மத்திய அமைச்சரவையில் ப.சிதம்பரமும் அமைச்சர்-ராமதாசின் மகன் அன்புமணி ராமதாசும் அமைச்சர். இலங்கை பிரச்சினை குறித்து மத்திய அமைச்சரவையில் எத்தனை முறை விவாதிக்கப்பட்டது என்ற கேள்வியை ப.சிதம்பரத்திடம் கேட்பது போலவே அன்புமணியிடமே ராமதாஸ் கேட்டிருக்கலாமே?

அவர் எத்தனை முறை இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து அமைச்சரவையிலே கேள்வி எழுப்பியிருக்கிறார்? இலங்கை தமிழர் பிரச்சினை காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.விற்கும் மட்டுமே உரிய பிரச்சினையா? பா.ம.க.விற்கும் உடன்பட்ட பிரச்சினைதானே? அவர்கள் கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் அந்த பிரச்சினையை அவர்கள் ஏன் எழுப்பவில்லை? அந்த யோசனையை டாக்டர் ராமதாஸ் தன் புதல்வருக்கு ஏன் சொல்லி அனுப்பவில்லை என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X